இலங்கையிலிருந்து பிரித்தானியா தனது நேரடிக் காலனியாதிக்கத்தை விலக்கிக்கொண்ட நாளான பெப்ரவரி 4ம் திகதி சுதந்திர நாளாகக் கொண்டாடப்படுகின்றது. சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு மட்டுமன்றி இலங்கையின் பெரும்பான்மைச் சிங்களம் பேசும் மக்களுக்கும் அது உண்மையான சுதந்திரதினமல்ல என்பது வேறு விடையம். 2018 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்ட சுதந்திர தினத்தில் பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் இலங்கைத் தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். அதன் போது நடைபெற்ற கருத்து மோதல்களின் பின்னர் தூதரகத்தின் வெளியே வந்த இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரியான பிரியங்க பர்னாண்டோ ஆர்பாட்டக் காரர்களுக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் சைகை காட்டிவிட்டு சாவகாசமாக தூத்ரகத்தின் உள்ளே சென்ற சம்பவம் உணர்ச்சி பூர்வமான அதிர்வலைகளை புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் இலங்கையில் சிங்கள மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தியிருந்தது.
இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த் வேளையில் இச்சம்பவம் சிங்கள ஊடகங்கள் பலவற்றில் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. வடகுக் கிழக்கிலும் தமிழ் ஊடகங்களில் சம்பவம் முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை.
சம்பவத்தைத் தொடர்ந்து தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்ட பிரியங்க உடனடியாகவே மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தமிழ்ச் செய்தி ஆர்பாட்டக்காரர்களால் எரிக்கப்பட்டதாகவும், இலங்கையின் தேசியக் கொடி எரிக்கப்பட்டதாகவும் குற்றம் சுமத்திய பிரியங்க, எமது தலைவர் பிரபாகரன், எமது மண் தமிழீழம் என்ற முழக்கம் எழுப்பிய போது, எல்லாம் முடிந்துவிட்டதாகவே சைகை காட்டியதாகவும் தன்னை விட நாடே முக்கியமானது என்றும் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அடிப்படையில் இலங்கையின் தேசியக் கொடிக்கும், மைத்திரிபால சிரிசேனவின் செய்திக்கும் இருக்கின்ற பெறுமானம் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் குறிப்பிட்டு தனது செய்கையை நியாயப்படுத்துகிறார்.
வன்னியில் சாரி சாரியாக மக்கள் கொலை செய்யப்பட்டு ஒரு தசாப்த காலம் அண்மித்துக்கொண்டிருக்கும் இன்றைய இந்த நாள் வரைக்கும் இலங்கையின் எந்தப் பேரினவாத அரசியல் வாதியும் அதற்கான பொறுப்புக் கூறும் எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை. குறைந்தபட்ச மனிதாபிமான அடிப்படையிலாவது அதனை அணுகுவதற்கு அதிகாரவர்க்கத்தின் எந்த அங்கமும் தயாரில்லை. போர்க்குற்றங்களுக்கான விசாரணை என்பது கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இனப்படுகொலையைத் திட்டமிட்டவர்களும், அதனை நேரடியாகச் செயற்படுத்தியவர்களும் இன்றும் இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதும் சுதந்திரமாக உலா வருகின்றனர். அதிபயங்கர மனிதப்படுகொலைகளை சாரிசாரியாக நடத்திய அத்தனை சமூக விரோதிகளும் இலங்கையின் ஆளும் வர்க்கத்தின் முக்கிய அங்கங்களாக இன்னும் ஆக்கிரமித்துள்ளனர்.
இலங்கை அரச இராணுவ அதிகாரமையங்களிடம் சரணடைந்தவர்கள் காணமல் போனவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இலங்கை அரசாங்கம் இவர்கள் தொடர்பான தகவல்கள் இல்லை என்கிறது. குறைந்தபட்சம் தனது சொந்தப் பிரசைகள் எனக் கூறிக்கொள்ளும் மக்களுக்கான ஆறுதல் வார்த்தைகளைகூட இலங்கை அரசு வெளியிட மறுக்கிறது.
இவை அனைத்தையும் மட்டுமல்ல பேரினவாதத்தின் குறியீடாகவே இலங்கை அரசின் தேசியக்கொடி இன்றுவரை தன்னை அறிவித்துக்கொள்கிறது. அதன் பின்னால் இரத்தம் தோய்ந்த மனிதப்படுகொலையின் வரலாறு பொதிந்துள்ளது. ஆயிரக்கணகான அப்பாவிகளின் அழுகுரல்கள் அதன் ஒவ்வோர் அசைவிலும் பொதிந்திருக்கிறது. இலங்கையில் மீண்டும் இனப்படுகொலை நிகழாது என்பதற்கான உறுதிப்பாட்டை அந்தக் கொடி தரவில்லை மாறாக மீண்டும் மனிதப் படுகொலைகளை நிகழ்த்திவிட்டு இலங்கையின் அதிகாரபீடத்தில் அமர்ந்துகொள்ளலாம் என்ற உத்தரவாதத்தை அந்தக் கொடி பேரினவாதிகளுக்கு வழங்கியிருக்கிறது.
இனப்படுகொலைகளுக்குப் பொறுப்புக் கூறும் வரை, போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை, மீண்டும் இன்னொரு மனிதப்படுகொலைக்கு சிறுபான்மைத் தேசிய இனங்கள் உட்படுத்தப்பட மாட்டது என்பதை உறுதிப்படுத்தும் வரை இலங்கையின் தேசியக் கொடியை எரித்துச் சாம்பலாக்குவதற்கு ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை உண்டு. மைத்திரிபால சிரிசேனவின் செய்தியை அழிப்பதற்கான அத்தனை தார்மீக உரிமையும் உண்டு.
பிரியங்க கழுத்தை அறுப்பது போன்று சைகை காட்டுவது புதிய ஒன்றல்ல. நல்லாட்சி என்ற ஆரம்பிக்கப்பட்ட இலங்கை அரசு அதனை எப்போதோ தமிழ் மக்களை நோக்கிக் காட்டிவிட்டது. தமிழ்ப் பகுதிகளில் வீதிகள் புனரமைக்கப்படுவதையும், புதிய கட்டடங்கள் தோன்றுவதையும் பெருமையாகப் பேசிக்கொள்ளும் பிரியங்கவும் அவரை உருவாக்கிய பேரினவாதமும் அச்சத்தின் மத்தியில் ஒரு சமூகத்தை வாழ நிர்பந்திக்கிறார்கள் என்பதை ஏற்றுகொள்வதில்லை. வன்முறையை நியாயப்படுத்தும் இலங்கை அரசும் அதன் அங்கங்களும் சமாதானத்தையும் சகவாழ்வையும் போதிப்பது மனித குலத்திற்கு விரோதமானது.
சிங்கள பவுத்த பேரினவாதிகளுக்கு மாறாக சிங்கள மக்களின் ஒரு பகுதியினர், குறிப்பாகச் சில ஊடகங்கள் பிரியங்கவின் செயலைக் கண்டித்திருந்தமை எதிர்காலத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தவல்லது. இதன் மறுபக்கத்தில் வடக்கிலும் கிழக்கிலும் பிரியங்கவின் மிரட்டலை மீறி நாளாந்த வாழ்வியல் பிரச்சனைகளே மக்கள் பிரதானமாகக் கருதியிருந்தார்கள். புலம்பெயர் அமைப்புக்கள் மீதான நம்பிக்கையின்மையும் இதன் மற்றுமோரு காரணமாக அமைந்திருக்கலாம்.
தமது ‘தேசிய’ வியாபாரத்திற்கான வெளிச்சம் கிடைத்துவிட்டதாகக் கருதிய புலம்பெயர் அமைப்புக்கள் மீண்டும் உற்சாகமடைந்துவிட்டன. தாம் சர்வதேசக் காய் நகர்த்தல்களில் வெற்றியடைந்துவிட்டதாகக் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிட்டன. இனப்படுகொலையை இலங்கையில் மட்டுமன்றி உலகம் முழுவதும் முன்னின்று நடத்திய மேற்கு ஏகாதிபத்திய அரசுகளிடம் சரணடைந்து போர்க்குற்ற விசாரணை நடத்தி ராகபக்ச உட்பட்ட மனித குல விரோதிகளை அந்த அரசுகளும் ஐ.நாவும் இணைந்து தூக்கில் போடப்போவதாக மக்களை ஏமாற்றிவந்த அமைப்புக்கள் இன்று பிரியங்கவும் மைத்திரியும் தூக்கில் தண்டிக்கப்படப்போகிறார்கள் என்ற எல்லை வரை பிரச்சாரங்களை முடுக்கிவிட்டன.
இலங்கையில் பேரினவாதம் தனது செயற்பாட்டை அதிகரிக்கும் போதும், பேரினவாதிகள் தமது கோரத்தை வெளிப்படுத்தும் போதும் புலம்பெயர் அமைப்புக்களுக்கும், தமிழ் நாட்டின் இனவாதிகளுக்கும் அரசியல் நடத்துவதற்கான பொன் முட்டை கிடைத்துவிடும். அதே வேளை இலங்கையில் வாழும் ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களி அவல நிலை அதிகரிக்கும். இந்தப் புள்ளியில் தான் புலம்பெயர் தமிழர்களுக்கும் இலங்கையில் வாழும் தமிழ்ப் பேசும் மக்களுக்கும் இடையேயான இடைவெளியும் அதிகரிக்கிறது என்ற ஆபத்தான நிலை தோன்றுகிறதுஎன்பது வேறுவிடயம்.
சிங்கள் மக்கள் மத்தியிலிருக்கும் ஒரு சிறிய பிரிவாவது பிரியங்கவைக் கண்டித்திருப்பது நேர்மறையான பேரினவாதிகளுக்கு எதிரான சூழல்.
உண்மையில் நடந்தது என்பது குறித்தும், தமிழர்களை மிரட்டும் பேரினவாத அச்சம் குறித்தும்,இனப்படுகொலையின் கோரம், போர்குற்றம், போர்க்குற்றவாளிகள் என்பன எல்லம் குறித்தும் சிங்கள மக்களிடம் பேசுவதற்கான நுளை வாசலாக அதனைப் பயன்படுத்திக்கொண்டிருக்கலாம்.
அவ்வறான உரையாடலும் அதனைத் தொடர்ந்த வேலைத்திட்டமுமே மகிந்த, மைத்திரி போன்ற பேரினவாதிகளை மட்டுமல்ல பேரினவாத ஆட்சி முறையையும் ஆட்டம் காணச் செய்யும். இலங்கையில் பேரினவாதிகள் பலமடைவது தமது அரசியலுக்குச் சாதகமான சூழலாகக் கருதும் புலம்பெயர் ‘தேசிய’ வியாபாரிகள் அவற்றையெல்லாம் கண்டுகொள்ளப் போவதில்லை. மீண்டும் பேரினவாத அரசைப் பலப்படுத்தி முழு சிங்கள மக்களையும் அன்னியப்படுத்தும் அழிவு அரசியலையே முன்னெடுப்பார்கள் என்பதும் மக்கள் விரோதச் செயற்பாடுதான்.
தாம் வாழும் புலம்பெயர் நாடுகளின் ஏகபோக அரசுகளைப் பிடித்துவந்து பேரினவாதிகளைத் தண்டிக்கப் போவதாக இவர்கள் காட்டும் பூச்சாண்டி அழிவுகளை மட்டுமே ஏற்படுத்தும்.