சனநாயகம் = மக்கள் இறைமை = பாராளுமன்றம்; -1
(கோட்பாட்டிலும் நடைமுறையிலும்)
சட்டத்தரணி. எஸ்.மோகனராஜன் LL.B (Hons) (Colombo),
DIE (Colo), DAPS (U.K), LL.M in CJA (Reading) (OUSL)
தலைப்பை பார்த்தவுடன் இது கோட்பாடு ரீதியான வரைவிலக்கணத்தை ஆராயும் ஓர் கட்டுரை எனும் அனுமானத்திற்கு நீங்கள் வரவேண்டிய தேவையில்லை. இன்றைய அரசியலில் மேற்குறிப்பிட்ட சனநாயகம், மக்கள் இறைமை, பாராளுமன்றம் என்பன எவ்வாறு அர்த்தமுள்ளதாக, பிரயோக தன்மையுள்ளதாக அங்கிகாரமுள்ளதாக உள்ளது? என்பது பலரிடம் தோன்றியுள்ள கேள்வியாக உள்ள நிலையில் இலங்கை கடந்த காலங்களிலும் தற்போதும் சனநாயகத்திற்கும், மக்கள் இறைமைக்கும் மதிப்பளித்துள்ளதா? மதிப்பளிக்கப்படுகின்றதா? என்ற மிகப்பெரிய சந்தேகத்திற்கு விடை தேடும் முகமாக பாராளுமன்றம் நிதியியல் ரீதியாக எவ்வாறான கட்டுப்பாட்டை செலுத்துகிறது. இதில் மக்கள் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் போன்ற விடயங்களைப் பற்றி கலந்துரையாடும் நோக்கத்தோடு இக்கட்டுரையை எழுதவும் அது தொடர்பாக விவாதங்களை ஊக்குவிக்கவும் விரும்புகிறேன்.
‘…….அபரிமிதமான பெரும்பான்மையினால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்படி பிரதிநிதிகளில் வைத்த நம்பிக்கை மூலமும், மாற்றொணாத குடியரசுச் சித்தாந்தமான பிரதிநிதிமுறைச் சனநாயகத்தை ஒப்புறுதிப்படுத்துகின்றதும், எல்லா மக்களுக்கும் சுதந்திரம், சமத்துவம், நீதி, அடிப்படை மனித உரிமைகள் ஆகியவற்றையும், நீதித்துறைச் சுதந்திரத்தையும் இலங்கை மக்களின் வருங்கால சந்ததியினரதும், நீதியானதும் சுதந்திரமானதுமான சமூகம் ஒன்றை ஏற்படுத்தி பேணிகாக்கவென எடுக்கப்படும் முயற்சியில் அத்தகைய சந்ததியினரோடு ஒத்துழைத்து வரும் உலகத்து வேறெல்லா மக்களினதும் மாண்புக்கும் நல்வாழ்வுக்கும் உத்தரவாதமளிக்கின்ற புலங்கடந்த மரபுரிமையாக காப்புறுதி செய்கின்றதுமான ஒரு சனநாயக சோசலிசக் குடியரசாக இலங்கையை அமைத்துவிடப் பயபக்தியாகத் தீர்மானமெடுத்திருப்பதாலும்…’
இவ்வாறுதான் எமது அரசியலமைப்பின் பாயிரம் கூறுகிறது. ஓபாமா தனது பிரியாவிடை உரையில் (சிக்காக்கோ உரை) கூறிய விடயங்களை விட ஆழமான விடயங்களை எமது நாட்டின் பாயிரம் கொண்டுள்ளது. (எனினும் இது பற்றி யாரும் பேசுவதோ கண்டு கொள்வதோயில்லை என்பது வேறு விடயம்) குடியரசின் மீயுயர் சட்டமாகிய அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உள்ளதா? சனாதிபதிக்கு உள்ளதா? அமைச்சரவைக்கு உள்ளதா? போன்ற கேள்விகளுக்கு உயர்நீதிமன்றம் ‘பாராளுமன்றமே மீயுயர்ந்தது’ என பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான வழக்கில் கூறியுள்ளது. இது எந்தளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியது என்பது சந்தேகமே! அப்படியாயின் வலுவேறாக்கம், அரசியலமைப்பு சனநாயகம், அரசியலமைப்பு மீயுயர் தன்மை என்பன இலங்கையில் இல்லையா? எனும் கேள்வியும் எழும்.
அத்தியாயம் IV அரசக்கொள்கை வழிகாட்டல் கோட்பாடு பாராளுமன்றத்தினையும், சனாதிபதியையும், அமைச்சரவையும் வழிகாட்டுவதோடு அதில் அரசு சனநாயக சோசலிசச் சமூகம் ஒன்றை தாபிக்கும் குறிக்கோள்களை உள்ளடக்குவதாக கூறுகின்றது. அதில்:
(ஆ) தேசிய வாழ்வின் அமைவுகளெல்லாம், சமூக, பொருளாதார,அரசியல், நீதியால் வழிப்படுத்தப்படுவனவாக அமைந்த ஒரு சமூக ஒழுங்குமுறையைச் செவ்வையான முறையில் ஆக்கிப் பாதுகாப்பதன் மூலம் மக்களின் சேமநலனை மேம்படுத்தல்:
(இ) போதிய உணவு, உடை, வீட்டுவசதி, வாழ்க்கை நிலைமைகளில் தொடர்ச்சியான சீர்த்திருத்தம், ஓய்வு நேரத்தை முழுமையாகத் துய்த்தல், சமூக கலாசார வாய்ப்புக்கள் என்பன உட்பட, எல்லாப்பிரசைகளும் அவர்களது குடும்பத்தினரும் போதியதான வாழ்க்கைத் தரத்தை அனுபவித்தல்:
(ஈ) பகிரங்க பொருளாதார முயற்சியின் மூலமும், அத்தகைய பகிரங்க பொருளாதார முயற்சியையும் தனியார் பொருளாதார முயற்சியையும் சமூகக் குறிக்கோள்களுக்காகவும் பொதுமக்கள் நலனுக்காகவும் நெறிப்படுத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் உகந்ததாக இருக்கக்கூடிய அத்தகைய திட்டமிடலையும் கட்டுப்பாடுகளையும் விதித்துரைக்கின்ற சட்டங்களின் மூலமும் நாடு முழுவதையும் விரைவாக அபிவிருத்தி செய்தல்:
என்பன எம்மால் நோக்கப்பட வேண்டிய முக்கியமாக குறிக்கோள்களாக உள்ளன. அத்தோடு:
(5) இனக் கூட்டத்தினர் மதக் கூட்டத்தினர், மொழிக்கூட்டத்தினர் எப்போதும் வேறு கூட்டத்தினரும் உட்பட, இலங்கையிலுள்ள எல்லாப் பிரிவினரான மக்களிடையேயும் ஒத்துழைப்பையும் பரஸ்பர நம்பிக்கையும் வளர்ப்பதன் மூலமும் அரசானது தேசிய ஐக்கியத்தை பலப்படுத்தல் வேண்டும் என்பதுடன் ஓரங்காட்டுதலையும் பட்சபாதத்தையும் நீக்குவதற்கென போதித்தல், கல்விவூ10ட்டல், தகவலறிவிப்பு ஆகிய துறைகளில் பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும்.
(6) அரசானது பிரசை எவரும் இனம், மதம், மொழி, சாதி, பால் காரணமாக அல்லது அரசியல் அபிப்பிராயம் காரணமாக அல்லது முயற்சி காரணமாக ஏதேனும் தகுதியீனத்துக்குட்படாத வண்ணம் பிரசைகளுக்குச் சமவாய்ப்புக்களை உறுதிப்படுத்தல் வேண்டும்.
(7) அரசானது பொருளாதார சமூகச் சலுகையையும் ஏற்றத்தாழ்வுகளையும், மனிதன் மனிதனாக சுரண்டுதலையும் அல்லது அரசு மனிதனைச் சுரண்டுதலையும் ஒழித்தல் வேண்டும்.
(8) பொருளாதாரக் கட்டமைப்பின் செயற்பாடானது, செல்வமும், உற்பத்தி சாதனங்களும் பொதுமக்களால் பாதிக்கும் சிலரி;டம் குவியாமல் இருப்பதை அரசு உறுதிப்படுத்தல் வேண்டும்.
(13) பிள்ளைகளினதும் இளம் ஆட்களினதும் உடல் வளர்ச்சியை உளவளர்ச்சியை, ஒழுக்கவளர்ச்சியை, மதவளர்ச்சியை, சமூகவளர்ச்சியை, முழுமையாக விருத்திசெய்வதனை உறுதிப்படுத்துவதற்கும் சுரண்டலிலிருந்தும் ஓரங்கட்டப்படுவதிலிருந்தும் அவர்களைப் பாதுகாப்பதற்கும் என, அரசானது அவர்களின் நலன்களை விசேட கவனத்தோடு மேம்படுத்துதல் வேண்டும்.
எனவும் ஏற்பாடு செய்யப்படுள்ளது.
மக்களுக்கான மக்களாலான ஆட்சியில் மேற்குறிப்பிட்ட விடயங்களுடன் சேர்;த் துமக்கள் உரிமைகளும், அதிகாரமும் முக்கியத்துவம் பெறுகின்றன.
இலங்கை மக்களின் இறைமை பாரளுமன்றம், சனாதிபதி, நீதிமன்றம், மக்கள் தீர்ப்பு (தேர்தல்), அடிப்படைஉரிமைகள் எனும் 5 விடயங்களைகொண்டுள்ளது. என அரசியலமைப்பு கூறுகின்றது.
இலங்கையில் சனநாயக ஆட்சி முறைமை இடம் பெறுகின்றதா? மக்கள் இறைமை பேணப்படுகின்றதா? பாதுகாக்கப்படுகின்றதா? பாராளுமன்றம் சனநாயகத்தையும், அரசியலமைப்பையும், மக்கள் உரிமைகளையும் பேணுகின்றதா? எனும் கேள்விகளுக்கு பதில் தேடும் பட்சத்தில் அதற்கு அசாதாரணமான பதில் கிடைக்கும் என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை.
ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் எல்லாம் மக்களுக்கான ஆட்சியை நடாத்தியுள்ளதா? எனப்பார்க்கும் போது ஏகாதிபத்திய, காலனித்துவ அரசு இலங்கையின் முதலாளித்துவ சமுகத்திடம் ஆட்சியை கையளித்தப் ;பிறகு, அவர்களுக்கான ஆட்சியை தொடர்ந்ததோடு அதில் ஏற்பட்ட முரண்பாடுகளை இனரீதியாக பரப்பிவிட்டனர். அதன் போது சிங்களபேரினவாதமும், தமிழ் தேசியவாதமும் தலைவிரித்தாடத் தொடங்கி இலங்கையில் ஏனைய பிரச்சினைகளையும் தேவைகளையும் மூடி மறைத்துவிட்டன என்பதே மறைக்கமுடியாத உண்மை.
சிங்கள மக்களுக்கோ, தமிழ் மக்களுக்கோ ஆட்சி அதிகாரம் பற்றியோ, நிலம் பற்றியோ பிரச்சனை இருக்கவில்லை. மாறாக தமது வாழ்வாதாரத்திற்கு உழைப்பதும், வாழ்க்கைச் செலவை சமாளிப்பதற்காகவும் தமது பிள்ளைகளுக்கான சிறந்த சூழலையும் பாடசாலையையும் உருவாக்கவும், பெற்றுக்கொள்ளவும் தொழில், கல்வி, சுகாதார வசதிகளை பெற்றுக்கொள்ளவும விற்கப்படாமல் போராடவும், நாம் வாழும் காணியின் ஒப்பனையை பெற்றுக்கொள்ளவும் பிரத்தனம் கொண்டிருந்தனரே அல்;லாமல் வேற்று இனத்துடன் பகை, குரோதத்தினை வைத்திருக்கவில்லை. ஆனால் மக்களிடம் போதியளவிலான அறிவின்மையால் ஆட்சியாளர்கள் இவர்களை பயன்படுத்தி அரசியல் சுயநலன் தேடிக்கொண்டு மக்களையும் நாட்டினையும் பிரித்து காட்டிக்கொடுத்தனர். இவர்களின் இனவாத்திற்கான சுயநல அரசியல் இன்று எத்தனை உயிர்களை, உடைமைகளை இல்லாமலாக்கியுள்ளது, எத்தனை சீரழிவுகள் இடம்பெற்றுள்ளன என்பதை நிச்சயமாக கூற முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு உள்ளாகி நாடு பிரதேசரீதியான. இனரீதியாக, மொழிரீதியாக பிளவுபட்டு கொலைகளமாக, இலஞ்ச ஊழல் மலிந்த பூமியாக, மக்கள் வாழ்வதற்காக போராடவேண்டிய, பாதுகாப்பற்றநாடாக இலங்கை மாற்றியுள்ளது.
ஏறத்தாழ 50 ஆண்டுகளாக அவசரகால சட்டத்தின் கீழ் ஆட்சியை நாடாத்தி மக்களை அடிமைப்படுத்தியும், சுரண்டியும் பலக்கப்பட்ட அரசாங்கங்கள் இலங்கை மக்களுக்கு இது தான் அரசியல் என்பதை உணர்தியுள்ளனர். இந்த பிழையான பார்வை, அனுபவத்திலேயே நேர்மையான தூய அரசியல் செயற்பாட்டாளர்கள் ஓரங்கட்டப்பட்டும் நாட்டைவிட்டு ஓட்டப்பட்டும் உள்ளனர். இளம் சமுதாயமும், கற்றோரும் அரசியலிலிருந்துபின்னிற்கின்றனர்.
பலாத்காரம், அடிதடி அரசியல், துப்பாக்கிச் சூடுகள், கொலை, கடத்தல் அரசியலின் சொந்தக்காரர்கள் ஐக்கியதேசியக் கட்சியினரே பின்னர் இது சுதந்திரக் கட்சியினர் எனப்பரவி 1971ம் ஆண்டு புரட்சியை பயங்கரவாதமாக நிறம் பூசி 1983 இனக்கலவரத்தினை நாட்டின் விடுதலையின் ஆரம்பமாக தொடங்கி 2009ம் ஆண்டு மே 18, 19 ஐ இலங்கையின் சுதந்திரமாக கொண்டாடும் கேவலமான அரசியலின் பங்குதாரர்களானார்கள்.
சொந்தநாட்டு மக்களை கொன்றுக் குவித்து பால்;சோறு உண்டு மகிழும் வக்கிர ஆட்சியாளர்கள்தான் சனநாயகதலைவர்களாக மக்களால் தேர்ந்தேடுக்கப்படுகின்றனர். என்பதுதான் வருந்தத்தக்கது. இங்கேதான் சனநாயகமும், மக்கள் இறைமையும் தோற்றுப் போகின்றன. இலங்கை அதனால் தான் சனநாயகம் தோல்வியுற்ற நாடாக மாறியுள்ளது. (அதற்காக பிரித்தானியர் ஆட்சியை சனநாயக ஆட்சியாக நான் கூறமுனையவில்லை)
சனநாயகம் தோல்வியுற்றதால்தான் இன்று இலங்கையில் மனிதஉரிமை மீறல்கள் குற்றங்கள், இலஞ்ச ஊழல், வக்கிரமான, அராஜகமான ஏமாற்று அரசியல் சுரண்டல் என்பன தலைவிரித்தாடுகின்றன. பிரிதிநிதித்துவ சனநாயகத்தில் மக்களால் உண்மையாக விரும்பப்பட்டவர்களா தேர்ந்தெடுக்கப்பட்டவர்களா ஆள்கின்றனர்? சலுகைகள் பதவிகள் மது, மாது, சூசு, உணவு என்பவற்றுக்காக ஏமாந்து அடிமையாகிய மக்களின் வாக்குகள் தான் ஆட்சியாளர்களை தீர்மானிக்கின்றன. சாதாரணமான குடும்பத்தில் பிறந்த, பணம், அதிகாரம் இல்லாத ஒரு பிரஜையால் தேர்தலில் போட்டியிடவோ கருத்துதெரிவிக்கவோ தேர்தல் வெற்றிபெறவோ முடியுமா? இதற்கு நடைமுறை அரசியல் முறைமை வழிவிடுமா? பொலிஸ் மற்றும் ஏனைய அதிகாரிகள் அவ்வாறானவர்களை பாதுகாக்குமா? அதுசாத்தியமே இல்லை! இது சனநாயகத்தின் வெற்றியா? இங்கு மக்கள் இறைமையுள்ளதா?
கடந்த காலங்களிலும், தற்போதும் யார்? யார்? அரசியல்வாதிகளாக இருந்திருக்கின்றனர் எனச் சற்று யோசித்துப்பார்ப்போம் அல்லது நம்மை சுற்று திரும்பிப்பார்ப்போம். யார் கள்ளச்சாராயம் விற்றாரோ? யார் போதைபொருள் விற்றாரோ? யார் பாதாள உலகக் கோஷ்டி உறுப்பினராக இருந்து கொலை செய்தாரோ? யார் 2, 3 திருமணம் முடித்துள்ளரோ? யார் குடிகாரரோ? யார் எழுத வாசிக்க முடியாதவரோ? ஒப்பந்தச் சுரண்டல், காணிகளை பலாத்காரமாக கையகப்படுத்திக் கொண்டவரோ? யாருக்கு பாலியல் வல்லுறவு, நிதிமோசடி வழக்குகள் குவிந்துக் கிடக்கின்றதோ? அவர்கள்தான் அரசியல்வாதிகளாக வலம் வருகின்றனர். இதுதான் சனநாயகத்தின் நோக்கமா? பாவம் மக்கள்!
இவர்கள் கையில்தான் நாடே உள்ளது? இவர்கள்தான் நாட்டின் பொருளாதாரம், கல்வி, அபிவிருத்தி, என அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியை கொண்டுள்ளனர.; அப்படி இருக்கும் பட்சத்தில் வைத்தியர்கள், சட்டத்தரணிகள், கல்விமான்கள் எவ்வாறு அரசியல் செய்யமுன்வருவர்?; என்பதுதான் நடைமுறையில் தலைத்தூக்கியுள்ள முக்கியமான பிரச்சினையாக மாற்றியது. மக்கள் கல்வியியலாளர்களை, நேர்மையானவர்களை, தேர்ந்தேடுக்கத் தயாராக உள்ளனரா? என்பதுதான் அடுத்தப் பிரச்சினை.
நேர்மையான அரசியல் செய்வோருக்கும,; விமர்சனம் செய்வோருக்கும், மரணஅச்சுறுத்தல்கள், கைதுகள், அரசியல் பழிவாங்கல்கள் இடம் பெற்றுவந்துள்ளன. இது தான் சனநாயகமும், மக்கள் இறைமையும் இவர்களுக்கு தூயஅரசியல் செய்தற்காக வழங்கிய பரிசு. மக்கள் இவர்களை பாதுகாக்க முன்வருவதில்லை!
அரசியல் செய்வோருக்கு ஒரு கொள்கை, குறிக்கோள் இருப்பது அவசியம் அரசியலமைப்பின் கொள்கை, குறிக்கோள,; கட்சிக் கொள்கை குறிக்கோள் இருப்பது அவசியம.; ஆனால் இன்றைய அரசியலில் பலர் குறுகிய சுயநல குறிக்கோளுடனும், இனவாதக் கொள்கையுடனும் அடிப்படைவாதத்தினையும். கொண்டு அரசியல் நடாத்துகின்றனர் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. பலருக்கு கொள்கையும் இல்லை, குறிக்கோளும் இல்லை, இருந்தாலும் அது சுயநலம் கொண்டதாக பணம் சொத்துசம்பாதிப்பதை சார்ந்ததாக இருக்கின்றது அவ்வாறானவர்களின் பின்னால் பல புத்தகபூச்சுகளும் கூட ஓடத்தான் செய்கின்றனர்.
அவ்வாறு ஓடுகின்றவர்கள:; தூயஅரசியல் செய்வோர் மக்கள் அரசியல் செய்வோர,; நீதிக்காக, மக்களின் உரிமைக்காக குரல்கொடுப்போருக்கு எதிராக தேவையில்லாமல், அர்த்தமில்லாமல் விவாதிப்பதும், விமர்சிப்பதும். வேடிக்கையானது. பலருக்கு கம்யூனிசம், மாஸ்சிசம் என்றாலே காய்ச்சலும் பொறாமையும் வந்துசேர்கின்றது. இந்நிலைமை மலையகத்தைப் பொருத்தமட்டில் மிகமோசமான சூழலை ஏற்ப்படுத்தியுள்ளது. நாம் எதற்காக அரசியல் செய்கிறோம்? எதற்காக கட்சியில் இருக்கிறோம்? இக்கட்சியின் கொள்கை என்ன? என்பது கூட தெரியாது, தனிநபரை மையப்படுத்திய, தனிநபரின் முடிவுகளின் தங்கிநிற்தும் அரசியல்தான் செய்கின்றனர். இதில் தான் பலர் பேய் பிடித்து அழைகின்றனர.; இதன் விளைவை மக்கள் சம்பள உயர்வு போராட்டத்திலும், பட்சட்டில் மக்களுக்கு இழைக்கப்பட்ட பாரபட்டத்திலும் அனுபவித்துள்ளனர். எனினும் இதற்குப் பின்பும் மக்களை; எவ்வாறு நல்வழிப்படுத்துவது? அதில் இன்றைய இளம் சமுதாயத்தினர,; கல்வியியலாளர்;கள், மாணவர்களின் பங்கு என்ன? என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செய்ற்படவேண்டும். மதிநுட்ப்பத்தினூடாக செயற்பட்டாலன்றி எம்மால் சனநாயகத்தை பாதுகாக்க முடியாது…………..
தொடரும்…..