முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடைபெற்று ஏழாவது வருடத்தை நினைவு தினமாகக் கொண்டாடுவதில் அரசியல் கட்சிகள், புலம்பெயர் அமைப்புகள் ஆகியன போட்டிபோட்டுக் கொள்கின்றன. இலங்கையில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலையிலும் அதற்குப் போட்டியாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அல்லது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் மாலையிலும் நினைவுகூரல் நிகழ்வுகளை ஏற்பாடுசெய்துள்ளன.
இரண்டு போட்டி அமைப்புக்கள் வெவ்வேறு நேரங்களில் அஞ்சலி நிகழ்வை தமது அரசியல் சுய இலாபத்திற்காக ஏற்பாடுசெய்துள்ளன. அதே வேளை பிரித்தானியாவில் இரண்டு ஏகாதிபத்திய அடியாள் அமைப்புக்களான பிரித்தானியத் தமிழர் பேரவையும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் வெவ்வேறு பகுதிகளில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன.
வழமையாக பிரித்தானியத் தமிழர் பேரவையால்(BTF) ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்வை தாமும் நடத்த வேண்டும் என்று ஒருங்கிணைப்புக் குழு(TCC) அடம்பிடித்ததன் விளைவே புதிய நிகழ்வு.
பிரித்தானியப் பிரதமர் இருப்பிடமான டவுனிங் வீதியில் ரீ.சீ.சீ அமைபு புதிதாக ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுடன் இரண்டு போட்டி அமைப்புக்கள் தமது பிளவுகளை வெளிப்படையாகக் முன்வைத்துள்ளன.
யாழ்ப்பாணத்தின் இருதயப் பகுதியில் காலூன்றிக்கொண்டு பிரித்தானியப் பிரதமர் ஊடகங்களுக்கு விடுத்த செய்தி “புலிகள் என்ற கொடூரமான அமைப்பை அழித்து ஜனநாயகத்தை நிலைநாட்டியதற்காக ராஜபக்ச அரசைப் பாராட்டுகிறேன்!” என்று ஆரம்பிக்கிறது.
முள்ளிவாய்க்கால் மனிதப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்ட போதும், அதற்குப் பின்னதாகவும் இலங்கை அரசிற்கு மில்லியன்கள் பெறுமதியான ஆயுதங்களை வழங்கி ஊக்குவித்த பிரித்தானிய அரசின் இரத்தக்கறை படிந்த இருப்பிடத்தின் முன்பாக ரீ.சீ.சீ அமைப்பு முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை நடத்துகிறது.
கொலைகாரர்களின் இருப்பிடத்தின் முன்பாக அவர்களை நோக்கி இரந்து நடத்தப்படும் இந்த நிகழ்வு அழிக்கப்பட்ட மக்களையும் போராளிகளையும் கொச்சைப்படுத்துகிறது.
பெயர்தெரியாத ஆபிரிக்க நாடுகளிலும், அவுஸ்திரேலியச் சிறைகளிலும், முள்ளிவாய்க்காலின் கொல்லைப் புறங்களிலும் ஒரு நேர உணவிற்குக்கூட வழியில்லாமல் அலையும் போராளிகளைக் கூட கண்டுகொள்ளாத இந்த அமைப்பு தேசியத்தைப் பாதுகாப்பதாகக் கூறுவது கேலிக்கூத்து. ஐரோப்பாவில் ஆயிரக்கணக்கான போராளிகள் போர்க்குற்ற விசாரணை என்ற பெயரில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட போது அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்த ரீ.சீ.சீ வன்னிப் போராட்டத்தின் அழிவை மூலதனமாக்கிக்கொண்டவர்கள்.
நடந்துமுடிந்த போராட்டத்திலிருந்து கற்றுக்கொண்டு எதிர்காலப் போராட்டத்தைத் திட்டமிட முனைகின்ற ஒரு சிலரே மரணித்த போராளிகளையும் அவர்களின் கனவுகளையும் மதிப்பவர்கள். போராட்டத்தின் தவறுகளைக் காரணம் காட்டி முழுப்போராட்டத்தையும் தலிபான்களின் போராட்டத்திற்கு அமெரிக்க ஒப்பிடுகின்றது. அந்த வேளையிலெல்லாம் தவறுகளைச் சுயவிமர்சனம் செய்துகொண்டு போராட்டத்தையும் போராளிகளையும் நியாயப்படுத்தாமல் பிரித்தானியா அமெரிக்கா போன்ற நாடுகளின் காலடியில் விழுந்துகிடக்கும் புலம்பெயர் குழுக்கள் அரசியலிலிருந்து அகற்றப்பட வேண்டும்.
இலங்கைப் பேரினவாத அரசு இனப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்தியது என்றால் இனப்படுகொலையின் தொடர்ச்சியை தடையின்றி நடத்தி முடிப்பதற்கு துணைசெல்லும் புலம்பெயர் அமைப்புக்கள் மக்கள் விரோதிகளே.
பிரித்தானியப் பிரதமரின் இருப்பிடத்தில் மல்லார்ந்து படுத்திருக்கும் ரீ.சீ.சீ இற்கும், பீ.ரீ.எப் இற்கும் பெரிதான வேறுபாடுகள் கிடையாது.
போர்க்குற்ற விசாரணையை அமெரிக்காவின் கைகளிலும் அதனூடாக இலங்கை இனப்படுகொலை அரசின் கைகளிலும் ஒப்படைத்தவர்கள் பீ.ரீ.எப் அமைப்பினரே.
இந்த அமைப்புக்கள் கடந்த காலங்களில் ஏற்படுத்திய அழிவுகளிலிருந்து சமூகத்தை மீட்டெடுப்பதும், புதிய நேர்மையான அரசியலை முன்வைப்பதும் எதிர்கால சந்ததியின் கடமை.