வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனுக்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு இன்றைய தினம் வவுனியாவில் போராட்டம் ஒன்றை நடத்த உள்ளது.
அண்மையில் எழுக தமிழ் நிகழ்வின் போது விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிர்ப்பை வெளியிட்டு இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்க உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்னேஸ்வரன் தமது கூற்றுக்களை திரும்பிப்பெறுமாறு நிமால் சிரிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா என்ற கிரிமினல் அமைப்பைத் தண்டிப்பதற்கும் ஞானசார தேரர் என்ற சமூகவிரோதியை சிறையிலடைப்பதற்கும் இன்றைய நல்லாட்சி கும்பலிடம் போதுமான ஆதாரங்கள் உண்டு. இவர்களைத் தண்டனைக்கு உட்படுத்தாமை என்பது இலங்கையில் பேரினவாதத்தைப் பேணுவதற்கு இலங்கை அரசும் அதன் பின்னணியில் செயற்படும் ஏகாதிபத்திய நாடுகளும் விரும்புகின்றன என்பதற்கு பொதுபல சேனாவின் இருப்பு சிறந்த குறியீடு.
(பொது பல சேனா என்ற அமைப்பு நோர்வே நாட்டின் நிதியில் உருவாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள்:
பொது பல சேனா – நோர்வே,அமெரிக்கக் கூட்டுச் சதி – விலகும் மர்மம்)
தவிர ‘நல்லாட்சி’ அரசு உயர் பதவிகளில் உலா வர அனுமதித்துள்ள பல்வேறு சிங்கள பௌத்த பேரினவாதக் கிரிமினல்களும் விக்கியின் உரையை தமது பேரினவாத நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
வட மாகாண சபை முதலமைச்சர் எழுக தமிழ் என்ற நிகழ்வில் நிகழ்த்திய உரையைச் சிங்கள பேரினவாதக் கட்சிகள் தமது வாக்கு வங்கி அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்கின்றன. தமது சுய இலாபத்திற்காக சிங்கள மக்களை நச்சூட்ட ஆரம்பித்துவிட்டன.
தனது உரையின் ஆரம்பத்திலேயே விக்னேஸ்வரன் தான் இனவாதி அல்ல என்பதையும் சிங்களம் பேசும் மக்களும் தமிழ் பேசும் மக்களும் சுமூகமாக வாழ்வதற்கான சூழல் தோன்ற வேண்டும் எனக் குறிப்பிடுகிறார். இலங்கையின் ஒற்றையாட்சி அமைப்பை ஏற்றுக்கொள்ளும் அவர் தமிழ் பேசும் மக்களுக்கு சமஷ்டி முறையிலான குறைந்தபட்ச நிர்வாக அமைப்பு முறைக்கு ஏற்ப யாப்பு திருத்தி அமைக்கப்பட வேண்டும் எனக் கூறுகிறார்.
இலங்கை என்ற தீவை தமது வயிற்றுப் பிழைப்பிற்காகக் குட்டிச்சுவராக்கியவர்கள் பேரினவாதிகளே. தமது வாக்கு வங்கியை நிரப்பிக்கொள்வதற்காக ஆயிரமாயிரமாய் மனித உயிர்களைப் பலிகொடுத்த இப் பேரினவாதிகளே வன்னி இனப்படுகொலையின் சூத்திரதாரிகள். சமூகத்தின் மத்தியில் நடமாடக்கூட அனுமதிகப்பட முடியாத கிரிமினல்களும் மன நோயாளிகளும் இவர்களே.
இன்றும் சமூகத்தின் உயர் மட்ட அரசியல்வாதிகளாக இலங்கை அரசின் அனுசரணையுடன் உலாவரும் இச் சமூகவிரோதிகள் விக்னேஸ்வரனின் வெற்று முழக்கங்களைக்கூட தமக்குச் சார்பாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
தனது உரையில் விக்னேஸ்வரன் குறிப்பிட்டது இதைத்தான்:
“தமிழ் பேசும் மக்களும் சிங்கள மொழி பேசும் மக்களும் சுமூகமாக சம அந்தஸ்துடன் நல்லுறவுடன் இனியாவது வாழ்வதானால் வடக்கு கிழக்கு மாகாணத் தமிழ் பேசும் மக்களுக்கு அவர்களின் சுயநிர்ணய உரிமையை மதித்து சுயாட்சி வழங்குவதே ஒரே வழி. அதனால்த்தான் நாங்கள் சமஷ்டி ஆட்சி முறையை வலியுறுத்தி வருகின்றோம்.”
தமிழ் வாக்களர்களைத் திருப்திப்படுத்தும் நோக்குடன் சுய நிர்ணைய உரிமை சுயாட்சி என ஆரம்பிக்கும் விக்னேஸ்வரன் உடனடியாகவே கோருவது சுய நிர்ணய உரிமையை நிராகரிக்கும் சமஷ்டியை.
இன்று ஒடுக்கப்படும் தமிழர்களின் அடிப்படை ஜனநாயகமான சுய நிர்ணய உரிமைக்கான கோரிக்கை முன்வைக்கப்படும் அதேவேளை சிங்கள பேரினவாத நச்சு வேர்களைப் பலவீனப்படுத்தும் அரசியல் வேலைத்திட்டம் முன்வைக்கப்பட வேண்டும். பேரினவாதிகளைப் பலப்படுத்தும் அதே வேளை சுய நிர்ணய உரிமையை நிராகரிக்கும் சமஷ்டியை முன்வைப்பதால் வாக்கு வங்கியை உறுதிப்படுத்திக்கொள்ளலாமே தவிர, வேறு எதையும் பெரிதாகச் சாதித்துவிட முடியாது.