07/12/2015 அன்று வடமாகாண சபை நிபுணர் குழுவால் சுன்னாகம் மக்கள் ஏமாற்றப்பட்ட நிகழ்வு வரலாற்றில் கறைபடிந்த சம்பவம். இலங்கைப் பேரினவாத அரசு மக்களைச் சாரி சாரியாகப் படுகொலை செய்திருக்கிறது; தேசிய இனச் செறிவை அழிக்க திட்டமிட்ட குடியேற்றங்களை நடத்தியிருக்கிறது; வளங்களைச் சூறையாடியிருக்கிறது; கல்வி, பண்பாடு போன்றவற்றைச் சிதைத்திருக்கிறது; இராணுவச் சிறைக்குள் மக்களை வாழ நிர்ப்பந்திக்கிறது. ஆனால், முததடவையாக நீரையும் நிலத்தையும் அழித்து இனச் சுத்திகரிப்பைத் துரிதப்படுத்திய சம்பவம் செம்மண் வளம் கொழிக்கும் சுன்னாகத்தை மையப்படுத்தியே ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தடுத்து நிறுத்தவும், தொடர்ந்து இவ்வாறான அழிவுகளை நிறுத்தவும் பல்வேறு சமூகச் செயற்பாட்டாளர்கள் போராடினார்கள்.
இனியொரு… சுன்னாகம் அழிவு தொடர்பாக கடந்த ஒரு வருடங்களுக்கும் மேலாக கருத்துப் போரை நடத்திவருகிறது. சுன்னாகம் அழிவின் சூத்திரதாரிகளில் ஒருவரான பிரித்தானிய ஆளும் கட்சியின் ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களை இனியொரு ஆதரித்து பங்களித்தது.
புலம்பெயர் நாடுகளில் தேசியம் வளர்பதாகக் கூறும் ஊடகங்கள், அரசியல் அமைப்புக்கள் போன்ற எவையும் சுன்னாகத்தில் நீரும் நிலமும் அழிக்கப்படுவது தொடர்பாக மூச்சுக் கூட விடவில்லை. இலங்கையிலிருக்கும் ராஜபக்சவைத் தண்டிக்கப் போவதாக மக்களை ஏமாற்றிய புலம்பெயர் அமைப்புக்கள் தமது கொல்லைப் புறத்தில் உலாவந்த நிர்ஜ் தேவா என்ற அழிவுகளின் சூத்திரதாரியை கண்டுகொள்ளக்கூட மறுத்தன.
இந்த நிலையில் வடமாகாண சபையின் முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன், சுன்னாகம் அழிவிற்குக் காரணம் கழிவு எண்ணை வெளியேற்றமல்ல என்ற அறிக்கையை ஊடகங்களுக்கு விடுத்திருந்தார். அவர் முன்னே ஆய்வுகளும், நேரடி ஆதாரங்களும் காணப்பட அவற்றை நிராகரித்து வெளியிடப்பட்ட அறிக்கை உள் நோக்கங்களைக் கொண்டதா என்ற சந்தேகங்கள் எழ ஆரம்பித்தன.
விக்னேஸ்வரன் இனப்படுகொலைத் தீர்மானத்தை நிறைவேற்றிய போது அதனை ஆதரித்த இனியொரு அவரின் சுன்னாகம் தொடர்பான புனைவுகள் கலந்த அறிக்கையின் பின்னரே விக்னேஸ்வரனை விமர்சிக்க ஆரம்பித்தது.
தனிமனிதர்களது சொந்த வாழ்க்கை தொடர்பாக விமர்சிப்பதைத் தவிர்க்கும் இனியொரு விக்னேஸ்வரனின் அரசியல் தொடர்பாக விமர்சிக்க ஆரம்பித்தது.
சுன்னாகம் பேரழிவை நடத்திய நிறுவனத்தின் நோக்கங்களுக்கு ஆதரவாக வெளியான அரசியல் தலைவர் ஒருவரின் முதலாவது அறிக்கை விக்னேஸ்வரன் வெளியிட்ட அறிக்கையே.
எதிர்பார்த்தது போலவே விக்னேஸ்வரனின் தன்னிச்சையான அறிக்கையின் பின்னர் வடமாகாண சபை நியமித்த நிபுணர் குழு இரண்டு தடவையும் ஏற்கனவே வெளியான அறிக்கைகள் குறித்து கருத்தில் கொள்ளாமல், சுன்னாகம் நீரில் கிறீஸ் மற்றும் எண்ணைப் பொருட்கள் இல்லையென போலி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
சுன்னாகம் அனல் மின்னிலையத்தை நடத்தி தமிழ்ப் பேசும் மக்களின் வரலாற்றில் இதுவரை நடந்திராத புதிய அழிவுகளைத் திட்டமிட்ட பல்தேசிய வர்த்தக நிறுவனம் எம்.ரி.டி வோக்கஸ்.
அது தனது தலைமைகத்தை மலேசியாவில் கொண்டுள்ளது. எம்.ரி.டி கப்பிடல் என்ற தாய் நிறுவனத்தின் பிரதான செயற்பாடுகளில் கழிவுகளை வெளியேற்றுவதும் ஒன்றாகும்.
கப்பல்களிலிருந்து வெளியேற்றப்படும் அதிபார டீசலை கடற்பரப்பில் வெளியேற்றக்கூடாது என்பது சர்வதேசச் கடற்பயண சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை வெளியேற்றி எரித்து அகற்றும் செயற்பாட்டை எம்,டி,ரி கப்பிட்டலின் துணை நிறுவனங்கள் நடத்திவந்தன.
சுன்னாகத்தில் பயன்படுத்தப்பட்ட அதிபார டீசல் என்பது கப்பல்களிலிருந்து வெளியேற்றப்பட்ட உச்சபட்ச நச்சுத்தன்மை வாய்ந்த கழிவு டீசலா என்பதை ஆய்வுகளே தெளிவுபடுத்த வேண்டும்.
அரசியல் நோக்கம்…
இனியொரு… அரசியல் சுயலாபத்திற்காகவே விக்னேஸ்வரனை விமர்சிப்பதாக சமூகவலைத்தளங்களிலும், மின்னஞ்சல்களிலும், பின்னூட்டங்களிலும் பலர் தெரிவித்திருந்தனர். அரசியல் இலாபம் என்றால் என்ன? விக்னேஸ்வரனுக்கு எதிராக வாக்குக் கேட்பதுவா இனியொருவின் நோக்கம். அல்லது எங்காவது ஒரு இடத்தில் பணம் பெற்றுக்க்கொள்வதா?
ஒரு பேரழிவை எச்சரிப்பதும், அதனைத் தேசியத்தின் பெயரால் திசைதிருப்புபவர்களை மக்கள் மன்றத்தில் நிறுத்துவதும் தவறாகாது. அது தேவையானதே.
லைக்கா நிறுவனத்தை விமர்சித்த போது நேரடியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட இரண்டு ஊடகங்களுள் இனியொருவும் ஒன்று. சுன்னாகத்தில் அழிவை ஏற்படுத்திய நிர்ஜ் தேவாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கையை இனியொருவின் ஆதரவுடன் முன்னெடுத்துவருகிறோம்.
சுமந்திரன் போன்றவர்கள் தமது அரசியலை வெளிப்படையாகவே முன்வைக்கிறார்கள். தாம் பேரினவாத அரசுடன் இணைந்து செயற்படுவதாக அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். இங்கு சுமந்திரன் மற்றும் அவர் சார்ந்த அதிகாரவர்க்கத்திற்கு எதிரான அரசியல் தலைமையை உருவாக்குவதே இன்று சமூக அக்கறையுள்ளவர்களது கடமை. அவ்வாறான அரசியல் தலைமை ஈழத்தில் தோன்றுவதற்கு ஒடுக்குமுறை உந்துசக்கதியாகும், அதேவேளை தேசியத்தின் பெயரால் அதிகாரவர்க்கத்தின் அடியாட்களாக செயற்படுபவர்கள் அவ்வாறான அரசியல் தலைமையின் தோற்றத்திற்கு தடையாக அமைகிறார்கள். அழிவுகளை மக்கள் அறியாமலே நடத்துகிறார்கள். ஆக, முப்பது வருடங்களுக்கும் மேலான அழிவுகளைச் சந்தித்த நாம் இனிமேலும் புற்றுநொய்களை அனுமதிப்பது தவறானது. கருத்தியல் தளத்தில் அவை எதிர்கொள்ளப்பட வேண்டும்.
தேவையானால் விக்னேஸ்வரனும் அவரது சகபாடியான ஐங்கரநேசனும் தம்மைச் சுய விமர்சனம் செய்துகொண்டு, சுன்னாத்தில் மையப்படுத்தி நடத்தப்படும் அழிவுகளை நிறுத்த வேண்டும்.
எம்.டி.ரி வோக்கஸ் நிறுவனத்திற்கு வட மாகாண சபை பச்சைக்கொடி காட்டியுள்ளது. நாளை எந்த அச்சமுன் இல்லாமல் நாட்டின் எந்தப்பகுதியையும் அந்த நிறுவனம் நாசப்படுத்தலாம்.
உப்பின் விலை அதிகரித்தால் மக்கள் அரசை நொந்துகொள்வார்கள். ஆக, உப்பிலும் அரசியல் உண்டு, நிலைமை அவ்வாறிருக்க முள்ளிவாய்க்காலின் பின்னர் திட்டமிட்டு நடத்தப்படும் சுன்னாகம் பேரழிவில் அரசியல் இல்லை என்பது தவறானது. மக்கள் சார்ந்த அரசியலே அதனை எதிர்கொள்ள முடியும்.
என்ன செய்வது…
இலங்கை அரசின் பகுப்பாய்வுத் திணைக்களம் நடட்திய ஆய்வுகளில் 30 கிணறுகளில் கிரீசும் எண்ணையும் காணப்படுவதாக ஆதாரபூர்வமாக கண்டறியப்பட்டுள்ளது, வடமாகாண சபை இப்பிரச்சனையில் மூக்கை நுளைப்பதற்கு முன்பே அரச ஆய்வுக்ள் தெளிவாக டீசல் காணப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது.
ஆக, இனிமேல் ஆய்வுகள் தேவையற்றவை.
-எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனத்திற்கும் அதன் இயக்குனர்களுக்கும் எதிராக சர்வதேச அளவில் சுற்றுச் சூழல் குற்றவியல் வழக்குகள் தாக்கல்செய்யப்பட வேண்டும்.
-மக்களை அணிதிரட்டி இலங்கை அரசிற்கும் வட மாகாண சபையின் காட்டிக்கொடுப்பிற்கு எதிராகப் போராட வேண்டும்.
-அழிவுகள் நடைபெற்ற போது மின்வலு அமைச்சராகச் செயற்பட்ட பட்டாலி சம்பிக்க ரணவக்கவைப் பதவி விலகக் கோரும் போராடங்கள் நடத்தப்பட வேண்டும்
– நச்சு நீரைச் சுத்திகரிப்பதற்கான நடவடிக்கையை எம்.ரி.டி வோக்கஸ் இடமிருந்த நட்ட ஈடு பெற்று மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
– முள்ளிவாய்காலின் பின்னர் நடத்தப்படும் மிகப்பெரிய அழிவு சுன்னாகத்திலேயே ஆரம்பித்துவைக்கப்பட்டது என்ற உண்மை மக்கள் மத்தியில் எடுத்துச்செல்லப்பட வேண்டும்.
அண்மைய பல பின்னூட்டங்களில் சுமந்திரனிற்கும், இனியொருவிற்குமான தொடர்பு பற்றி விமர்சிக்கப்படுகிறது. சுமந்திரனிற்கும், இனியொருவிற்குமான ஒற்றுமை இரு பகுதியினருமே சிங்கள, முஸ்லீம் மக்களையும் இணைத்தே தமிழர்களின் உரிமைப்போர் வெல்லப்படவேண்டும் என்பது. ஆனால் சுமந்திரனின் இணக்கப்பாடு என்பது வெறும் மேல்மட்ட அரசியல்வாதிகளினுடதானது, ஆனால் இனியொருவின் நிலையானது அடிமட்ட உழைக்கும் மக்களிடத்தில் கீழ்மட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டும் என்பது. எனது கருத்து இரு மட்டங்களிலும் இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு நியாயப்பாடு கொண்டுசெல்லப்படவேண்டும். மாறாக இனவாதம் எதனையும் சாதிக்காது
“இனியொருவின் நிலையானது அடிமட்ட உழைக்கும் மக்களிடத்தில் கீழ்மட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டும் என்பது. எனது கருத்து” நானும் இதையே எதிர்பார்கிறேன். இனியொரு இதை கருத்தில் கொள்வது மிக அவசியம்.
கட்டுரையில் சில குறைபாடுகள் உள்ளன.
1. அழிவுகள் நடைபெற்ற போது மின்வலு அமைச்சராகச் செயற்பட்ட பட்டாலி சம்பிக்க ரணவக்கவைப் பதவி விலகக் கோரும் போராடங்கள் நடத்தப்பட வேண்டும் என்ற வாதம் தவறானது. அரசியல் ரீதியாக பட்டாலி சம்பிக்க ரணவக்கவின் கொள்கைகளுடன் நான் முரண்பட்டாலும் அவரது இனவாத செயற்பாடுகளை வெறுத்தாலும் உடனடியாக எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனத்தின் மின்னுற்பத்தியை குடாநாட்டில் நிறுத்தியது அவரே.
2. கட்டுரையில் சுமந்திரன் வேண்டுமென்றே இழுக்கப்பட்டிருக்கிறார். அவர் இதுவரை இந்தப் பிரச்சினையில் கருத்தேதும் சொல்லாவிட்டாலும் கூட. (அவர் எல்லா விடயங்களிலும் கருத்துச் சொல்கிறார் ; ஏன் இந்த விடயத்தில் மௌனமாக இருக்கிறார் என்று கேட்டிருந்தாலும் பரவாயில்லை.)
3. தண்ணீரில் எண்ணெய் கலப்பது திட்டமிட்ட இன அழிப்பு என்பது தவறான வாதம். மாறாக தமது லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு ஒரு நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் தூர நோக்கற்ற நடவடிக்கையாகும். இதற்கு வட மாகாண சபையும் துணை போகிறது. ஆனால் இதன் விளைவாக குடாநாட்டின் விவசாயம் அழியவும் மக்கள் குடிநீர்ப் போத்தல்களில் தஞ்சமடையவும் நேரிடும்.
“உடனடியாக எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனத்தின் மின்னுற்பத்தியை குடாநாட்டில் நிறுத்தியது அவரே” முதலில் அவரே இலங்கை மின்சாரசபையிடம் இவர்களிடமிருந்து மின்சாரம் பெறவேண்டாம் என்று கட்டளையிட்டார்!
இவற்றைப்பற்றி மீள் ஆய்வுகள் செய்து தொடர்ந்து நீரின் தன்மையை அளந்து அறிந்து செயல் படவேண்டும்.
கண்ணால் கண்டதும் காதால் கேட்டதும் பொய். தீர விசாரித்து அறிந்ததே மேல். முதலில் வந்த நீர் வழங்கல் சபை யாழ் ஆய்வு முடிவுகள் 300 ஆல் வகுக்கப்படவேண்டும் என்பதில் உண்மை உள்ளதாகத் தெரிகிறது. இது பற்றி மேலும் ஆதாரங்கள் தேடவேண்டும். அதே நேரம் பின்பு கொழும்பில் செய்த நீர் பரிசோதிப்புகள் அதிக கிரீஸ்+ கழிவு எண்ணெய் இருந்தது என்று காட்டியுள்ளதையும் எடுத்து சரியான முடிவுக்கு வரவேண்டும்
நம் நீரில் இருந்த அதிக அளவு நைற்றைத் மேலும் பூஞ்ஜைகளும் கிரீஸ் எண்ணெய் என்பனவற்றை காலப்போக்கில் நொதித்து, நீர்நிலையை மற்ற உயிரினங்கள் வாழத் குடிக்கத் தகுதியுடையதாய் மாற்றும் இது இயற்கையாக மெதுவாக நடைபெறும்.
அகவே தொடர்ந்தும் நீரினை சரியான முறையில் பரிசோதித்து உண்மையை பகிர்வோம். ஒருவரை ஒருவர் தாக்குவதை தவிர்ப்போம்