ஐரோப்பிய ஆளும் வர்க்கமும் அதனை வழி நடத்தும் பல்தேசிய வியாபார நிறுவனங்களும் வெளி நாட்டவர்களை வேலைக்கு வைத்துக்கொள்கின்ற அதே வேளை அவர்களை ஒடுக்குவதற்காக நிறவாதத்தைப் பயன்படுத்துகின்றன. ஒரு புறத்தில் வெளி நாட்டவர்களை அகதிகள் என்ற பெயரிலும், வேலையாட்கள் என்ற பெயரிலும் இறக்குமதிசெய்யும் அரசுகள் தமது மனிதாபிமான முகத்தைக் காட்டிக்கொள்கின்றன. மறுபுறத்தில் அதே அகதிகளை தமது எஜமானர்களான பல்தேசிய வியாபார நிறுவனங்களிடம் மலிந்த கூலிகளாக ஒப்படைக்கின்றன. அதே வேளை அவர்கள் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்காக நிறவாதத்தையும், வெளி நாட்டவர் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் கட்டவிழ்த்து விடுகின்றன.
நிறுவனமயப்பட்ட அந்த நடவடிக்கை இன்று நேரடியாகவே வெளிநாட்டவர்கள் மீது பல் தேசிய வியாபார நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகின்றது.
அமெஸோன் என்ற நிறுவனம் நூல் இணைய வழி நூல் விற்பனையில் தனது வியாபாரத்தை ஆரம்பித்து இன்று பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் இணைய அங்காடியாக உலகத்தை ஆக்கிரமித்துள்ளது. இந்தியா இலங்கை போன்ற மூன்றாமுலக நாடுகளில் அமெஸோன் இல் நூல் வாங்குவதையே சமூகப் பெறுமானமாகக் கருதும் மத்தியதர வர்க்கம் ஒன்று தோன்றியுள்ளது.
இந்த நிறுவனம் ஜேர்மனியில் பல்வேறு வெளி நாட்டவர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கிறது. தமது வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஒடுக்கி கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பதற்காக நியோ நாஸி காவல் படைகளைப் பயன்படுத்துகிறது என்ற தகவல் மனிதாபிமானிகளையும் ஜனநாயக சக்திகளையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
அங்கு மூன்று மாதங்கள் தற்காலிகமாக வேலைபார்த்த ஒரு தாய் தாங்கள் இயந்திரங்களைப் போன்று செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமெஸோன் காவல் பணிக்கு அமர்த்திய பாதுகாப்பு நிறுவனம் நியோ நாஸி கள் எனப்படும் தீவிர வலதுசாரிக் கும்பல்களை வெளி நாட்டுத் தொழிலாளர்களை ஒடுக்குவதற்கு அமர்த்தியுள்ளது. இது தொடர்பாக எழுந்த எதிர்ப்பையடுத்து அமெஸோன் தாம் விசாரணையில் ஈடுபட்டிருப்பதாக மட்டும் தெரிவித்துள்ளது.