பிரித்தானியாவில் லண்டன் மற்றும் கென்ட் போன்ற பகுதிகளை VUI 2020/01 என்ற கொரோனா வைரஸ் வகை தாக்கி வருவதால் நான்காவது அடுக்காக லண்டனைத் தனிமைப்படுத்தும் தனிமைப்படுத்தல் முறையை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் அளவிலேயே இந்த வைரஸ் தாக்கம் ஆரம்பித்துவிட்டதாகக் கூறும் அரசு, குறித்த பகுதிகளில் 60 வீதமான தொற்றுக்கள் புதிய மாற்றமடைந்த வைரஸ் இனால் ஏற்பட்டுள்ளது என அறிவிக்கின்றது.
தவிர தொற்று ஏற்பட்டுள்ள ஒருவர் மற்றும் ஒருவருக்கு தொற்றை ஏற்படுத்தும் விகிதம் ஒன்றிலிருந்து 12 ஆக அதிகரித்துள்ளமை மற்றொரு ஆபத்தான நிலையாக அரசால் கருதப்படுகிறது. நேற்றய தினம் தொலைக்காட்சியில் உரை நிகழ்த்திய பிரித்தானியப் பிரதமர் புதிய வகை வைரஸ் 70 வீதம் அதிகமாக மற்றயவர்களுக்குத் தொற்றைக் கடத்தக்கூடிய ஆபத்து உள்ளதாக அறிவித்துள்ளார்.
நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் புதிய நாலாவது அடுக்கு தனிமைப்படுத்தல் தொடர்பான செய்தி அறிவிக்கப்பட்டதும் லண்டனிலிருந்து சாரிசாரியாக மக்கள் வாகனங்களிலும் புகையிரதங்களிலும் வெளியேறினர். தொலைதூரப் புகையிரத நிலையங்கள் போர்க்கால இடப்பெயர்வு போன்று காட்சியளித்தன.
இதேவேளை பிரித்தானிய சுதந்திரக் கட்சி(UKIP), நத்தார் கொண்டாட்டங்கள் நிறுத்தப்படதற்கு சீனாவின் வைரசே காரணம் என்று அறிவிக்க, அதன் தலைவர் நைஜெல் பெராஜ் நத்தார் கொண்டாட்டத்தை நிறுத்தியதற்காக சீனாவிற்கு நன்றி தெரிவிக்கிறேன் எனப் ரிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிரித்தானியா மட்டுமன்றி ஏகாதிபத்தியப் பொருளாதார நாடுகள் அனைத்துமே தமது நடவடிக்கைகளைத் தவிர அனைத்தையுமே மற்றவர்களைக் குற்றம்சுமத்துவதன் ஊடாக தமது இயலாமையை மறைக்க முயல்கின்றனர். அமெரிக்கா,ஐரோப்பிய நாடுகள் உட்பட பெரும்பாலான நாடுகள் வைரஸ் தாக்கம் ஏற்படும் போதெல்லாம் சீனாவைக் காரணமாக முன்வைத்து தம்மைக் காப்பாற்றிக்கொள்கின்றனர். உலகம, மக்கள் வாழ்வதற்குப் பாதுகாப்பான பிரதேசமா என்ற கேள்வி அனைத்து மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. மக்களைப் பாதுகாக்க முடியாத அரசுகளும், தனியார் நிறுவனங்களில் இலாப வெறிக்குள் சிக்கியுள்ள மருத்துவமும் உலகின் முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு காலவதியாகிவிட்டதையே உணர்த்துகின்றன. அதிகாரவர்க்கம் மாபெரும் நெருக்கடிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று என்பதை உலகை மீளப்பதற்கான சந்தர்ப்பமாகவும் மக்களைத் தமது கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தற்கான ஆயுதமாகவும் பயன்படுத்த அரசுகள் முனைகின்றன.