தனது வாழ் நாள் முழுவதையும் போராளியாகவே வாழ்ந்து கிளிநொச்சியில் மறைந்துபோனார் டேவிட் ஐயா. சொலமன் அருளானந்தம் டேவிட் என்ற இயற்பெயர் கொண்ட டேவிட் ஐயாவை 80 களில் அறியாத போராளிகள் இல்லையெனலாம் காந்தீயம் அமைப்பை ஆரம்பித்து நடத்திவந்த டேவிட் ஐயா, ஒரு கட்டடக் கலைஞர். வவுனியாவில் கூட்டுப்பண்ணைகளை அமைத்து, மலைய மக்களுடன் தொடர்பேற்படுத்திக்கொண்டு பெரும் கிராமத்தையே காந்தீயம் என்ற பெயரில் உருவாக்கினார்.
அங்கு கல்விக் கூடங்கள், பெண்களுக்கான பயிற்சி நிலையங்கள் போன்ற பல்வேறு சேவைகளை நடத்திவந்தார்.
காந்தீயம் அமைப்புடன் புளட் குழுவினருக்கு ஏற்பட்ட தொடர்புகளைக் காரணம் காட்டி இலங்கைப் புலனாய்வுத் துறையால் டேவிட் ஐயா 1983 ஆம் ஆண்டு கைது செயப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கொழும்புச் சிறையிலிருந்து மட்டக்களப்பிற்கு மாற்றப்பட்டார். மட்டக்களப்புச் சிறை உடைப்பின் போது தமிழ் நாட்டிற்குத் தப்பிச் சென்ற டேவிட் ஐயா, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்வரை இந்தியாவிலேயே வாழ்ந்துவந்தார். தமிழகத்தில் ஆனைமுத்து அவர்களை ஆசிரியராகக் கொண்ட பெரியார் ஆங்கில இதழில் ஈழப் போராட்டம் தொடர்பாக எழுதிவந்தார். 2015 ஜூலை மாதம் இலங்கை திரும்பி கிளிநொச்சியில் தனது உறவினர்களுடன் தங்கியிருந்தபோது சுகயீனமுற்று இன்று இயற்கை எய்தினார்.
இறுதியில் 11.10.2015 அன்று கிளிநொச்சியில் இயற்கை மரணம் எய்தினார்.
ஒரு மனிதனை இழந்துவிட்டோம்.
கண்கள் நனைகின்றன.