சுன்னாகம் பிரதேசத்து நீரில் எண்ணையும் கிரீசும் கலந்திருப்பதால் அதனைப் பயன்படுத்தக்கூடாது என இலங்கை அரச அமைசர் தெரிவித்துள்ளார். அதுவும் சுன்னாகம் அனல் மின் நிலையத்தைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலேயே எண்ணையும் கிரீசும் கலந்திருப்பதாகவும் அது ஏனைய பிரதேசங்களுக்குப் பரவுவதாகவும் அரசு கூறுகிறது. ராஜபக்ச அரசின் முன்னை நாள் நீதியமைச்சரும், இன்றைய நீர் வளங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபையின் தவறை இன்று இலங்கை அரசும் குறிப்பாக அதன் அழுகிய பகுதிகளில் வாழும் ரவூப் ஹக்கீம் போன்ற கிரிமினல்களும் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
இந்த நிலையில் இதுவரை நீரை நச்சாக்குவதற்கு காரணமாகவிருந்த நிறுவனங்களும், அதற்கு அனுமதியளித்த சம்பிக்க ரணவக்க போன்ற அமைச்சர்களும் தண்டிக்கப்பட வேண்டும். இன்டர்போல் அமைப்பு நீரையும் நிலத்தையும் மாசுபடுத்திய கிரிமினல்கள் பலரைத் தேடிவருகிறது.
இவர்களின் மீதான விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று இனியாவது வட மாகாண சபை கோரிக்கை முன்வைக்க வேண்டும். அவ்வாறான கோரிக்கை ஊடாகவே இலங்கை அரசை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவும் முடியும்.
அதனை வடமாகாண சபை செய்யத் தவறுமாயின் மக்கள் பற்றுள்ள ஏனையோர் இக் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்.
தவிர நீர்ப் பிரச்சனை என்பது குடி நீர் சார்ந்தது மட்டுமல்ல. விவசாய நிலங்கள் தொடர்பானதும் கூட. ஆக, நீர் சுத்திகரிக்கப்பட வேண்டும். நீரைச் சுத்திகரிப்பதற்கான வழிமுறைகள் உலகின் பல்வேறு பிரதேசங்களில் கையாளப்பட்டுள்ளது. வளமான விவசாயப் பிரதேசத்தை அழித்துவிட்டு குடி நீர்ப்பிரச்சனையாகக் குறுக்கிக் கொள்வதற்கு எதிரான குரல்கள் எழ வேண்டும்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்து நேற்று உரையாற்றிய ரவூப் ஹக்கீம் ,
சுன்னாகம் பிரதேசத்தில் உள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் படிந்துள்ளது என்பதை ஆராய்வதற்கு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
150 கிணறுகளின் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில், அவற்றில் 109 கிணறுகளில் (73 வீதம்), நியம அளவுக்கு அதிகமான எண்ணெயும், கிறீசும் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
7 கிணறுகளில் (4 வீதம்) எண்ணெய் கலப்பு தரநியமங்களுக்கு குறைவாக உள்ளது. 34 கிணறுகளில்(23 வீதம்) எந்தக் கலப்பும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
இந்த எண்ணெய்ப் படிம மாசு ஏனைய கிணறுகளுக்கும் பரவி வருகின்றன.
மேற்படி சுன்னாகம் பகுதியில் உள்ள மின் உற்பத்தி நிறுவனத்தை சுற்றியுள்ள 2.5 கிலோ மீற்றர் பிரதேசங்களில் இந்த பாதிப்பு உள்ளது.
இதனால், நாம் அப்பிரதேச மக்களுக்கு தினமும் ஆறு நீர்த்தாங்கிகளின் மூலம், குடும்பமொன்றுக்கு 250 லீற்றர் நீரை வழங்கி வருகின்றோம்.
இதற்கான செலவை நாம் அந்த மின்சார நிறுவனத்திடமே பெற வேண்டியுள்ளது. அவர்களால் தான் இந்த பிரச்சினை உருவானது.
இந்த நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடரவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
மேலும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் நீர் விநியோகத் திட்டத்தில் சுன்னாகம் பகுதியை உள்ளடக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தத்திட்டம் 2 ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும். இந்தக் கூட்டத்தில் இரா.சம்பந்தனும் கலந்து கொண்டிருந்தார்.
சுன்னாகம் பகுதியில் உள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் கிறீஸ் படிமங்கள் இருப்பதனால் மக்கள் அந்தக் கிணற்று நீரை அருந்தக் கூடாது.
அத்துடன் நாம் எமது ஆய்வுகளை இன்னும் விரிவுபடுத்தியுள்ளோம். அந்தப் பகுதிகளிலுள்ள சகல கிணறுகளிலும் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளோம்.
இதற்காக மக்களிடமிருந்து பணம் எதுவும் அறவிடுவதில்லையெனவும் தீர்மானித்துள்ளோம்.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை நிபுணர்குழுவின் ஆய்வு முறை வேறு. வடமாகாண சபை நிபுணர் குழுவின் ஆய்வு முறை வேறு.
மத்திய அரசின் நிபுணர் குழு கழிவு எண்ணெய் கலந்திருப்பதை உறுதி செய்துள்ளது.
ஆனால் வடக்கு மாகாண சபை நிபுணர் குழு அறிக்கையை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் அதனை எனக்கு அனுப்புமாறு கோரிய போதும் இதுவரை என் கண்களில் கூட அந்த அறிக்கையை காட்டவில்லை.
சுன்னாகம் பிரதேசத்திற்கு மேலதிக நீர் தேவைப்பட்டால் அதனை வழங்கத் தயாராக இருக்கின்றோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சுன்னாகம் மின்நிலைய புகையினால் மக்கள் பாதிப்பு
Written by editor | May 18, 2013 | Comments Off
சுன்னாகம் பகுதியில் உள்ள மின்சார நிலையத்தில் இருந்து வெளியேறும் புகையினால் பொதுமக்கள் பல்வேறு சுகாதார பிரச்சினைகளுக்கு உள்ளாகி வருவதாக பொதுமக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றார்கள்.
சுன்னாகம் மின்சார நிலையத்தில் அண்மைக்காலமாக பாரிய மின்பிறப்பாக்கிகள் பொருத்தப்பட்டு யாழ். குடா நாட்டுக்கான மின்சார விநியோகம் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த மின்பிறப்பாக்கிகளில் இருந்து வெளியேறும் புகைகள் சுமார் எண்பது அடிக்கு மேற்பட்ட உயரத்தில் குழாய்கள் மூலம் வெளியேற்றப்படுகின்றபோதிலும் காற்று உள்ள காலங்களிலும் சரி காற்று அற்ற காலங்களிலும் சரி மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதி மக்களுடைய வீடுகளின் மேல் கரித்துகள் கொட்டுவதும், இதனால் உடைகள் முதல் ஏனைய பொருட்கள் பாதிக்கப்படும் நிலைமையும் காணப்படுகின்றது.
இதனைவிட புகையுடன் ஒருவகையான மணமும் கூட எழுவதினால் இதனை சுவாசிப்பதினால் பொதுமக்கள் நோய்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் உள்ளாகும் நிலமை ஏற்படலாம் என அந்தப் பகுதியில் உள்ள வைத்தியர்கள் தொவித்துள்ளதாகவும் அந்தப் பகுதியில் வாழும் பொதுமக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றார்கள்.
யாழ். மாவட்ட சுற்றுச் சூழல் அதிகாரிகளுடன் இது சம்பந்தமாக தொடர்பு கொண்டதாகவும் குறிப்பிட்ட மின் நிலையத்திற்கான அனுமதி கொழும்பில் இருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும் தாம் இது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளதாக பொதுமக்கள் மேலும் தெரிவிக்கின்றனர். Jaffna news.com