இன்றைய உலகின் மிகப்பெரும் கிரிமினல்களில் ஒருவரான கோத்தாபய ராஜபக்ச இரண்டு அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தேசியப் பாதுகாப்பிற்கு ஆபத்தானது எனத் தெரிவித்துள்ளார். சாரிசாரியாக மனிதப்படுகொலைகளைத் திட்டமிட்டு நடத்திய கோத்தாபய ராஜபக்ச இன்னும் மனிதர்கள் மத்தியில் உலாவருவது மனிதகுலத்திற்கு ஆபத்தானதாகும். இவ்வாறான கிரிமினல்கள் மீதான கொலைக் குற்றங்கள் வெளிப்படையனதும் ஆதாரபூர்வமாகவும் நிறுவக்கூடிய நிலையிலும் இலங்கை பேரினவாத அரசு அவர்களைச் சுதந்திரமாக நடமாட அனுமதித்துள்ளது.
திட்டமிட்டு நடத்திய படுகொலைகளின் பின்னர் இலங்கை என்ற நாட்டையே தனது குடும்பச் சொத்தாக்க முற்பட்ட கோத்தாபய ராஜபக்ச என்ற சமூகவிரோதி இரண்டு அரசியல் கைதிகள் குறித்துப் பேசுவதற்கு எந்தத் தகுதியுமற்றவர்.
இலங்கைப் பேரினவாத அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடிய விடுதலைப் புலிகளின் அரசியல் தவறுகள் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டியவையே எனினும் இலங்கை அரசிற்கு எதிரான போராட்டம் இன்றும் தேவையான ஒன்றே.
புலிகள் அமைப்பிலுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாவிட்டால், ஆயுதமேந்துவதை இலங்கை அரசு ஊக்குவிக்கிறது என்பதே அதன் உள்ளர்த்தம்.
கோத்தாபாய கருத்துத் தெரிவிக்கையில், இவர்களில் ஒருவரின் பெயர் மொறிஸ், விடுதலைப்புலிகளின் கொழும்பு திட்டத்தின் சூத்திரதாரி இவரே, முன்ளாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகா மீதான தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி இவரே, மற்றைய நபர் ஜின் என்ற பெயரினால் இனம் காணப்படுபவர். சரத்பொன்சேகா மீது தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட பெண்ணை மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்தவர் மொறிசே. விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களிற்கு பொதுமன்னிப்பை வழங்கவேண்டும் என அழுத்தம் கொடுப்பவர்களிற்கு அவர்கள் என்ன சூழ்நிலையில் கைதுசெய்யப்பட்டார்கள் என தெரியாது என்கிறார்.
இலங்கையில் அரசியல் கைதிகள் தொடர்பாக நீதித்துறைக்கு முன்னதாக தானே தீர்மானிக்க வேண்டும் என கோத்தாபய போன்ற கிரிமினல்கள் கருதும் நிலையே இன்றும் காணப்படுகிறது.
கோத்தாபயவினால் சித்திரவதை முகாம்க்ளுக்கு அனுப்பப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் தொடர்பாக அவர் முதலில் கருத்துத் தெரிவிக்கட்டும்.
கோத்தாபய போன்ற கிரிமினல்கள் இவ்வாறெல்லாம் கருத்துத் தெரிவிக்கும் போது அதனை எதிர்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற இலங்கை அரசின் அடியாள் படை தயாராகவில்லை. இலங்கையிலோ வெளி நாடுகளிலோ பேரினவாதிகளின் மக்கள் விரோதக் கருத்துக்களை எதிர்கொள்ள அரசியலும் அரசியல் இயக்கங்களும் இல்லை என்பதே இன்றைய தமிழ்ப் பேசும் மக்களின் அவல நிலை.