பிரித்தானியாவின் பொருளாதாரம் 11.3 வீதத்தால் இந்த ஆண்டு வீழ்ச்சியடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கடந்த 300 வருடங்களில், இரண்டு உலக யுத்தங்கள், மற்றும் பெரும் தொற்று போன்ற காலங்களின் போது கூட இந்த அளவிற்கு பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததிருக்கவில்லை. மில்லியன் கணக்கானவர்கள் வேலையற்றவர்கள் ஆக்கப்படுவார்கள் என மற்றொரு கணிப்புக் கூறுகிறது.
இதன் இடையே கொரோனா நோய்த் தொற்று இன்னும் அதிகரித்தவாறே நாடு நகர்ந்து செல்கிறது. 14 வீதமான பெரும் தெருக் கடைகள் மூடு விழா நடத்தியுள்ளன. இன்னும் சில வாரங்களில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் பிரித்தானியாவிற்கு அமெரிக்காவும், இந்திய அடிமைகளும் மட்டுமே துணை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
லண்டனுக்கு அருகாமையில் அமைந்துள்ள தொழில் நகரமான குருவைடனை நிர்வகிக்கும் மாநகராட்சி உட்பட 5 வீதமான நகராட்சி சபைகள் மேலும் செயற்படமுடியாத அளவிற்கு நிதி நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றன. பாடசாலைகளின் இலவச உணவுத் திட்டத்தை நிறுத்திய இன்றைய வலதுசாரி அரசு, மாநகராட்சிகளுக்கு மேலதிக நிதி வழங்கலை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
மொத்த உள் நாட்டு உற்பத்தி 4 வீதத்தால் வீழ்ச்சியடையும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியேற்றத்தால் மேலும் 2 வீதம் வீழ்ச்சியடையும் என எதிர்வுகூறப்படுகிறது.
நோய்த்தொற்றின் தாக்கத்தின் பின்னர் 15.2 மில்லியன் பிரித்தானியர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில் இத் தொகை மேலும் அதிகரிக்கும் எனக் கணிக்கப்படுகிறது.
பிரித்தானியாவின் வீழ்ச்சி ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் போன்ற அரசுகளின் பிரிவினையில் ஆரம்பிக்கும் நிலை ஏற்படுவது மட்டுமன்றி, தெற்காசியாவின் ஆதிக்கப்போட்டிக்கான யுத்தத்தில் பிரித்தானியா தன்னை உள் நுளைத்துக்கொள்ளும் சூழல் தோன்றும்.
இவற்றின் நடுவே தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதி உரிமை கோரியவர்களை தனி விமானங்களில் பிரித்தானிய அரசு சொந்த நாடுகளுக்குத் திருப்பியனுப்பி வருவது மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கண்டனத்திற்கு உள்ளானது.