கருணாநிதியின் ஊழல் பேரரசு தொடர்பாகவும், இலங்கை இந்திய அரசுகளுடன் அவர் நடத்திய இறுதிப் போர் நாடகங்கள் தொடர்பாகவும் இனியொரு உட்பட பல ஊடகங்கள் பல ஆதாரபூர்வமான தகவல்களைத் தெரிவித்திருந்தன. அதே வேளை பாரதீய ஜனதாக் கட்சியும், ஜெயலலிதவும் ஈழத் தமிழர்களுக்கு எதிராகச் செயற்பட்டு தமிழ் நாட்டில் அவர்களை ஒடுக்கிய சம்பவங்களும் ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டன. 80 களிலிருந்து ஈழப் போராட்டத்திலும் இலங்கையிலும் தலையிட்டு இந்திய அரசும் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளும் ஏற்படுத்திய சிதைவுகள் அறியப்படாதவையல்ல.
தமிழ் நாட்டின் உள்ளேயே வாழும் ஈழத் தமிழர்கள் மூன்றாம் தரப் பிரசைகளாக நடத்தப்படுகின்றனர்.
தமிழ் நாட்டில் ஈழம் பிடித்துத் தரப்போவதாகப் பிழைப்பு நடத்தும் சீமன் போன்ற சமூகவிரோதக் கும்பல்கள் அகதிகள் தொடர்பாக மூச்சுக்கூட விடுவதில்லை. தமிழ் நாட்டு மக்களையே சூறையாடும் பல்தேசிய வியாபாரக் கொள்ளையர்களுக்கு எதிராகவோ, இந்தியாவின் உள்ளேயே சுய நிர்ணைய உரிமைக்காகப் போராடும் தேசிய இனங்களுக்கு ஆதரவாகவோ இவர்கள் குரல்கொடுத்ததில்லை. இந்திய அரசுக்கோ அது பிரதிநிதித்துவம் செய்யும் பண முதலைகளுக்கோ இவர்கள் பிரச்சனைக்குரியவர்கள் அல்ல. தமது கொள்ளையையும் சூறையாடலையும் ‘தமிழ் உணர்வு’ என்ற தலையங்கத்தில் நியாயப்படுத்துவதற்கு இந்திய அரசிற்கு சீமான், வை.கோ போன்றவர்கள் தேவைப்படுகின்றனர். இதனால் இவர்களை இந்திய அரசும் அதன் கோர முகமான உளவுத்துறையுமே பின்னணியில் செயற்பட்டு இயக்கலாம் என்ற அனுமானத்திற்கு நாங்கள் வருகின்றோம். அதற்கு முன்னதாக உங்களுடைய எல்லைக்குள்ளேயே இந்திய அரசிற்குத் பாதிப்பை ஏற்படுத்தும் போராட்டங்களை நடத்துங்கள் என்று நாங்கள் பல தடவைகள் பொதுத் தளத்திலும் நேரடியகவும் கோரிக்கை விடுத்திருக்கிறோம்.
தமிழ் நாட்டில் கருணாநிதிக்கு மாற்றாக ஜெயலலிதா ஈழத் தமிழர்கள் மீது பற்றுக்கொண்டவர் என யாரும் கூற முடியாது, ஈழதில் நடப்பது பயங்கரவாதப் போர் எனவும் இலங்கை அரசு அதனை அழிக்க வேண்டும் என வெளிப்படையாகவே கூறியவர் ஜெயலலிதா. ஆனையிறவைப் புலிகள் முற்றுகையிட்ட வேளையில் அதனை விலக்கிக் கொள்ளாவிட்டால் இந்திய இராணுவம் தலையிடும் என வை.கோ ஊடாகப் புலிகளை மிரட்டியது பாரதீய ஜனதாக் கட்சியே.
இலங்கையில் இனப்படுகொலை நடந்துகொண்டிருந்த போது பாரதீய ஜனதாக் கட்சி ஒற்றை அறிக்கை கூட வெளியிட்டதில்லை. தமிழ் உணர்வாளர்கள் எனத் தம்மை அழைத்துக்கொள்ளும் ‘திராவிடச் சீர்திருந்தங்களுக்குக்’ கூட எதிரானவர்கள் காங்கிரசை எதிர்க்கிறோம் என்று பாரதீய ஜனதாவுடன் கூட்டுவைத்துக் கொள்கின்றனர்.
இந்திய மற்றும் தமிழக அரசியல் வாதிகள் அதிகாரவர்க்கத்தின் நிர்வாகிகள் மட்டுமே தவிர மக்களின் நண்பர்கள் கிடையாது. உலகின் அனைத்து அரசுகளுக்கும் இணையாக மக்கள் மீது அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டவர்கள் இவர்கள். இலங்கையிலும், தமிழகத்திலும் இனவாதக் குழுக்களை வளர்த்து ஈழப் போராட்டத்தை அழிப்பதில் இந்திய அரசின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது. இந்திய அமைதிகாக்கும் படை என்ற ஆக்கிரமிப்பு இராணுவம் வடக்கிலும் கிழக்கிலும் நடத்திய கொலைவெறியாட்டத்தை யாரும் மறந்துவிடவில்லை.வன்னிப் படுகொலைகளை நடத்தியது ராஜபக்ச மட்டுமல்ல. இந்திய அதிகாரவர்க்கமும் இணைந்து தான் மனிதர்களை சாரி சாரியாகக் கொன்று போட்டார்கள். இந்திய அதிராகவர்க்கத்தின் பிரதிநிதிகளே பாரதீய ஜனதாவும், காங்கிரசும், கருணாநிதியும், ஜெயலலிதாவும் அவர்களின் எடுபிடிகளான சீமான் வைகோ போன்றவர்களும்.
இந்தியா முழுவதும் இந்து மதவெறிக் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சி வெற்றிபெற்ற போது, தமிழ் நாட்டில் மட்டும் மக்கள் அக்கட்சியை எறெடுத்துக்கூடப் பார்த்ததில்லை. அக்கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட வை.கோ படு தோல்வியடைந்தார். தமிழகத்தில் நிலவும் திராவிடப் பாரம்பரியம் மதவாதக் கட்சிகட்சிகளுக்கு இடம் கொடுப்பதில்லை. இதனைப் புரிந்துகொண்ட இந்திய அதிகாரவர்க்கம் இந்திய உளவுத்துறை ஊடாக புதிய அரசியல் திட்டங்களை மேற்கொள்கிறது என்பதைப் பலர் இப்போது கூற ஆரம்பித்துள்ளனர்.
தமிழ் நாட்டில் மதவாதத்திற்கு எதிரான திராவிடப் பாரம்பரியத்தைத் ‘தமிழ் உணர்வு’ என்ற தலையங்கத்தில் அழிப்பதும், அதே தமிழ் உணர்வைப் பயன்படுத்தி பல்தேசிய வியாபார நிறுவனங்களில் கொள்ளையைத் தீவிரப்படுத்துவதும் இன்றைய அதிகாரவர்க்கத்தின் திட்டம்.
மதவாதத்திற்கு எதிரான அடிமட்டத் தொண்டர்களைக் கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தை அரசியலிலிருந்து அகற்றினால், பார்ப்பன மதவாதக் கட்சிகள் மட்டுமே எஞ்சும் என்பது ப.ஜ.க இன் கணிப்பீடு.
இதற்கு ஈழத் தமிழர்களின் அவலங்களும் பயன்படுத்தப்படுகின்றன. பெரியருக்கும், திராவிடப் பாரம்பரியத்திற்கும் எதிராக ஈழத் தமிழர் போராட்டங்களை முன்வைத்து செபஸ்டியன் சைமன் என்ற சிமான் கருத்துக்களைத் தெரிவித்து வருவது தெரிந்ததே. இவர்கள் அரசியல் தீர்மானிக்கும் சக்திகளாக உருவாகாவிட்டாலும், கருணாநிதி ஜெயலலிதா போன்றவர்களுக்கு எதிரான முற்போக்கு அரசியலை குழப்பும் நோக்கத்தை நிறைவேற்றும். இந்திய உளவு அமைப்பின் ஒட்டுகுழுக்களே இவைகள் என்பதற்கான பல கருத்தியல் ஆதாரங்கள் பல தடவைகள் முன்வைக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் என்பவர் அண்மைக் காலங்களில் தெரிவித்துவரும் அதிரடிக் கருத்துக்களும் அமைந்துள்ளன. அவர் கருணாநிதியின் மகள் குறித்துத் தெரிவித்த கருத்துக்களை ஈழப் போராட்டத்தை எதிர்த்த பார்ப்பனப் பத்திரிகையான இந்து வெளியிட்டுப் பிரபலப்படுத்தியது.
திருகோணமலை மாவட்டத்தின் புலிகளின் பொறுப்பதிகாரியாவிருந்த எழிலன் என்ற சசீதரன் அனந்தியின் கணவர். அவர் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த வேளையில் கனிமொழியின் உத்தரவாதம் பெற்றே சரண்டைந்தார் என்று அவர் கூறிய கருத்துக்கள் தமிழகத்தில் தலைப்புச் செய்திகளாயின.
சீமானைப் போன்றே அனந்தி சசீதரனுக்கும் பின்னால் இந்திய உளவுத்துறையான RAW செயற்படுகிறது என்பதற்கான நேரடியான ஆதரங்கள் இல்லை. கருத்தியல் ஆதாரங்களாகவே இவை முன்வைக்கப்படுகின்றன.
அனந்தி சசீதரன் பல தடவைகள் சாட்சியமளித்துள்ளார். அவருக்கு இது முதல் தடவையல்ல. 2009 ஆம் ஆண்டின் பின்னர், நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னரும், ஐ.நா விசாரணைக் குழுவின் முன்னரும், மனித உரிமை அமைப்புக்கள் பலவற்றிலும் அனந்தியின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையிலோ அல்லது மனித உரிமை ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டிலோ திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் உத்தரவாதம் பெற்றுத்தான் சிறிலங்கா இராணுவத்தினரிடம் தனது கணவர் எழிலன் சரணடைந்தார் என்ற விடயத்தை தெரிவிக்கவே இல்லை.
கடந்த ஆறு வருடங்களாக உலகம் முழுவதும் உலாவித்திருந்து சாட்சி சொன்ன அனந்திக்குக் கனிமொழியின் மீதான திடீர் ஆர்வம் சந்தேகத்திற்குரியதே. இது நாள் வரைக்கும் ஒரு தடவையாவது கனிமொழியின் உத்தரவாதம் பெற்றே சாட்சி சொன்னோம் என அனந்தி கூறியதில்லை.
இதற்குப் பின்னால் மதவாத சக்திகளின் உந்துதல் ஒரு காரணமாக இருக்கலாம் என்பதைத் தவிர வேறு காரணங்களையும் குறிப்பிடலாம்.
இன்று ஈழத்தின் தலையாய பிரச்சனை கனிமொழியல்ல. சுன்னாகத்தில் அழிப்பு நடத்தும் பல்தேசிய நிறுவனம், சம்பூரில் இந்திய அரசின் தூண்டுதலோடு உருவாகும் அனல் மின் நிலையம். சிரிசேனவோடு இந்திய அரசு எழுதிக்கொண்ட அணுசக்தி உடன்படிக்கையின் பின்புலம், புலம்பெயர் அமைப்புக்களோடு இலங்கை அரசு ஏற்படுத்தும் உறவு, தன்னார்வ நிறுவனங்களின் தலையீடு என்று ஆயிரக் கணக்கானவை எரியும் பிரச்சனைகள்.
இலங்கை இந்திய அரசுகள் ஈழத் தமிழர் பிரச்சனையில் தலையிட்டு மாற்றங்களை ஏற்படுத்தி போராட்டத்தை அழிக்க முயலும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் இவ்வாறான பரபரப்பு ஏற்படுத்தப்பட்டு மக்களின் கவனம் திசைதிருபப்படும்.
யுத்தம் இறுதிக்கட்டத்தை அடைந்து இராணுவத்தினரிடம் சரணடைவது என விடுதலைப்புலிகளின் தலைமை முடிவெடுத்த போது அதற்கான பேச்சுக்கள் அரசியல் பொறுப்பாளர் நடேசன், விடுதலைப்புலிகளின் சமாதான செயலக பொறுப்பாளர் புலித்தேவன் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் இருவரும் தான் நோர்வே சமாதான தூதுவர் எரிக் சொல்ஹைம், பிரித்தானியாவில் உள்ள பெண் ஊடகவியலாளர், ஜெகத் கஸ்பர் ஆகியோரிடம் பேசியதாகத் தகவல்கள் வெளியாகின.
இதற்கு மேல், கனிமொழி உண்மையில் அவ்வாறான உத்தரவாதம் வழங்க முற்பட்டிருந்தால் அவர்களது ஈழ ஆதரவு அரசியல் நாடகத்திற்கு எதிரானதாகவல்லவா அது அமைந்துவிடும்?
திடீரென இதில் கனிமொழியைச் சேர்த்துக்கொள்ளுமாறு அனந்திக்கு ஆலோசனை வழங்கியவர் இந்திய அரசியலில் கோமாளிகளில் ஒருவர் என மட்டும் கூறிவிட முடியாது. அனந்தி இந்த விடையத்தைக் குறிப்பிட்டதும், அது பிரபலப்படுத்தப்பட்ட முறை, இந்து பத்திரிகை, என்டிரிவி போன்றவற்றின் இவ்விடையத்தில் காட்டிய ஆர்வம் என்பன அனந்தியின் பின்னால் பெரும் புள்ளிகள் இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.
உலகில் அதிகார முக்கியத்துவம் வாய்ந்த பலருடன் சரணடைவிற்கான பேச்சுக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் கனிமொழியிடம் தனியாகப் பேசி மற்றொரு சரணடவை ஏற்பாடு செய்தமைக்கான காரணம் என்ன? அது இதுவரையில் வெளிவராமல் ஆறு வருடங்களின் பின்னர் எந்த ஆதாரமும் இல்லாமல் அனந்தி வெளியிடுவதன் காரணம் என்ன?
இங்கு கனிமொழிக்கு வக்காலத்து வாங்குவது எமது நோக்கமல்ல. ஈழ மக்களின் கண்ணீரைப் பயன்படுத்தி தமிழகத்தில் அரசியல் பிழைப்பு நடத்தும் மதவாதச் சக்திகளுக்கு அனந்தி துணை போவதுதான் கண்டிப்பிற்குரியது. ஈழப் போராட்டத்தின் ஒவ்வொரு திரும்பல் புள்ளிகளிலும் இந்திய அரசு ஏற்படுத்திய அழிவுகளையும் படுகொலைகளையும் தெரிந்தவர்களுக்கு அனந்தி சசீதரனைப் புரிந்துகொள்வது கடினமானதல்ல.