ரம்ப்பின் ஆதரவாளர்கள் என்ற தலையங்கத்தில் கப்பிடல் கட்டடத்தில் தாக்குதல் நாடத்திய குழுவின் செயற்பாடு அமெரிக்க அதிகாரவர்க்கத்தின் சிதைவையே வெளிப்படுத்துகின்றது. முதலாளித்துவத்தோடு ஒரு குறுகிய காலத்திற்கே அதன் முழு வீச்சில் தோன்றிய ஜனநாயகம் முழு மக்களுக்குமானதல்ல என்பது தெளிவாகத் தெரிய ஆரம்பித்து நூற்றாண்டு ஆகிவிட்ட போதும், உலக முதலாளித்துவத்தின் இருதயமாகக் கருதப்படும் அமெரிக்காவிலேயே அது சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. இது வெறும் ஆரம்பம் மட்டுமே. இதன் முடிவு அண்மையில் இல்லை என்பது துல்லியமாகத் தெரிகிறது.
உலகின் பல்வேறு நாடுகளில், தேர்தல் ஊடாகத் தெரிவு செய்யப்பட்ட ஆட்சி அதிகாரிகாரங்களை அமெரிக்கா அழித்திருக்கிறது. அமெரிக்க அரச அதிகாரியான ஜோன் பேர்கின்ஸ் எக்குவாடோர் மற்றும் பனாமா அதிபர்களை தாம் எவ்வாறு கொலைசெய்து அந்த நாடுகளைச் சிதைத்தோம் என விலாவாரியாகக் குறிப்பிடுகிறார். (1) உலகின் ஒவ்வொரு மூலையிலும் தனது ஆக்கிரமிப்பை நடத்திய அமெரிக்கா இன்று தனது நாட்டின் நடு முற்றத்திலேயே பெரும் அரச அமைப்பியல் நெருக்கடியைச் சந்தித்திருக்கிறது. ரம் என்ற காட்டுமிராண்டிக் கோமாளி தனி ஆள் இல்லை அமெரிக்க ஜனநாயகத்தின் இன்னொரு முகம் தான். ஏனைய நாடுகளை ஆக்கிரமித்து குழந்தைகளையும், முதியோரையும், நோயாளிகளையும் குண்டு போட்டுக் கொலை செய்வதை நியாயம் எனக் கற்பிக்கப்பட்ட ஒரு கூட்டத்தின் நடுவே ரம்பின் போன்றவர்களின் வருகை சடுதியானதல்ல. நீண்டகால நிகழ்ச்சிப் போக்கின் ஒரு வடிவம் மட்டுமே. தவிர்க்க முடியாமல் இது உடனடியாக நிறுத்தப்படப் போவதில்லை.
1861 முதல் 1865 வரையான அமெரிக்க உள் நாட்டு யுத்தம்(2) அந்த நாட்டை முதலாவது மோதலை ஏற்படுத்தியிருந்தது. இக்காலத்தில் கூட கப்பிடல் கட்டிடத்தை யாரும் நெருங்கியதில்லை. இன்றோ அமெரிக்க அதிபரின் ஆதரவோடு இக் கட்டிடம் தாக்கப்பட்டுள்ளது. கப்பிடல் அமைந்துள்ள இடம் எந்த மானிலத்தினது அதிகாரத்திற்கும் உட்பட்டதில்லை. மத்திய செனட் அதிகாரத்தின் கீழுள்ள காவல்படையினால் பாதுகாக்கப்பட்டது. இக் காவல்படைகளே தாக்குதல் நடத்தியவர்களுக்கு கதவுகளை அகலத்திறந்துவிட்டமை வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் நினைவு கூரப்படும்.
2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கறுப்பின மக்கள் தமது உரிமைக்காகப் போராடிய போது, ரம்பின் ஆதரவாளர்கள் அவரின் உருவப்படம் பொறித்த கொடிகளுடனும் அமெரிக்கக் கொடிகளுடனும் கறுப்பின மக்களின் போராட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாடங்களை நடத்தினர். இன்று அமெரிக்க ஜனநாயகத்தின் சின்னமாகக் கருதப்படும் கப்பிடல் கட்டடம் உட்பட பல்வேறு பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்திவரும் ரம்பின் ஆதரவுக் கும்பல், அந்தக் காலப்பகுதியில் கறுப்பின மக்களின் போராட்டத்தால் பொதுச் சொத்துக்கள் சேதமடைவதாகக் கூச்சலிட்டது.
இன்று வரை ரம்பின் வன்முறை ஓயவில்லை. பல்வேறு மானிலங்கள் இன்னும் வன்முறை தலைவிரித்தாடுகிறது. ரம் இதுவரை பதவியிலிருந்து வெளியேற மறுக்கிறார். நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், 25 ஆவது சட்டத்திருத்தத்தைப் பயன்படுத்தி ரம் ஐ பதவியிலிருந்து வெளியேற்ற ஆலோசிக்கப்படுகிறது.
முதலாளித்துவம் உலகில் ஹிட்லர்களையும்,, முசோலீனிகளையும் மோடிக்களையும் ராஜபக்சக்களையும் தோற்றுவித்துள்ளது. அவர்களைப் பாதுக்காக்கும் பொறுப்பையும் அழிக்கும் வழிகளையும் அமெரிக்காவின் தலைமையே தீர்மானித்தது. இன்றோ அதே அமெரிக்காவின் நடு முற்றத்தில் நடைபெறும் இந்த அருவருப்பான சச்சரவு என்பது வெறுமனே வலது – இடது என்ற எல்லைக்குள் மட்டுமே மட்டுப்படுத்திவிட முடியாது.
அமெரிக்கா என்பது ஒரு வர்த்தக மையம் போன்றே செயற்பட்டது. அதன் உப நிறுவனங்களான, ஐ.எம்.எப், உலக வங்கி, ஐக்கிய நாடுகள் நிறுவனம், உலக வர்த்த அமைப்பு போன்றன எல்லாமே உலகை அமெரிக்கா கட்டுப்படுத்துவதற்கான ஆயுதங்களாகவே பயன்பட்டன.
2008 பொருளாதார நெருக்கடியின் பின்னர், பெரும் வியாபார நிறுவனங்கள் அமெரிக்காவின் உள்ளேயே சிறிய நிறுவனங்களை விழுங்க ஆரம்பித்திருந்தன. சிறு வரத்தகர்களின் ஆதிக்கம் அற்றுப் போனது. இவர்களின் பெரும்பாலனவர்கள் தமது அழிவிற்குக் காரணம் அன்னியர்களும், கறுப்பின மக்களும், உலகமயப்படுத்தலும் தான் எனக் கருதினர். உலகமயமான வியாபாரம் உள்ளூர் வியாபாரத்தை அழித்தது என்ற உண்மை இதன் பின்னல் உறைந்திருந்தது. இவர்களே அமெரிக்கா வெள்ளை அமெரிக்கர்களுக்கே என்ற தேசிய முழக்கத்தை முன்வைத்தனர். வரலாற்றின் ஒரு கட்டத்திற்குத் தவிர்க்கவிலாத தேவையாக அமைந்த தேசியவாதம் இன்று உலகம் முழுவதும் காலாவதியாகிப் போய்விட்டது. சிறு வர்த்தகர்கள் ரம் ஆதரவு நிலைக்குத் தவிர்க்கவியலாதுவாறு தள்ளப்பட, ரம் தேசியவாத முழக்கத்தை நிறவாதப் பின்னணியிலிருந்து முன் வைத்தார்.
அமெரிக்காவிலுள்ள 30 மில்லியன் சிறிய மற்றும் மத்தியதர வர்த்தகர்களுக்கு மத்தியில் 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 64 வீதமானவர்கள் ரம்ப் இற்கு ஆதரவாகவே வாக்களித்தனர். இது அமெரிக்காவிற்கே மட்டும் தனியான ஒன்றல்ல. பிரான்சின் நிறவாதக் கட்சிக்கு பெரும்பாலான சிறு முதலாளிகளின் ஆதரவு வழங்கப்பட்டது. ஆக, ரம் என்ற கட்டவிழ்த்துவிடப்பட்ட காட்டுமிராண்டி இன்றைய சிக்கலின் மையப்பொருளாக இருந்தாலும், இது முதலாளித்துவ உள் முரண்பாட்டின் வெளிப்பாடே. இந்த முரண்பாட்டைப் பயன்படுத்திக்கொண்டு ஆட்சி அதிகாரத்தை ஏதோ ஒரு வகையில் தக்க வைத்துக்கொள்ளலாம் அல்லது எதிர்காலத்தில் செல்வாக்குச் செலுத்தாலம் என்ற நம்பிக்கையிலிருக்கும் ரம் அரசியலிருந்து நீக்கப்படுதல் என்பது முழுச் சிக்கலின் தற்காலிகத் தீர்வு மட்டுமே.
ரம்பின் தனிப்பட்ட வழக்குரைஞர் ரம் ஆதரவுப் போராட்டங்களை இன்று போருக்கான ஒத்திகை எனக் குறிப்பிட்டுள்ளார். (3)
தேசிய வாதம் என்பது பாசிசமாக மாற்றமடைந்து ஒரு பகுதி மக்களின் ஆதரவோடு அமெரிக்காவின் ஏகபோகத்திற்கு சவாலாக அமைவது தவிர்க்க முடியாதது.
1.https://library.uniteddiversity.coop/Money_and_Economics/confessions_of_an_economic_hitman.pdf
2. The American Civil War: A Military History – By John Keegan(2)
3. https://www.newsweek.com/giuliani-condemns-washington-violence-twitter-shameful-1559761
4. https://www.theguardian.com/business/2020/feb/27/small-business-owners-donald-trump-second-term