ஈழத்தில் நடைபெறும் அழிவுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மக்கள் பற்றுடன் செயற்படுபவர்களில் கலம் மக்ரே என்ற சனல் 4 ஊடகவியலாளரும் ஒருவர். தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சனைகளையும் அவர்கள் மீதான ஒடுக்குமுறைகளையும் சிங்கள மக்களிடமிருந்து மறைத்துவரும் இலங்கை அரசு சிங்கள மக்களுக்குத் தமிழ் மக்களின் போராடங்களைப் பயங்கரவாதமாகக் காட்டிவருகிறது. ஊடகங்கள், அரசியல் வாதிகள் என்ற அனைத்துத் தரப்பும் சிங்கள மக்களுக்கு உண்மைகளை மறைத்து இன வெறியைத் தூண்டி வருகின்றன.
இறுதிப் போரில் தமிழ் மக்களைப் புலிகளிடமிருந்து காப்பாற்றி நாட்டையும் பாதுகாத்திருக்கிறோம் என்று ராஜபக்ச அரசு கூறிவந்தது. ரனில் அரசும் அதையே கூறி வருகிறது. பிரித்தானிய அமெரிக்க ஏகாதிபத்திய நாடுகளும் இதனையே கூறி வருகின்றன.
உண்மையைச் சிங்கள மக்களுக்குக் கூறினால் பேரினவாதிகள் வலுவிழப்பார்கள் என்ற உண்மையைப் புரிந்துகொண்ட கலம் மக்ரே தனது ‘no fire zone’ ஆவணப்படத்தைச் சிங்கள மொழியில் வெளியிட்டார்.
தனது வெளியீடை இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்குச் சென்ற மைத்திரிபால சிரிசேனவிடம் கலம் மக்ரே வழங்க முற்பட்ட போது மைத்திரிபால அதனை நிராகரித்தார். அவருடன் சென்ற வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீரவும் அதனை கலம்மக்ரேயைக் கண்டுகொள்ளவில்லை.
மைத்திகுழுவிற்குப் பாதுகாப்பு வழங்கிய போலிசார் கலம் மக்ரேயைத் துரத்தும் வரைக்கும் அவர் தனது படைப்பை மைத்திரிக்கு வழங்குவதற்கு முனைந்தார்.
பேரினவாத்த்திற்குத் தீனிபோடும் புலம்பெயர் மற்றும் தென்னிந்தியப் பிழைப்பு வாதிகளின் முன்னால் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதையும் சுய நிர்ணைய உரிமைக்கான தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும் என்றும் நேர்மையாகச் செயற்படும் கலம் மக்ரே பல மடங்கு மேலானவர்.