வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்,
பிரேமானந்தா ஆசிரமத்தில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில், பிரேமானந்தாவுடன் தண்டனை விதிக்கப்பட்ட கமலானந்தா, பாலன் எனப்படும் பாலேந்திரன், சதீஸ் எனப்படும் சதீஸ்குமார் ஆகிய மூவரையுமே விடுதலை செய்யுமாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கமலானந்தாவும், ஏனைய இருவரும், இந்த வழக்கில் போலியாக சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும், பி்ரேமானந்தா ஆசிரமத்தையும், அதன் சொத்துக்களையும் பராமரிக்க வேண்டியுள்ளதால், அதனைப் பொறுப்பெடுக்க வேறு யாரும் இல்லாத நிலையில், அப்பாவிகளான இவர்களை விடுதலை செய்யுமாறும், இந்தியப் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
‘வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விடயம் இந்திய அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.’ ரைம்ஸ் ஒவ் இந்தியா இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.
கொலை மற்றும் பாலியல் வழக்குகளில் சிக்கிய பிரேமானந்தா, குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு, அவருக்கும் ஏனைய மூவருக்கும் 1997ம் ஆண்டு புதுக்காட்டை நீதிமன்றத்தினால் இரட்டை ஆயுள் தண்டனையும், 66.4 இலட்சம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டது.
திருச்சியை அடுத்த பாத்திமா நகரில் உள்ள ஆசிரமத்தில் 13 பெண்களை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியது, மற்றும் ரவி என்பவரைக் கொலை செய்து ஆசிரமத்துக்குள் புதைத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டன. எனினும், 2011ம் ஆண்டு பிரேமானந்தா பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டு, கூடலூர் சிறையில் இறந்து விட்டார்.
இவரது உதவியாளர்களான கமலானந்தா, பாலன், சதீஸ் ஆகிய மூவரும், தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிரேமானந்தா ஆசிரமத்தில் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டதாக கூறப்படும், 13 பெண்களுமே ஈழத் தமிழர்களாவர்.
பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணிடம் நடத்தப்பட்ட மரபணுப் பரிசோதனையில் பிரேமானந்தா குற்றவாளியென நிரூபிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. பிரேம்குமார் என்ற இயற்பெயர் கொண்ட பிரேமானந்தா இலங்கையில் மாத்தளை மாவட்டத்தில் பிறந்தவர்.
பிரேமானந்தா ஆசிரமத்தில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில், பிரேமானந்தாவுடன் தண்டனை விதிக்கப்பட்ட கமலானந்தா, பாலன் எனப்படும் பாலேந்திரன், சதீஸ் எனப்படும் சதீஸ்குமார் ஆகிய மூவரையுமே விடுதலை செய்யக் கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருந்தபோதிலும், இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரின் மகள் அத்தண்டனையை ரத்துச் செய்யக்கோரி இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை முதலமைச்சரின் ஊடாக அனுப்பிவைத்துள்ளார். அந்தப் பெண்ணின் கடிதத்தை இந்தியப் பிரதமருக்கு அனுப்பிவைத்த முதலமைச்சர், “சம்பந்தப் பட்டவர்கள் வடமாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுடைய கடிதத்தை உங்களுடைய கவனத்துக்கு அனுப்பிவைக்கிறேன்” என ஒரு குறிப்பை இணைத்துள்ளார்.
இதனைவிட கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யுமாறு முதலமைச்சர் கோரவில்லை எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுதான் உண்மைநிலை.
As always Inioru has jumped the gun.