புலம்பெயர் தமிழ் அமைப்புக்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதத் தாம் எதிர்ப்பதாக இலங்கையின் மின்வலு அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமைய என்ற பௌத்த அடிப்படைவாதக் கட்சியின் தலைவருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அவ்வாறான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வது பயங்கர வாதத்தையும், இனவாதத்தையும் மீண்டும் தூண்டக்கூடும்.
அரசாங்கத்திற்குள் இது குறித்து; பேச்சுவார்த்தைகள் இடம்பெறவில்லை, பாதுகாப்பு அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் மூலமாக தடைசெய்த அமைப்புகளுடன் இவ்வாறான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது சமாதானத்தை ஏற்படுத்தும் என நாங்கள் கருதவில்லை.
இந்த விடயங்களுக்கு தீர்வை காணவேண்டும் என்றால் தமிழர் தரப்புகள் ஓற்றையாட்சி முறையை ஏற்றுக்கொள்ள வேண்டும்,அவர்கள் தமிழ் ஈழ கோரிக்கையில் உறுதியாக உள்ள நிலையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்வை காணமுடியாது, அது குறுகிய அரசியல் இலாபங்களை பெறுவதற்கான முயற்சியாகும்.
புலம்பெயர் தமிழர்களுடனான பேச்சுவார்த்தை என்பதை தமிழ் இனவாதிகளும் சிங்கள இனவாதிகளும் முற்றாக எதிர்க்க ஆரம்பித்துள்ளனர். இவர்கள் இரு தரப்பினரும் எதிர்ப்பதற்கு முன்வைக்கும் காரணங்கள் ஒரே வகையானவை. தமிழீழம் தவிர வேறு எதனையும் பேச மாட்டோம் என தமிழ் இனவாதிகளும், தமிழீழம் என்பதால் பேச மாட்டோம் என சிங்கள இனவாதிகளும் தமது வியாபாரத்தை ஆரம்பித்துள்ளனர்.
இப் பேச்சுக்களின் பின்னாலுள்ள அரசியல் காரணங்கள் என்ன என்பதையும் அதன் அடிப்படையில் பேச்சுக்களின் எதிர்கால விளைவுகள் என்ன என்பதையும் இன வாத நோக்கங்களுக்கு அப்பால் முன்வைப்பதற்கும் அதன் அடிப்படையில் பேச்சுக்களை நிராகரிப்பதற்கும் தமிழர் தரப்பில் தலைமைகள் இல்லை.
தமிழ்ப் பகுதிகளில் சமாதானமான சூழலை ஏற்படுத்தி அங்கு பன்நாட்டு மூலதனத்தைக் கொண்டு சென்றாலே அபிவிருத்தி ஏற்படும் என்று சுமந்திரன் காதில் பூச்சுற்றுகிறார். ஏற்கனவே பன்நாட்டு நிறுவனங்களின் கொள்ளையால் சுன்னாகம் சார்ந்த பிரதேசம் முழுவதும் அழிக்கப்பட்டுள்ளது. வெலிவேரிய என்ற சிங்களக் கிராமத்தில் பன்நாட்டு நிறுவனத்தின் சூறையாடலுக்கு எதிராகப் போராடிய மக்களுக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் போராடும் சிங்கள மக்களோடு மட்டுமே நல்லிணக்கம் என்ற முழக்கத்தை முன்வைக்க புலம்பெயர் அமைப்புக்கள் தயாரில்லை.
அவ்வாறான அரசியல் முன்வைக்கப்பட்டால் மட்டுமே காலத்தின் ஓட்டத்தில் சம்பிக்க ரணவக்க போன்றவர்களை மட்டுமல்ல சுமந்திரன் போன்றவர்களையும் அரசியலிலிருந்து அகற்றலாம். சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்திற்கு சிங்கள ஒடுகப்படும் மக்களின் நல்லிணக்கமும் கிடைக்கும்.
இதனை விடுத்து ஐ.நா மற்றும் அமெரிக்கா போன்ற ஏகபோக அதிகார மையங்களின் கைகளில் போராட்டத்தை ஒப்படைத்துவிட்டு இன்று இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகப் பேச மறுக்கும் புலம்பெயர் அமைப்புக்கள் இலங்கை அரசு வழங்கும் பிச்சைக்குக் காத்திருக்கிறார்கள். ஒரு புறத்தில் இனவாதமும் மறுபுறத்தில் பணப் பிச்சைக்கான காத்திருப்பும் தமிழ் மக்களின் பெயரால் நடந்துகொண்டிருக்கிறது.