ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதென அதிகமான பிரித்தானியர்கள் வாக்களித்ததைத் தொடர்ந்து அந்த நாட்டின் கடன் மதிப்பீட்டுத் தரம் குறைக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் தரம் AAA இலிருந்து AA ஆக தரமிறக்கப்பட்டுள்ளது. Standard & Poor’s என்ற தர நிர்ணைய முகவர் உலக நாடுகளில் பெரும்பாலானவற்றிற்குத் தர நிர்ணையம் மேற்கொள்ளும் முகவர் நிலையமாகும். அதன் போட்டி நிறுவனமான Fitch உம் AA+ இலிருந்து பிரித்தானியாவை AA இற்குத் தரமிறக்கியுள்ளது.
Fitch நிறுவனம் இது தொடர்பாகத் தெரிவிக்கையில், ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி குறைவடைவதாலும், வெளி நாட்டுக் குடிவரவாளர்கள் குறைவடைவதாலும், வெளிநாட்டு நேரடி முதலீடுகள் குறைவடைவதாலும் பொருளாதார வளர்ச்சி குன்றும் என்பதால் தரமிறக்க வேண்டிய தேவை ஏற்பட்டது என்கிறது.
இத் தர நிர்ணையத்தைத் தொடர்ந்து பிரித்தானிய பங்கு சந்தையில் 100 பில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ் தொகை வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் பிரித்தானிய பவுண்ஸ் இன் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு வெளிநாட்டு குடிவரளர்களால் பிரித்தானியப் பொருளாதாரத்திற்கு வலுச் சேர்க்கப்படுகிறது என்பதை முதல் தடவையாக உலக நிறுவனம் ஒன்று ஒப்புக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்விளைவாக பிரித்தானியாவில் குறுகிய காலப் பொருளாதார நெருக்கடி ஒன்று தோன்றலாம்.
‘பிறிக்ஸிட்’ விவகாரம் ; உலகின் மிகப் பெரிய 400 செல்வந்தர்கள் 100 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் இழப்பு
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு எடுத்த தீர்மானத்தால் உலகின் மிகப் பெரிய 400 செல்வந்தர்கள் சுமார் மொத்தம் 100 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பணத்தை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ‘பிறிக்ஸிட்’ என்ற மேற்படி வாக்கெடுப்பின் பெறுபேறுகள் வெளியானதையடுத்து பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியே இந்த நிலைமைக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் பிரகாரம் உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களான மைக்ரோ சொப்ட் ஸ்தாபகர் பில்கேட்ஸ், அமேஸன் ஸ்தாபகர் ஜெப் பெஸொஸ், பிரித்தானியாவின் மிகப் பெரிய செல்வந்தரான ஜெரால்ட் குரொஸ்வெனர் ஆகியோர் இந்த ‘பிறிக்ஸிட்’ வாக்கெடுப்பின் பெறுபேற்றையடுத்து முறையே 1.75 பில்லியன் ஸ்ரேலிங் பவுண், 1.2 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் மற்றும் 730 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் தொகையை இழந்துள்ளனர்.
அதேசமயம் ஐரோப்பாவின் மிகப் பெரிய செல்வந்தரான அமன்சியோ ஒர்ரேகா 4.4 ஸ்ரேலிங் பவுணையும் உலகின் மூன்றாவது செல்வந்தரான வரென் பவ்வெட் 1.7 பில்லியன் ஸ்ரேலிங் பவுணையும் இழந்துள்ளார்.
பிறிக்ஸிட்டால் பாதிக்கப்பட்ட செல்வந்தர்கள்
பில் கேட்ஸ்
சொத்து மதிப்பு: 61 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்
இழப்பு: 1.7 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்
அமன்சியோ ஒர்ரேகா
சொத்து மதிப்பு: 51 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்
இழப்பு: 4.4 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்
வரென் பவ்வெட்
சொத்து மதிப்பு: 48.2 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்
இழப்பு: 1.7 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்
ஜெப் பெஸொஸ்
சொத்து மதிப்பு: 45 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்
இழப்பு: 1.2 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்
ஜெரால்ட் குரொஸ்வெனொர்
சொத்து மதிப்பு: 9.4 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்
இழப்பு: 730 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா காணாமற்போனதால் பவுண்டின் பெறுமதி குறைவடைவதுபோல் இனியொருவும் இடைக்கிடை ஒரு வாரமளவில் காணமற்போவதால் அதன் வாசகர்கள் குறைவடைகிறார்கள். என்ன காரணம்?