கொக்கா கோலா, பெப்சி, ரெட்புல் போன்ற உயிர்க் கொல்லிக் குடிபானங்கள் தொடர்பான விழிப்புணர்வு உலகம் முழுவதும் ஏற்படுத்தப்படுவரும் நிலையில் ஆசியாவை அதன் விற்பனை மையமாக மாற்றுவதற்கு இந்த அமெரிக்க நிறுவனங்கள் முயல்கின்றன. தேசியவாதத்தின் மிகப் பிரதான அடிப்படைகளில் ஒன்று அன்னியப் பொருளாதார ஆக்கிரமிப்பிற்கு எதிரான உணர்வு. கொக்கோ கோலா, பெப்சி போன்ற குடிபானங்கள் அன்னியப் பொருளாதார ஆக்கிரமிப்பின் நேரடியான குறியீடுகள். இலங்கை இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளில் இவ்வகையான குடிபானங்கள் உழைக்கும் மக்களின் நாளாந்த வாழ்வின் இருண்ட பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டது.
சாலையோர நடை பயணிகளிலிருந்து தொலை தூரக் கிராமங்கள் வரை ஆக்கிரமித்துக்கொண்ட கொக்கா கோலா போன்ற பானங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அரசுகளை மாற்றும் வலிமைகொண்டவை.
ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் துணை செல்லும் நுற்றுக்கணக்கான இயற்கைக் குடிபானங்களின் களஞ்சியமாகத் திக்ழும் இந்தியா இலங்கை போன்ற நாடுகளுக்கு மனித உறுப்புக்களை அரித்து நடைபிணமாக்கும் உணவுப் பொருட்களையும் பானங்களையும் பாரப்பும் விதேசிய, ஏகாதிபத்திய சார்பு நிறுவனங்களையும் அரசுகளையும் எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இன்று மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர். தேசியப் பொருளாதாரத்தை வளர்ப்பதே தேசிய உருவாக்கத்தின் ஆரம்பப்புள்ளி என்ற வரலாற்று உண்மையை அறிந்திருந்தும் போர்க்குற்ற விசாரணையக் காரணமாக முன்வைத்து ஏகாதிபத்திய நாடுகளுடன் சமரசம் செய்துகொள்ளும் தேச விரோதிகளின் ஆதிக்கம் நிறைந்த இலங்கையின் சிறுபான்மைத் தேசிய இனங்களின் மத்தியில் அன்னியத் தரகர்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதிலிருந்தே தேசியம் தோற்றம் பெறும்.
ஏகாதிபத்தியத்தியங்களால் நியமிக்கப்பட்ட மைத்திரி – ரனில் அரசு ஒற்றையாட்சியைக் காப்பாற்றுவோம் என்ற தலயங்கத்தில் அமெரிக்க அரசையும் அதன் பல்தேசிய வியாபார நிறுவவனங்களையும் நடு முற்றத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றது. அதன் மறுபக்கத்தில் அமெரிக்காவையும், ஐ.நாவையும் பிடித்து போர்க்குற்ற விசாரணை நடத்தப்போவதாகக் கூறும் புலம்பெயர் ஏகாதிபத்திய ஒட்டுக்குழுக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய வகையறாக்களும் தேசியத்திற்கும் தேசியப் பொருளாதாரத்திற்கும் எதிரான விதேசிகளாக எதிர்காலத்தைச் சிதைத்துவருகின்றனர்.
சுய சார்பு தேசியப் பொருளாதாரம் தொடர்பான விழிப்புணர்ச்சி இவை அனைத்தையும் கடந்து மக்கள் மத்தியில் தோன்ற ஆரம்பித்துள்ளது. தமிழ் நாட்டில் நடைபெற்ற மாணவர் போராட்டங்கள் ஏற்படுத்திய அரசியல் விழிப்புணர்ச்சி, தமிழக வணிகர் சங்கம் இந்த நச்சுப் பானங்களைத் தடைசெய்யும் அளவிற்கு விரிந்து சென்றிருக்கிறது. நீண்டகால இடதுசாரி இயக்கங்களின் போராட்டங்கள் சிறுகச் சிறுக ஏற்படுத்திய ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு இன்று தமிழக மக்களின் பொதுப்புத்தியாக மாற்றமடைந்துள்ளது.
தமிழக வணிகர்கள் சங்கம் இக் குடிபானங்களைத் தடைசெய்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கும் மறுபக்கத்தில் இலங்கையில் கொக்கா கோலா நிறுவனம் ஆசியாவிற்கான உற்பத்தி மையத்தை நிறுவப்போவதாக அறிவித்துள்ளது. இலங்கையின் நிதியமைச்சர் ரவி கருணாநாக்கவிடம் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. கொக்கா கோலா நிறுவனத்தின் ஆசியா பசிபிக் பிராந்தியத் தலைவராப ஜோன் மேர்பி இப் பேச்சுக்களைத் தலைமை தாங்கினார்.
யாழ்ப்பாணத்திலிருந்து தேசியம் பேசும் விக்னேஸ்வரன் கும்பலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கொக்கா கோலாவை நிராகரிக்கக் கோரிப் போராட்டம் நடத்தினால் அதுவே போராடும் மக்களின் பலத்தை ஒடுக்கப்படும் தமிழ் மக்களுக்குப் பெற்றுத் தரும். சிங்கள மக்களுடன் கூட அரசிற்கு எதிரான இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள ஆரம்பப்புள்ளியாக அமையும்.
மைத்திரி-ரனில் அரசின் ஊதுகுழலாகச் செயற்படுவது நல்லிணக்கமல்ல, அரசிற்கு எதிராக, சிங்கள மக்களையும் இணைத்துக்கொண்டு போராடுவதே நல்லிணக்கம் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கற்பிக்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை. அதேவேளை மகிந்த ராஜபக்ச போன்ற இனக் கொலையாளிகளிடம் நல்லிணக்கத்தை எதிர்பார்ப்பது அரசியல் கோமாளித்தனம் என்பதை விக்னேஸ்வரன் போன்றவர்களுக்கு மக்கள் கற்றுக்கொடுக்கும் காலம் தோன்றுவதற்கான அடிப்படையாக தமிழ் நாடு வணிகர் சங்கத்தின் தீர்மான அமையும்.