2012 ஆம் ஆண்டு சுன்னாகம் அனல் மின் நிலையத்தை சுற்றியுள்ள 2 கிலோ மீட்டர் பரப்பளவில் நீரில் கிரீஸ் மற்றும் எண்ணை காணப்படுவதாக இலங்கை நீர்ப்பாசன சபை ஆய்வு தெரிவித்தது. கடந்தவாரம் இலங்கை அமைச்சர் அதனை உறுதிப்படுத்தியிருந்தார். நீரை நாளாந்தம் பயன்படுத்தும் சுன்னாகம் பகுதி மக்களும் அதனை உறுதிப்படுத்துகின்றனர். இந்த நிலையில் வட மாகாண சபையும், மின்னுற்பத்திய நடத்திய எம்.டி.ரி வோக்கஸ் நிறுவனமும் தொடர்ச்சியாக அதனை மறுத்து வருகின்றன. நீர் மாசடைதல் தொடர்பான பிரச்சனை மின் உற்பத்தி நடப்பதற்கு முற்பட்ட காலத்திலேயே காணப்பட்டதாக எம்.ரி.டி வோக்கஸ் தனது அறிக்கைகளில் கூறும் அதே வேளை நீர் மாசடையவில்லை எனவும் கூறி வருகிறது. வட மாகாண சபையும் எம்.ரி.டி வோக்கஸ் இன் கருத்தையே எந்த மாற்றமும் இன்றிக் கூறிவருகிறது. இது மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
12..04.2015 ஞாயிறு நடைபெற்ற கூட்டத்தில் நீர்ப்பாசன சபையில் ஆய்வைக் கருத்தில் கொள்ளாத வடக்கு முதமைச்சர் விக்னேஸ்வரன், தமது நிபுணர் குழு தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்வதாகத் தெரிவித்தார். வடமாகாண ஆய்வுக் குழு நீரில் உயிராபத்தை ஏற்படுத்தும் நஞ்சு இல்லை என அறிவித்திருந்தது. இப்போது சுன்னாகத்தில் மட்டுமல்ல வடமாகாணம் முழுவதும் நிபுணர் குழு ஆய்வு செய்து வருகிறது என்கிறார். இறுதியில் சுன்னாகத்தில் மட்டுமல்ல ஏனைய இடங்களிலும் நீர் மாசடைந்துள்ளது எனவும் இதனால் எம்.ரி.டி வோக்கஸ் இதற்குப் பொறுப்பல்ல எனவும் அறிவிப்பதே வட மாகாண சபையின் நோக்கம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
இலங்கை அரசு நீரில் நஞ்சு காணப்படுவதை உறுதிப்படுத்தியதன் அடிப்படையில் மின் உற்பத்தி நடத்துவதற்கு அனுமதி வழங்கிய இலங்கை அரச அமைச்சர்களையும் உயர் மட்ட நிர்வாகிகளையும் தண்டித்து நீரைச் சுத்தப்படுத்துமாறு அரசைக் கோருவதற்குப் பதிலாக மக்களுக்கு எதிராக வட மாகாண சபை செயற்படுகிறது. நீர் நஞ்சாகவில்லை எனவும், அப்படியே நச்சுக் காணப்பட்டாலும் அது மின் உற்பத்தியால் ஏற்படவில்லை எனவும் நிறுவ முற்படுகிறது.
நீர் மாசடைந்துள்ளமை தொடர்பில் தீர்வு காண்பதற்கான கூட்டம் யாழ். மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படாமல் மூடிய அறைக்குள் சுமார் 3 மணித்தியாலங்கள் இடம்பெற்றிருக்கின்றது.
இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆரம்பமான மேற்படி கூட்டத்தில் வடமாகாண முதலமச்சர் விக்னேஸ்வரன் மற்றும் மாகாண ஆளுநர் பளிஹக்கார மற்றும் அமைச்சர்கள், மருத்துவர்கள், சட்டத்தரணிகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு முதலமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,
குடாநாட்டு நிலத்தடி நீரில் உயிர் ஆபத்தை உருவாக்க கூடிய btex ஹைதறோ காபன் இல்லை. என்பது நிருபிக்கப்பட்டுள்ளது. எனினும் நீரில் பல்வேறு விதமான மாசுக்கள் கலந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் நிபுணர்குழு அறிக்கை இம்மாதம் வெளியாகும் வரையில் பொறுமையாக இருக்குமாறு நாங்கள் கேட்டிருக்கின்றோம்.
மேலதிகமாக வடமாகாணசபையினால் உருவாக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் மேலதிகமாக நிபுணர்கள் சிலரை இணைத்துக் கொள்வது தொடர்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாம் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றோம்.
இதேபோன்று நிபுணர் குழுவிடம் நாங்கள் மேலும் ஒரு கோரிக்கை விடுத்திருக்கின்றோம். அதாவது “வடமாகாணத்திலுள்ள நீர் வளங்கள் அனைத்தையும்” ஆய்வு செய்து எமக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்படி, அதன் மூலம் எதிர்காலத்தில் எமது நீர் தேவைகளை நாமே தீர்த்துக் கொள்ள முடியும். என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.