அமெரிக்க ஆதரவில் அடுத்த ஜனாதிபத் தேர்தலுக்கு கோத்தாபய ராஜபக்ச தயாராகிவிட்ட வேளை வட மாகாணத்தில் இலங்கை அரச பேரினவாத்தின் புதிய நடவடிக்கைகள் செய்தி ஊடகங்களாலும் அரசியல் கட்சிகளாலும் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன.
வன்னி இனப்படுகொலை முடிவின் பின்னர் முன்னை நாள் போராளிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குகிறோம் என்ற பெயரில் சிவில் பாதுகாப்பு ஆணையம் (civil security department(CSD))என்ற இராணுவ அமைப்பு ஆயிரக்கணக்கான ஆண்களையும் பெண்களையும் இணைத்துக்கொண்டது. முன் பள்ளி ஆசிரியர்கள் உடபட பல் வேறு தொழில்களுக்காக 30 ஆயிரம் ரூபா ஊதியத்திற்கு பலர் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
கடந்த எப்பிரல் மாத நடுப்பகுதியில் இராணுவத் தலைமையத்திலிருந்து வழங்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் அனைத்து சீ.எஸ்.டி ஊழியர்களும் இராணுவப் பயிற்சி பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரப்பட்டிருந்தது.
கடந்தவாரம் அனைத்து சீ.எஸ்.டி ஊழியர்களும், ஆண்கள் பெண்கள் என்ற வேறுபடின்றி விசுவமடுவில் அமைந்துள்ள இராணுவப் பயிற்சி நிலையத்திற்கு அழைக்கபப்ட்டு அங்கு இராணுவ உடை வழங்கப்பட்டு இராணுவப்பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது.
உருமறைப்பு இராணுவ உடையுடன் ஆரம்பிக்கப்பட்ட பயிற்சியில் பங்குகொள்ளாதவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என மிரட்டப்பட்டுள்ளனர்.
இக் கட்டாய சடவிரோத இராணுவப் பயிற்சி ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதை உள்ளூர் ஊடகங்களில் பல அச்சத்தினால் வெளியிடவில்லை. புலம்பெயர் நாடுகளிலிருந்து வெளிவரும் ஊடகங்களால் செய்தி இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச நாடுகளைப் பிடித்துவந்து உரிமை பெற்றுத்தருவதாக புலம்பெயர் நாடுகளிலிருந்து எழுதிக் கொடுத்ததை முள்ளிவாய்க்காலில் படித்துக்காட்டிய முன்னை நாள் இலங்கை பாசிச அரசின் நீதிபதி தனது காலடியில் நடைபெறும் இச் சட்டவிரோத இராணுவப் பயிற்சி முகாம் தொடர்பாக மூச்சுக்கூட விடத் தயாரில்லை.
புலம் பெயர் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இலங்கை அரசிற்கு எதிராக பிரிந்து செல்லும் உரிமையைக் கோருவது தவறானது எனக் கூறும் விக்னேஸ்வரன் உட்பட அனைத்து வாக்குப் பொறுக்கும் அரசியல் வாதிகளும் இலங்கைப் பாசிச அரச நடவடிக்கைகளுக்குத் தேசியத்தின் பெயரால் துணை செல்கின்றனர் என்பதற்கு இச் சம்பவம் சாட்சி.
முள்ளிவாய்க்காலில் கூடி நின்று முன்னை நாள் விடுதலைப் புலிகளின் மரணித்த போராளிகளுக்காக போலிக் கண்ணீர் வடிக்கும் தலைவர்கள் அவர்களின் காலடி மண்ணில் கண்ணீர் வடிக்கும் போராளிகளுக்காக துரும்பைக்கூட அசைத்ததில்லை.