730/= சம்பளத்தை ஏற்றுக் கொள்ளாத தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து மக்கள் போராட்டத்தை வழிநடத்த வேண்டும். -மலையக சமூக நடவடிக்கை குழு
தோட்டத் தொழிலாளர்கள் 730/= சம்பள உயர்வை எந்த காரணத்திற்காகவும் ஏற்றுக் கொள்ளக்கூடாது. தொடந்து 1000/= சம்பளத்திற்காக போராட வேண்டும். அத்தோடு வேலை குறைப்பு அதாவது ஒரு வாரத்தில் 3 அல்லது 4 நாள் என வேலை நாட்கள் குறைப்பு, நிலுவை சம்பளத்தை வழங்க மறுக்கின்றமை என்பவற்றுக்கு தொழிலாளர்கள் தமது எதிர்ப்பை காட்ட வேண்டும். இவ்வாறன நிபந்தனைகளுடன் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் அது பெருந்தோட்டத் தொழிற்துறையையும் அத்துறையை வாழ்வாதாரமாக கொண்டுள்ள 250000 குடும்பங்களையும் பாரிய நெருக்கடிக்கு உள்ளாக்கும். இதனை உணர்ந்து இந் நிபந்தனைகளை எதிர்க்கும் அனைத்து தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும், தனிநபர்களும் ஒன்றிணைந்து மக்களோடு மக்களாக நின்று தொடர்ந்து போராட வேண்டும் என மலையக சமூக நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்புக் குழு குறிப்பிட்டுள்ளது.
பொருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு 18 மாதங்கள் வரை இழுத்தடிக்கப்பட்டு, இன்று மக்கள் 1000/= சம்பள உயர்வை கேட்டு வீதிக்கு இறங்கி போராடும் நிலையில் ஏற்கனவே 830ஃஸ்ரீ சம்பள அதிகரிப்பு வழங்க உன்பட்டிருந்த நிலையில் தற்போது வெறும் 730/= என்ற நாட் சம்பள உயர்வுடன், வேலைநாட்களை குறைப்பு, நிலுவை சம்பளம் இன்மை, கடுமையான வேலை நிபந்தனை என்பனவும் கூட்டு ஒப்பந்தத்தில் இடம்பெற உள்ளமை தொடர்பாக மலையக சமூக நடவடிக்கைக்கு குழு 09.10.2016ஆம் திகதி ஹட்டனில் நடத்திய கலந்துரையாடலின் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன:
1. பெருந்தொட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளம் ரூபா 1000 மாக அதிகரிக்கப்பட வேண்டும்.
2. 2003ம் ஆண்டு பெருந்தோட்டத்துறைக்கான பிரதான கூட்டு ஒப்பந்தத்தினதும் அதற்கு பின்னர் கைசாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தங்களினதும் ஏற்பாடுகளின் படி இருந்த,
அ) தொழில் நிபந்தனைகள் அதிகரிப்படக் கூடாது. பழைய சம்பளத்தை விட மாதாந்தம் கிடைக்க வேண்டிய சம்பளத்தை குறைக்கும் விதத்தில் எவ்வித ஏற்பாடுகளும் செய்யப்படக் கூடாது.
ஆ) வேலை வழங்கும் நாட்கள் குறைக்கப்பட கூடாது.
இ) அதிகரிக்கப்படவுள்ள சம்பளத்தின் அடிப்படையில் 2015ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட சம்பளப் பாக்கி (நிலுவை சம்பளம்) வழங்கப்பட வேண்டும்.
3. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை சம்பள உயர்விற்கான உடன்பாடு எற்படுத்தப்பட வேண்டும் என்ற கால இடைவெளி எக்காரணத்திற்காகவும் அதிகரிப்படக் கூடாது.
இந்த கோரிக்கைகளுடன் உடன்பாடடுடைய தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள், தனிநபர்களும் ஐக்கியப்பட்டு செயற்பட மலையக சமூக நடவடிக்கைக் குழு அழைப்பு விடுத்துள்ளது.