புலம்பெயர்ந்த தமிழர்கள் அவர்கள் வாழும் அன்னிய நாடுகளின் பாராளுமன்ற வதக் கட்சி அரசியலில் ஈடுபடுவது புதிதான ஒன்றல்ல. உலகம் முழுவதுமுள்ள பல்வேறு போராட்ட அமைப்புக்களின் புலம்பெயர்ந்த அரசியல் செயற்பாட்டாளர்களைப் புலம்பெயர்ந்த நாடுகளில் காண்கிறோம். இன்று உலகில் வெற்றிகரமாக வழிநடத்தப்படும் குர்திஸ் மக்களின் போராட்டம், பிலிப்பைன்ஸ் மக்களின் போராட்டம் போன்ற பல்வேறு அமைப்புக்களின் புலம்பெயர் மக்கள் கூறுகளைக் காணலாம். இவற்றில் ஈழத் தமிழர்களது தலைமை சற்று வேறுபட்டது. பின் தங்கிய சிந்தனையைக் கொண்ட இவர்கள் தமது பாராளுமன்றக் கட்சி அரசியலுக்காக மக்களின் தியாகங்களையும் இழப்புகளையும் ஆதரமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். தமது பிழைப்புக்கான கருவிகளாக ஈழப் போராட்டத்தின் எச்ச சொச்சங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் இக்குழுக்கள் இரண்டு பிரதான தந்திரோபாயங்களை கையாள்கிறார்கள்.
1. தாம் வாழும் நாடுகள் போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்கப் போகின்றன எனவும் சுய நிர்ணைய உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவானவை எனவும் புலம்பெயர் மற்றும் ஈழ மக்கள் மத்தியில் போலிப் பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்கள்.
2. தமது நாடுகளிலுள்ள கட்சிகளிடம் புலம்பெயர் தமிழர்களின் வாக்குகளைப் பெற்றுத் தருவதான ஒரு விம்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.
இவற்றினூடாக பல்வேறு சுய இலாபத்தைப் பெற்றுக்கொள்ளும் குழுக்களதும் தனி நபர்களதும் அரசியல் சார்பு நிலை என்பது இன்று ஏற்பட்டுவரும் மாற்றங்கள் ஊடாக வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்துள்ளது.
இன்றைய தொழிற்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஜெரமி கோர்பின் தன்னை மார்க்சிஸ்ட் என அறிவித்துக்கொண்டாலும், பாசிச அரசியலை நோக்கி மாறிவரும் ஐரோப்பிய முதலாளித்துவ ஜனநாயகத்தை மறுசீரமைக்கும் அளவிற்காவது செயற்படுகின்றார் என்பது பிரித்தானிய மக்களின் நம்பிக்கை. ஜெரமி கோர்பினுக்கு எதிராக பொதுவாக அனைத்து ஊடகங்களும் அவதூறுப் பிரச்சாரங்களையும் தாக்குதல்களையும் முன்னெடுத்து வருகின்றன. பிரித்தானியாவின் முழு அரசியல் அமைப்பும் கோர்பின் மீதான தாக்குதல்களை திட்டமிட்ட வகையில் நடத்தி வருகின்றன. இவை அனைத்தினதும் உச்சபட்ச வடிவமாக கடந்தவார பாராளுமன்றக் கூட்டத் தொடரில் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன் ஜெரமி கோர்பினை அவமானப்படுத்தும் அருவருப்பான சொற்களைப் பயன்படுத்தினார். அதனைத் தொடர்ந்து ஜெரமி கோர்பின் தலைமையிலான கட்சியில் ஆயிரக்கணக்கனவர்கள் இணைந்துகொண்டனர்.
ஜெரமி கோர்பின் இலங்கை மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் இடம்பெற்ற போர்க்குற்ற நடவடிக்கைகளுக்கான விசாரணை இலங்கை மற்றும் பிரித்தானிய அரசுகள் மீது நடத்தப்பட வேண்டும் என தொடர்சியாகக் கோரிக்கை முன்வைத்து வருகிறார்.
இவை போன்ற காரணங்களுக்காக தொழிற்கட்சியில் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. ஜெரமி கோர்பினை வெளியேற்ற பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்கள் முயன்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இடதுசாரி அரசியலுக்கு எதிரானவர்கள். அடிப்படை ஜனநாயக உரிமைகளை மறுப்பவர்கள்.
இந்த உட்பிரிவில் தொழிற்கட்சியிலுள்ள தமிழர்களின் பெரும்பாலானவர்கள் ஜெரமி கோர்பினுக்கு எதிரான முகாமில் இணைந்துள்ளது மட்டுமன்றி ஜெரமி கோர்பின் வெளியேற வேண்டும் என்ற பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர்.
குறிப்பாக தொழிற்கட்சிக்கான தமிழர்கள் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களில் பலர் இக் கருத்தை முன்வைத்து கோர்பினை வெளியேற வேண்டும் எனக் கோருகின்றனர்.
இலங்கையில் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என 90 களிலிருந்தே பிரித்தானிய மக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொள்ளும் கோர்பின், ஈழப் போராட்டம் நியாயமானது என்ற கருத்தையும் தெரிவித்துவருபவர்.
இன்று தொழிற்கட்சிக்கான தமிழர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களின் இந்த நிலைப்பாடு என்பது, அவர்களை வெளிப்படையாகவே சுய நிர்ணைய உரிமைக்கு எதிரானவர்கள் என்பதைக் காட்டி நிற்கின்றது. இதுவரை மக்களை ஏமாற்றிய இவர்களின் முகத்திரையை இப்போது விலக ஆரம்பித்துள்ளது.
அறுபது ஆண்டுகளிற்கு முன்பு இலங்கை தமிழ் மக்களை தமிழ் அரசு கட்சி தமிழ் காங்கிரஸ் என் பெயர் வைத்து ஏமாற்றியவர்களின் வாரிசுகளில் அனேகர் தான் புலம் பெயர் நாடுகளிலும் கட்சிகளில் தங்களின் பிரபல்யம் புகழ் பணம் இவற்றை காக்க ஈடுபடுகின்றார்கள். இன்னமும் நூறு வருடங்கள் போனாலும் இதே நிலைமைதான் .இவர்களிற்கும் இலங்கையில் வாழும் தமிழர்களிற்கும் சம்பந்தமே இல்லை. இவர்களால் சிங்கள இனவாத தீக்கு எண்ணை மட்டுமே ஊற்ற முடியும் .