சுன்னாகம் அனல் மின்னிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அதி-பார கழிவு எண்ணை அதனைச் சூழவரவுள்ள பிரதேசங்களின் நீரையும் நிலத்தையும் மாசுபடுத்தியிருந்தது. நச்சாக்கப்பட்ட நீரை அருந்தியவர்கள் பலர் நோய் வாய்ப்பட்டிருந்தாக ஆதாரங்கள் வெளியாகின. சுன்னாகத்திலிருந்து ஐந்து மைல் சுற்றாடல் அளவில் பயிர்ச் செய்கை பாதிக்கப்பட்டது. எல்லா வளமும் பொருந்திய செம் மண் நிலம் நஞ்சாக்கப்பட்டது. போர் தின்ற மக்களின் வாழ்வு பேரினவாத அரசும் பல்தேசிய நிறுவனமும் இணைந்து நடத்திய தர்பாரில் இன்னும் கேள்விக்குள்ளானது.
இவை அனைத்திற்கும் மேலாக சுன்னாகம், அனல் மின் நிலையத்தின் அவலத்திற்கான தீர்வைத் தமது கைகளில் எடுத்துக்கொண்டு கிடப்பில் போட்டுவிட எத்தனிக்கிறது வட மாகாண அரசு. வன்னியில் நடந்தது இனப்படுகொலை எனத் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு சுன்னாகத்திலிருந்து நடத்தப்படும் இனச் சுத்திகரிப்பிற்குப் பச்சைக்கொடி காட்டியிருக்கிறது வட மாகாண அரசு.
வட மாகாண அரசு நியமித்த நிபுணர் குழு தமது ஆய்வை முடித்துக்கொண்டு சமர்ப்பித்த அறிக்கையில் இதுவரை வெளியான ஆய்வுகளின் முடிவுகள் அனைத்தையும் பொய் எனக் கூறுகிறது. நஞ்சு கலந்த நீரால் வாழ்விழந்தவர்கள் அனைவரையும் போலி என்கிறது. சுன்னாகம் பிரதேச நிலத்தடிநீரில் ஆபத்தான நஞ்சு மாசுகள் இல்லை என்று தாங்கள் மேற்கொண்ட ஆய்வுகளில் தெரியவந்திருப்பதாக நிலத்தடிநீரில் கழிவுஎண்ணெய் தொடர்பாக ஆராய்வதற்காக வடமாகாணசபையால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு அறிவித்தது.
அறிக்கையைத் தொடர்ந்து இதுவரை பொதுமக்களிற்கு விநியோகித்து வந்த குடிநீரை இடைநிறுத்த உள்ளுராட்சி மன்றங்கள் முடிவு செய்துள்ளன. தவிர எம்.ரி.டி வோக்கஸ் இன் உப நிறுவனமான நோதர்ன்பவர் ஐ மறுபடி இயங்க முற்படலாம்.
இந்த அறிக்கையைத் தொடர்ந்து மக்கள் நிம்மதியடைந்துள்ளனர் என எம்.டி.ரி வோக்கஸ் நிறுவனம் அறிக்கை விடுத்துள்ளது.
யாரிந்த எம்.டி.ரி வோக்கஸ் குழுமம்?
சுன்னாகத்தில் அனல் மின் நிலையத்தில் அதி பார டீசல் எண்ணையப் பயன்படுத்தி அழிவை ஏற்படுத்திய நோதேர்ன்பவர் என்ற நிறுவனத்தின் தலைமை நிறுவனம். இலங்கையில் அதிக இலாபத்தில் இயங்கும் நிறுவனங்களில் எம்.ரி.டி வோக்கஸ் உம் ஒன்று. சுன்னாகத்தில் நீர் மாசடைகிறது என்று வழக்குத் தொடர்ந்த சட்ட வல்லுனர்களைப் பயங்கரவாதிகள் என எம்.ரி.டி வோக்கஸ் குற்றம் சுமத்தி விட்டு அறிக்கை வெளிவந்ததால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என எம்.ரிடி வோக்கஸ் ஐச் சேர்ந்த லால் பெரேரா தெரிவித்துள்ளார்.
மலேசியாவைத் தலமையகமாகக் கொண்டியங்கும் இந்த நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர் நிரஞ்சன் தேவா என்ற சர்வதேசக் குற்றவளி. நிரஞ்சன் தேவா பிரித்தானிய ஆளும் கட்சியின் நீண்டகால உறுப்பினர். இலங்கையில் மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த தேவா ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினர்.
கொன்சர்வேட்டிவ் கட்சியில் செல்வாக்கு மிக்க நிரஞ்சன் தேவா இலங்கைப் பிரதமர் ரனில் விக்ரமசிங்காவின் நணபர். ரனில் ஆட்சிக்கு வந்ததும் சுன்னாகம் அழிவிற்குப் பொறுப்பான நிரஞ்சன் தேவா என்ற நிர்ஜ் தேவாவை சிறீலங்கன் ஏயல் லைன்சின் ஆலோசகராகவும் அரசாங்கத்தின் அதி உயர் ஆலோசகர்களில் ஒருவராகவும் நியமித்தார்.
ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது வருமானம் என்ன என்பதை பிரசல்ஸ் இல் முன்வைக்க வேண்டும். அதன் போது எம்.ரி.டி வோக்கஸ் என்ற நிறுவனத்திலிருந்து வருமானம் கிடைப்பதாக நிர்ஜ் தேவா கணக்குக் காட்டியிருந்தார்.
இந்த நிலையில் சுன்னாகம் அனல் மின் நிலையத்தின் கழிவு எண்ணை தொடர்பான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனமும், பிரித்தானிய ஆளும் கட்சி உறுப்பினரும் பொறுப்புக்கூற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். அது மட்டுமல்ல சர்வதேசக் குற்றச் செயலுக்காகத் தண்டனைக்கு உள்ளாக வேண்டிய நிலையும் ஏற்படும்.
சுன்னாகத்தில் ஏற்படுத்தப்படும் அழிவை நிறுத்தும் வகையில் நிரஞ்சன் தேவாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ‘பறை – விடுதலைக்கான குரல்’ என்ற அமைப்பு ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் பிரித்தானியக் கிளையின் முன்னால் போராட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தது.
போராட்டத்தின் பின்னர் தனது இணையத் தளத்தை மூடிவிட்ட நிரஞ்சன் தேவா இலங்கை சென்று யாழ்ப்பாணத்திற்கும் பயணம் செய்தார். இதன் பின்னர் அமைக்கப்பட்ட நிபுணர் குழு மில்லியன்கள் புரளும் பல்தேசிய நிறுவனமான எம்.ரி.டி வோக்கஸ் ஐக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டதன் விளைவே இப்போது வெளியான அறிக்கை.
நிரஞ்சன் தேவாவின் பிறப்பிடமன மொரட்டுவவை மையமாகக் கொண்டியங்கும் கைத்தொழில் நுட்ப நிறுவனம் உட்பட கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி த.ஜெயசிங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் துறையைச் சேர்ந்த கலாநிதி கு.வேலாயுதமூர்த்தி, விவசாய பீடத்தைச் சேர்ந்த கலாநிதி நளினா ஞானவேல்ராஜா, பொறியியல் பீடத்தின் தலைவர் கலாநிதி அ.அற்புதராஜா போன்றோர் குறித்த நிபுணர் குழுவின் அங்கத்தினர்.
இதற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பென்சீன், தொலுயீன், ஈதையில் பென்சீன், ஓதோ சைலின், பரா சைலின் மற்றும் மெற்றா சைலின் போன்ற பதார்த்தங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே குறித்த அறிக்கை பற்றி சந்தேகத்தை எழுப்பியுள்ளது சுற்றுச்சூழல் அமையம் ஏற்கனவே குடிநீர்வழங்கல் அதிகார சபையின் அறிக்கைகள் இரண்டு தடவைகள் வெளியிடப்பட்டிருந்தது. அதில் இரண்டு முறையும் குடிநீரில் கலந்துள்ள கழிவு ஓயில் பற்றி மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இப்போது திடீரென புதிய ஆய்வுகளில் இவை காணாமல் போயுள்ளன.
சூழலை மாசுபடுத்தியமைக்காக இன்டர்போல் போலிஸ் பலரை உலக அளவில் தேடிவருகிறது. யாழ்ப்பாணத்தில் நிபுணர் குழு என்ற பெயரில் இயங்குபவர்களும் நிரஞ்சன் தேவாவுடன் இணைந்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
உலகம் முழுவதும் மக்களின் போராட்டங்களை அழித்து பல்தேசிய நிறுவனங்களின் சுரண்டலுக்கான வழியைத் திறந்துவிடும் தன்னார்வ நிறுவனங்கள் சுன்னாகம் அழிவைத் தீர்த்துவைக்கப்போவதாக கிளம்பியுள்ளன.
சுற்றுச் சூழல் அமைப்புக்கள், ரான்ஸ்பெரன்சி இன்டர் நாஷனல் போன்ற பல்தேசிய நிறுவனங்களின் நிதி வழங்கலில் இயங்கும் அமைப்புக்கள் இவற்றின் பின்னணியில் செயற்படுகின்றன. சுன்னாகத்தைப் போன்றே வெலி வேரியாவில் குடி நீருக்காகப் போராடிய மக்களுக்குத் தீர்வு பெற்றுத்தரப் போவதாகக் கூறி அதனை ஏமாற்றிய அதே தன்னார்வ நிறுவனங்கள் ஆபத்தானவை. சுன்னாகம் வெலிவேரிய ஆகிறதா என்று நேஷன் என்ற பத்திரிகை தலையங்கம் எழுதியிருந்தது.
என்ன செய்ய வேண்டும்?
ஈழத்தில் மக்கள் போராட்டம் நடத்துவதும், அரசியல் தலைமைகள் அவற்றைத் தலைமை தாங்கி வழி நடத்துவதும் அவசியமானது.
புலம்பெயர் நாடுகளில் ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினர் என்ற சலுகையுடன் இலங்கையில் அழிவைத் தொடக்கிவைத்த நிர்ஜ் தேவாவிற்கு எதிராகப் போராட்டம் நடத்துவதும், உலகம் முழுவதும் அழிவிற்கு எதிரான அரசியலுக்காகப் போராடுபவர்களை இணைத்துக்கொள்வதும் உடனடித் தேவையாகும். அழிவின் விழிம்புவரை நகர்த்திச் செல்லப்பட்டுள்ள மக்கள் கூட்டம் நீருக்காகவும் நிலத்திற்காகவும் உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வேலைத் திடங்கள் உடனடியாகச் செயற்படுத்தப்பட வேண்டும்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி த.ஜெயசிங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் துறையைச் சேர்ந்த கலாநிதி கு.வேலாயுதமூர்த்தி, விவசாய பீடத்தைச் சேர்ந்த கலாநிதி நளினா ஞானவேல்ராஜா, கலாநிதி அ.அற்புதராஜா என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களே !
தமிழ் அரசியல் வாதிகள் கேட்பது காணி அதிகாரம்
பொலிஸ் அதிகாரம் . தங்கள் விருப்பப்படி நிலங்களை
மாசுபடுத்தவும் அதனை தட்டிக்கேட்போரை கைது செய்யவுமே.
நீர் நிலம் பாதிக்கப்பட்ட இடங்களில் தமிழ் அரசியல்வாதிகள்
மக்களோடு மக்களாக வாழ்கின்றார்களா?
கப்பல் தலைவன் கூட இறுதி பயணியைக் காப்பாற்றித்தான்
தான் தப்புவதற்கு வழிபார்ப்பான்.இவர்களோ போரின்போது
எங்கோ ஒழித்திருந்து விட்டு மிகுதியாக உள்ள தமிழர் மேல் அரசியல் சவாரி செய்கின்றவர்கள்.
மனித அழிவை கண்டு இரங்காத இவர்கள் மண்ணையும்
நீரையுமா கணக்கிலேடுக்க்கப் போகின்றார்கள்?
அதானே ! சிங்கள அரசியல்வாதிகளிடமிருந்து அதிகாரம் கை மாறுவதை எப்படி பொறுப்போம் ? . அந்த தமிழ் மக்கள் மேல் சவாரி செய்யவும் நில அபகரிப்பு செய்யவும் , மண்னை மாசுபடுத்தவும் , பெரு முதலளிகளுக்கு விற்கவும் அவர்களல்லவா முழு உரித்துடையவர்கள் ?
இதற்கு தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ்கர்களும் எப்படி உரிமை கோரலாம் ?