தன்னார்வ நிறுவனம் ஒன்றின் அறிக்கையின் ஆதரப்படி உலகின் அரை பில்லியன் அளவிலான மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் தள்ளப்பட்டுள்ளனர். அதே வேளை 32 பல்தேசியப் பெரு நிறுவனங்களின் இலாபத் தொகை 109 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. ‘GAFAM’ என்று குறியிடப்படும் என்ற Google, Apple, Facebook, Amazon,Microsoft ஐந்து பெரிய நிறுவனங்கள் மட்டும் 46 பில்லியன் டொலர்கள் மேலதிக இலாபம் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களால் பெறும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
தவிர உலகின் ஏழு பெரும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், கொரோனா தொற்று நெருக்கடியல் 12 பில்லியன் டொலர்கள் அதிகரித்த இலாபம் ஈட்டும் எனக் கூறப்படுகிறது. பங்கு சந்தையை ஆக்கிரமித்துள்ள 100 பெரிய நிறுவனங்கள் சந்தையில் 3 ரில்லியன் டொலர்களை அதிகமாக முதலிட்டுள்ளன.
இந்த நிறுவனங்களில் பெரும்பாலனவற்றிற்கு ஐரோப்பிய அரசுகள் கோரானா வைரஸ் நிவாரண நிதியை வழங்கி வருகின்றன. ஜேர்மனிய அரசு பல பில்லியன் யூரோக்களை பீ.எம்.டபிள்யூ கார் நிறுவனத்தின் தொழிலாளர்களுக்கான ஊதியத் தொகையை வழங்க, அதன் மறுபக்கத்தில் நிறுவனத்தின் பங்குதாரர்கள் 1.6 பில்லியன் யூரோக்களை இலாபத் தொகையாக பகிர்ந்துள்ளனர்.
பொது முடக்கம் அறிவிக்கப்படும் போதெல்லாம் பெரும் நிறுவனங்களின் இலாபத் தொகை கணக்கிடப்படுகின்றது. அதன் மறுபக்கத்தில் உழைக்கும் மக்களின் நாளாந்த வாழ்க்கை கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றது. மக்களை நோய்த்தொற்றைக் காரணமாக முன்வைத்து வீடுகளுக்குள் முடக்கி வைத்திருக்கும் அரசுகள் அவற்றின் பங்களார்களான பல் தேசிய நிறுவனங்களின் கொள்ளைக்குத் துணை போகின்றன.