இலங்கையின் பேரினவாத அரச கட்டமைப்பை ஆக்கிரமித்துள்ள குடும்ப சர்வாதிகார அமைப்பு, எதிர்வரும் ஐந்தாம் திகதி தேர்தலை நடத்தி வெற்றி பெறும் நோக்கோடு கொரோனா தொடர்பான தகவல்களை மறைத்து வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மறைத்து தவறான தகவல்களை வழங்குவதால் நோய் தொற்று வேகமாகப் பரவும் ஆபத்து அதிகரித்துள்ளது. 10.07.2020 அன்று ஜெயவர்தனபுர பல்கலைக் கழகம் PCR சோதனைகளில் ஈடுபட மாட்டோம் என அறிவித்துள்ளது. தாம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என பரிசோதனைகள் ஊடாக அறிவித்தவர்களை இலங்கை அரசின் சுகாதார அமைச்சு கருத்தில் கொள்ளாது மறைத்துவருவதால் சோதனைகளை இனிமேல் நடத்துவதில்லை என பல்கலைக்ழகம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவலைத் தடுப்பதில் வெற்றியடையவில்லை என மக்கள் கருதினால் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுகொள்ள இயலாதிருக்கும் என்ற அச்சத்திலேயே தகவல்களை மறைத்துவருவதாகக் கருதப்படுகிறது.
கொரோனா நோய்த் தொற்றின் தன்மை தெற்காசியச் சூழலில் எவ்வாறு அமைந்திருக்கும்,கால நிலைக்கு உகந்த நோய் எதிர்ப்பின் தன்மை, சமூகத்தின் நோய் எதிர்ப்பு அளவு ஆகியன தொடர்பான அடிப்படை ஆய்வுகள் கூட இல்லாமல் நாடு முழுவதையும் எந்த நோக்கமும் இல்லாமல் அடைத்து ஆபத்தான சூழலை இலங்கை அரசு உருவாக்கியுள்ளது.
பரவலாகக் கண்டறியப்படும் நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை வெளியிடப்படாமல் மறைக்கப்படுவதால், ஐரோப்பிய நாடுகளிலிருந்து பயணம் செய்வதற்கு இலங்கை உகந்த நாடாக இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்திய இந்துத்துவ அரசமைப்பும் பேரினவாத அரசைப் போன்ற தகவல்களை மறைத்துவருகின்றது. மத்திய இந்துத்துவ அரசின் மிரட்டலுக்குப் பயந்து ஆட்சி நடத்தும் தமிழக அரசும் நோய் பரவலைத் தடுக்கத் தவறி விட்டது குறிப்பிடத்தக்கது.