மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சைபர்கிரைம் துறை புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இதன்படி, விருப்பம் உள்ள தனிநபர்கள் தங்களை “இணைய தன்னார்வலர்களாக” (cyber volunteer) பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு பதிவு செய்து கொள்ளும் தன்னார்வலர்கள், இணையம் மற்றும் சமூக ஊடகங்களில் சட்டவிரோத பதிவுகளை குறித்து அரசுக்கு தெரிவிப்பார்கள். சட்டவிரோத இணையச் செயல்பாடுகளாக சிறார் ஆபாசபடங்கள், பாலியல் ரீதியான ஆபாச பதிவுகள், பயங்கரவாதம் மற்றும் தேச விரோத செயல்களுக்கான ஆதரவு உள்ளிட்டவைகளாக வறையறுக்கப்பட்டுள்ளன.
முதல் கட்டமாக ஜம்மு காஷ்மீரிலும் திரிபுராவிலும் துவங்கப்படவிருக்கும் இத்திட்டம், பின்னர் நாடெங்கும் விரிவு படுத்தப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் “இந்திய இணைய குற்றங்களுக்கான ஒருங்கிணைப்பு மையத்திடம்” (Indian Cyber Crime Coordination Center – I4C) இணைய தன்னார்வலர்களாக விரும்பும் எவரும் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். மாநில வாரியாகவும், யூனியன் பிரதேசங்கள் வாரியாகவும் பிரிக்கப்படும் இத்தன்னார்வலர்கள், தமது பகுதிக்கு உட்பட்டு இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் பதிவுகள் குறித்து அரசுக்கு தெரியப்படுத்தலாம்.
இவ்வாறு பதிவு செய்யப்படும் தன்னார்வலர்களிடம், பெயர், தொலைபேசி எண், அடையாள அட்டை போன்ற அடிப்படை விவரங்களே கோரப்படுகின்றன. இவர்களின் பின்னணி குறித்தோ பிற தகுதிகள் குறித்தோ ஆராய்வதற்கான ஏற்பாடுகள் ஏதும் இல்லை. அதே போல இவ்வாறு பதிவு செய்யப்பட்டு இணைய கண்காணிப்பாளராக செயல்படுகின்றவர்கள் யார் யார் என்பதையோ, அவர்களுக்கான அடையாளங்களையோ அரசு வழங்கப் போவதில்லை.
இணைய செயல்பாட்டாளர்கள் என அரசால் அழைக்கப்படும் இவர்கள் எதார்த்தத்தில் கண்காணிப்பாளர்களாகவும், ஒட்டுக் குழுக்களாகவுமே செயல்படுவார்கள் என்பதில் எந்த இரகசியமும் இல்லை.
மேலும் “தேச விரோத” நடவடிக்கைகள் என்றால் என்ன என்பது குறித்து நடப்பில் உள்ள சட்டங்களில் தெளிவான வரையறை இல்லை. மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின் பல்வேறு சந்தர்பங்களில் அரசுக்கு எதிராக விமர்சனப்பூர்வமாக கருத்து தெரிவிப்பவர்களின் மேல் தேச விரோத தடுப்புச் சட்டங்கள் பாய்ந்துள்ளன. இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, “ஒரு பிரதமரை அவமதிப்பது ஒட்டுமொத்த தேசத்தையே அவமதிப்பது போலாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் “தேச விரோதத்தின்” எல்லைக்குள் பிரதமரின் செயல்பாடுகளின் மீதான விமர்சனங்களையும் அடக்கி உள்ளார்.
0o0o
கடந்த ஜனவரி மாதம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் முனாவர் ஃபரூக்கி என்கிற மேடை நகைச்சுவைக் கலைஞர் கைது செய்யப்பட்டார். உள்ளூர் பாரதிய ஜனதா எம்.எல்.ஏவின் மகனும், ஹிந்து ரக்ஷா சன்ஸ்தா என்கிற அமைப்பின் தலைவருமான ஏகலைவா சிங் என்பவர் அளித்த புகார் தான் கைது செய்யப்படுவதற்கு அடிப்படை. ஃபரூக்கியின் நகைச்சுவை நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பே அரங்கினுள் நுழைந்த போலீசார், அவர் பேசத் துவங்குவதற்கு முன்பே “இந்து கடவுள்களை அவமரியாதை” செய்த குற்றத்திற்காக கைது செய்து இழுத்துச் சென்றனர்.
இன்னும் சொல்லப்படாத நகைச்சுவைக்காக ஒருவரை எந்த அடிப்படையில் கைது செய்தார்கள்?
ஏகலைவா சிங் நிகழ்ச்சிக்கு முன்பே அந்த நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடக்கும் இடத்திற்கு பக்கமாக சென்றாராம். அப்போது இந்துக் கடவுள்கள் குறித்தும், உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்தும் சில நகைச்சுவைகளை ஒத்திகை பார்த்துக் கொண்டிருப்பதை அவரும் அவரது நண்பர்களும் பார்த்தார்களாம். இந்தக் “குற்றத்தை” பார்த்த வேறு சாட்கள் எவரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், ‘ஒருவேளை தனது நிகழ்ச்சியில் இந்துக் கடவுகளையும், உள்துறை அமைச்சரையும் பகடி செய்து விடுவார்’ என்கிற சந்தேகமே ஃபரூக்கி கைது செய்யப்படுவதற்கு போதுமானதாக இருந்தது. பின்னர் மாவட்ட நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் பிணை மறுக்கப்பட்டு உச்சநீதிமன்றம் வரை சென்ற பின் ஒரு மாதம் கழித்தே ஃபரூக்கி பிணையில் விடுவிக்கப்பட்டார்.
‘இந்துத்துவ அரசியலை விமர்சிப்பது இந்து மதத்தையே விமர்சிப்பது’ – ‘பாரதிய ஜனதா கட்சியை விமர்சிப்பது அரசுக்கு எதிரான நடவடிக்கை’ – ‘பிரதமரை விமர்சிப்பது தேசத்தையே அவமதிப்பது’ – இவை தான் வலதுசாரிகளின் அணுகுமுறை மற்றும் செயல்பாடு. இணையதளங்களிலும், சமூக ஊடகங்களிலும் கூலிக்கு செயல்படும் இந்துத்துவ கும்பல் தமக்கு எதிரான கருத்து உடையவர்களைக் கையாள பின்பற்றும் பாணி “தேச விரோதியாக” முத்திரை குத்துவது.
இனி, இந்த முத்திரை குத்தலுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டு விட்டது. இனி அரசையோ அதன் திட்டங்களையோ, அரசின் பொருளாதார தோல்விகளையோ, அரசு கொண்டு வரும் சட்டங்களையோ விமர்சிப்பது தேசத்திற்கு விரோதமான நடவடிக்கையாக கருதப்படும். இவ்வாறான “தேச விரோத” நடவடிக்கைகளை போட்டுக் கொடுப்பதற்கு இணைய கங்காணிகள் எந்நேரமும் தயாராக இருப்பர்.
சில மாதங்களுக்கு முன் பத்திரிகையாளர் குணசேகரன், நெல்சன் சேவியர் உள்ளிட்டவர்களை குறிவைத்து ஆர்.எஸ்.எஸ் இணைய கூலிப்படையினர் மாரிதாசின் தலைமையில் நடத்திய இணைய தாக்குதலை நாம் பார்த்தோம். சில ஆயிரம் போலி சமூக ஊடக கணக்குகளின் மூலம் நடத்தப்பட்ட அந்த அவதூறு பிரச்சாரத்தின் முடிவில் பத்திரிகையாளர்கள் தமது வேலைகளை இழக்க நேரிட்டது. மேலிருந்து கீழ்மட்டம் வரை தெள்ளத் தெளிவாக ஒருங்கமைக்கப்பட்ட ஒரு இணைய கூலிப்பட்டாளத்தை இந்துத்துவ கும்பல் பராமரித்து வருவதை அதன் மூலம் நாம் அறிந்து கொண்டோம்.
இனி அந்தக் கூலிகளுக்கு அரசின் சன்மானம் நேரடியாக கிடைக்க இந்தப் புதிய சட்டம் வகை செய்துள்ளது.
0o0o
ஹிட்லரின் ஜெர்மனியில் யூத மக்கள் இன அழிப்புக்கு ஆளானது ஒரே நாளில் நடந்தேறவில்லை. கோடிக்கணக்கானவர்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்படுவதை எந்த சலனமும் இன்றி வேடிக்கை பார்க்கும் மனநிலையை ஜெர்மானியர்கள் அடைவதற்கு நாஜிகள் பல ஆண்டுகள் உழைத்தனர். யூத மக்களின் மீதும், கம்யூனிஸ்டுகளின் மீதும் வெறுப்புப் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. ஹிட்லரின் மீதான எந்தவொரு விமர்சனமும் ஜெர்மனியின் மீதான திட்டமிட்ட சதி என்பதாக மக்களின் மனங்களின் பதிய வைக்கப்பட்டது. பின்னர் மக்களின் ஒருபிரிவினரே அரசின் ஒட்டுக்குழுக்களாக (vigilantes) உருமாற்றப்பட்டனர்.
தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள “இணைய தன்னார்வலர்கள்” திட்டம் குடிமக்களில் ஒருபிரிவினருக்கு எது தேசவிரோதம் என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை வழங்குகின்றது. அவ்வாறு தீர்மானிப்பதற்கான அனுமதியை அரசிடம் இருந்து பெறுவதற்கு சட்டம் குறித்த அறிவோ, சிவில் உரிமைகள் குறித்த புரிதலோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
மேலும், தன்னார்வலர்களாக பதிவு செய்து கொண்டவர்கள் அதை பொதுவில் அறிவிக்க வேண்டியதில்லை என்கிறது அரசின் வழிகாட்டுதல் நடைமுறை. அதே போல தன்னிடம் பதிவு செய்து கொண்டவர்களின் விவரங்களை அரசும் வெளியிடப் போவதில்லை. கிட்டத்தட்ட இரகசியமான முறையில் கட்டப்படும் ஒருவிதமான ஒட்டுக்குழுவாக இவர்கள் இயங்கவிருக்கின்றனர். மக்களின் ஒரு பிரிவினரை இன்னொரு பிரிவினருக்கு எதிரான உளவாளிகளாக மாற்றுவதைத் தவிற இத்திட்டம் சாதிக்கப் போவது ஒன்றுமில்லை.
தேசத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து உளவு பார்ப்பது, ஒற்றறிவது, கண்காணிப்பது, நடவடிக்கை எடுப்பது என்பது ஒரு அரசின் வேலை. தான் செய்ய வேண்டிய வேலை ஒன்றை, அதற்கான எந்த தகுதியும் அற்ற ஒரு கும்பலிடம் ஒப்படைப்பதன் நோக்கம் என்ன?
இவ்வாறு ஒட்டுக்குழுக்களாக மாறியவர்கள் “தேச விரோதிகள்” குறித்து அளிக்கும் தகவல்கள் ஒருவேளை தவறாகவும் கூட இருக்கலாம். அவ்வாறு தவறான தகவல்களின் அடிப்படையில் ஒரு அப்பாவி தண்டிக்கப்படவும் கூடும். அப்படி ஒரு சூழலில் தவறாக தகவல் அளித்த ‘உளவாளியின்’ மீது எந்த சட்டநடவடிக்கையும் பாயாது. அக்லக்கின் குளிர்சாதனப் பெட்டியில் இருந்தது மாட்டிறைச்சி என்கிற சந்தேகத்தை முதலில் கிளப்பியவர் தண்டிக்கப்படவில்லை. இன்னொருவரின் சமயலறையை எட்டிப்பார்க்கும் அடாவடித்தனம் தண்டனைக்கு உள்ளாகவில்லை. இறுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு அப்பாவி அடித்தே கொல்லப்பட்டார்.
இவ்வாறு சமூகங்களுக்கு இடையே பிளவை உண்டாக்குவதும், பகைமையை விதைப்பதுமே ஒட்டுக்குழுக்களின் நோக்கம்.
ஏற்கனவே பாரதிய ஜனதா செல்வாக்காக இருக்கும் மாநிலங்களில் மதச் சிறுபான்மையினரும், தலித்துகளும் சமூக கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர். உத்திர பிரதேச அரசு ‘லவ் ஜிஹாதுக்கு’ எதிராக ஒரு சட்டம் கொண்டு வந்துள்ளது. பெற்றோர் அனுமதியுடன் திட்டமிடப்பட்ட பல திருமணங்கள் இதன் மூலம் வம்படியாக தடை செய்யப்பட்ட செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அச்சட்டம் வருவதற்கு முன்பே திருமண பதிவு அலுவலகங்களை தமது கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்த இந்துத்துவ ரவுடிகள், மத மறுப்பு திருமணங்களை ஏறத்தாழ நிறுத்தியிருந்தனர். இந்த ரவுடித்தனத்திற்கு ’லவ் ஜிகாத்’ சட்டம் மூலம் சட்ட அங்கீகாரம் வழங்கினார் ஆதித்யநாத்.
மத்திய அரசின் திட்டங்களைக் குறித்து இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் விமர்சனப்பூர்வமாக எழுதுபவர்களை ‘தேச விரோதிகள்’ என்று முத்திரை குத்துகின்றது பாரதிய ஜனதாவின் இணைய கூலிப்படை. விமர்சனங்களை எதிர்கொள்ளவும், பதிலளிக்கவும் முடியாத சந்தர்பங்களில் எதிர்தரப்பை வாயடைக்கச் செய்ய இந்துத்துவ கும்பல் எடுக்கும் ஆயுதம் ‘தேச விரோதி’ என்கிற முத்திரை தான். இனி அது வெறுமனே முத்திரை குத்தலாக இருக்காது தண்டனைக்குரிய தேச விரோத நடவடிக்கையாக கருதப்படும்.
தனக்கு எதிரான விமர்சனங்களை கண்காணிக்கும் ஒட்டுக்குழுக்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியிருக்கிறது பாரதிய ஜனதா.
– சங்கர்
நன்றி : இடைவெளி