பசில் ராஜபக்ச இன்று கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கினார். பல்லாயிரக்கணக்கான மக்கள் பசிலை வரவேற்பதற்காக விமான நிலையத்தைச் சுற்றி நின்று வரவேற்றனர். வரவேற்பில் பங்குபற்றிய பலர் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வாகனங்களில் அழைத்துவரப்பட்டனர். அவர்களுக்கு தலா 2500 ரூபாயும், மதிய உணவுப் பொதியும் வழங்கப்பட்டன. மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட மக்கள் வெள்ளத்திற்கு அவரிடமிருக்கும் திருட்டுப் பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை ஊழலை அழித்து தேனும் பாலும் ஓட்டுவதாக ஆட்சியதிகாரத்தைக் கையகப்படுத்திக்கொண்ட மைத்திரிபாலவும் ரனிலும் போட்டி போட்டுக்கொண்டு மகிந்தவை வாழ வைக்கவே முற்படுகின்றனர்.
பசில் இலங்கைக்கு வெளியிலிருக்கும் போது அவரைக் கைது செய்யப் போவதாக மார்தட்டிக்கொண்ட இலங்கை அரசு விமான நிலையத்தில் வீ.ஐ.பிக்கள் வெளியேறும் வழி ஊடாக வெளிவர அனுமதித்துள்ளது. தவிர, நான்கு மணி நேரத்திற்கும் மேலாக விமான நிலையத்திற்குச் செல்லும் வழிகள் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டிருந்தன.
விமானங்கள் தாமதமாகின. உலகின் மிகப்பெரும் கிரிமினல்களில் ஒருவருக்கு இவ்வளவு பாதுகாப்பும் வரவேற்பும் ஏன் என எண்ணியவர்கள் மறுபடியும் பேச அச்சப்பட்டனர்.
திவிநெகும திட்டத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்ய பசில் ராஜபக்ஸவை கைது செய்யுமாறு கடுவெல நீதவான் உத்தரவிட்டிருந்தார் என்ற போதும் பசில் அரச மரியாதையுடன் நாட்டிற்குள் புகுந்தார்.
அமெரிக்காவிலிருந்து பசில் எந்த அச்சமுமின்றி இலங்கைக்கு வந்திருப்பதன் பின்னணியில் மேற்கு ஏகாதிபத்தியங்களின் பங்கும் இருப்பதாக கருத இடமுண்டு. தவிர, இலங்கை மைத்திரி-ரனில் அரசுடன் குறைந்தபட்ச உடன்பாடும் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு.
நிலைமை இவ்வாறிருக்க மகிந்த ராஜபக்சவிற்கும் மைத்திரிபால சிரிசேனவிற்கும் இடையேயான சந்திப்பு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச சற்று நேரத்திற்கு முன் நிதிக் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
————————————————————————
குற்றவாளியை விசாரிக்காமல் கைது செய்ய முடியாது. சிலர் மகிந்த காலத்தில் கடத்திக் கொண்டு போய் கைது செய்ததுள்ளோம் என சொன்னது போல செய்ய வேண்டும் என சிலர் நினைக்கின்றனர். அதை மாற்றத்தான் நல்லாட்சி என ஆட்சிக்கு வந்தனர்.
இப்போது போலீசும் – ஊழல் அமைச்சு போன்றவையும் தனிப்பட்ட சுயாதீன திணைக்களங்களாக செயல்படுகின்றன. அதற்குள் அதிபர் – பிரதமர் தலையிடுவதில்லை.
———————————————–
செய்தி:-
பொலிஸ் பாரிய நிதிமோசடி குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டுள்ளார்.
——————————-
அவரைக் கடுவெல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பசில் ராஜபக்ஸவின் சட்டத்தரணி யூ.ஆர்.டி. சில்வா தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சருடன் மேலும் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிப்பதற்காக பொலிஸார் B அறிக்கையை தயாரித்து வருவதாகவும் சட்டத்தரணி யூ.ஆர்.டி. சில்வா கூறினார்.