ஆசிரியர் குறிப்பு:
அன்பான வாசகர்களே!
இக் கட்டுரை பல தரப்பட்டவர்களாலும் வாசிக்கப்படுவதை நான் உணர்கிறேன். என்னோடும் இலங்கையிலுள்ள எனது சகோதரர்களுடனும் இது பற்றி உரிமையுடன் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். வி.டி.தர்மலிங்கம் பெ.சந்திரசேகரன் ஆகியோரின் மறைவுக்குப் பின்னர் மலையக மக்கள் முன்னணியின் உயர்மட்ட ஸ்தாபர்களில் உயிரோடிருக்கும் ஒருவன் என்றமுறையில் என்னிடமிருந்து நிறைய விடயங்களை எதிர்பார்க்கின்றனர் என்பது புலனாகிறது. அந்த எதிர்பார்ப்பின் சிறிய அளவையாவது நிறைவேற்ற வேண்டும் என்ற தூண்டுதல் காரணமாக கட்டுரை சற்று நீண்டுவருகிறது. பெரும்பாலும் நினைவுகளை ஆதரமாகக் கொண்டு எழுதப்படுகின்ற போதும் சரியான தகவல்களை தருவதில் கவனம் செலுத்துகிறேன். ஆயினும் சம்பவங்களைக் கூறும்போது சில பெயர்கள் விடுபட்டுப் போகலாம் சிலரது பெயர்கள் முனனெழுத்துகளின்றி தெளிவற்று காணப்படலாம். ஆனால் எனது சொந்த விருப்பு வெறுப்புகளை புறந்தள்ளி விட்டு அவற்றை தர முயற்சிக்கிறேன். தவறுகளைக் கண்டால் உடனே சுட்டிக்காட்டுங்கள். திருத்துவதற்கு தயங்கமாட்டேன். நஞ்சுள்ளங்களின் வசைபாடல்களையிட்டு அதிகம் அலட்டிக்கொள்ளாதீர்கள். அவர்கள் மொத்தம் மூன்று மஞ்சள் இலக்கியவாதிகள். வெவ்வேறு அவதாரங்களாக அவர்கள் வந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் ஆத்திரமடைந்து நிம்மதியிழந்தால் அது கூட எனது எழுத்துக்கு கிடைத்த வெற்றிதானே.
1977 முதல் 1985 வரை:
1948 ல் மலையக மக்களின் வாக்குரிமை டி எஸ் சேனநாயக்கவின் ஐக்கியதேசியகட்சி அரசாங்கத்தால் பறிக்கப்பட்ட பின்னர் அவர்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமற்போனது. 1960 முதல் 64 வரை சிறிமாவின் சுக அரசிலும் 1965 முதல் 70 வரை டட்லியின் ஐதேக ஆட்சியிலும் தொண்டமான் நியமன உறுப்பினராக இருந்தார். 1970 முதல் 1977 அ. அஸீஸ் சிறிமாவின் சுக அரசில் நியமன உறுப்பினராக இருந்தார். ஆனால் 1948லிருந்து மலையகத்திலிருந்து ஒரு தமிழராவது 1977 வரை பாராளுமன்றத்திற்கு மக்களால் தெரிவு செய்யப்படவில்லை.
1977 ஆண்டு பாராளுமன்ற தேர்தல் மலையக அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. 1948 வாக்குரிமையும் பிரஜாவுரிமையும் பறிக்கப்பட்ட ஆண்டிலிருந்து 1977 வரையினா சுமார் 30 வருடங்கள் அங்கு அரசியல் இயக்கம் எதுவும் உருவாகவில்லை. தொழிற்சங்கங்களின் ஆதிக்கம் அதனால் அதிகரிக்கத் தொடங்கியது. இந்த இடைக்காலத்தில் உருவான படித்த அணியினரை உள்வாங்கும் திறனை இத்தொழிற் சங்கங்கள் கொண்டிருக்கவில்லை. அவர்கள் தமக்கென தனியான அமைப்புகளை உருவாக்கத் தொடங்கினர். மலையகத்தின் பலபகுதிகளில் இவ்வாறான இளைஞர் அமைப்புகள் உருவாகின. அவை பெரும்பாலும் சிறிய கலை இலக்கிய வட்டங்களாகவே செயற்பட்டன. நாளடைவில் சில மலையகம் தழுவிய இளைஞர் அமைப்புகள் 1960 களின் பிற்பகுதிகளிலிருந்து உருவாகத் தொடங்கின. அவற்றில் பிரதானமானது இரா சிவலிங்கம் தலைமையிலான மலையக இளைஞர் முன்னணியாகும். இதன் முக்கிய உறுப்பினர்களில் மறைந்த வி டி தர்மலிங்கமும் ஒருவர். இவ்விளைஞர் அமைப்பை மலையக தேசியவாதத்தின் முன்னோடி எனக்கூறலாம். அதுவரை இந்திய தமிழ் வாலிபர் லீக் இலங்கை இந்திய காங்கிரஸ் என்றுதான் அதற்கு முன்னைய அமைப்புகள் தமது இந்திய விசுவாத்தை வெளிபடுத்தும் வகையில் குழும அடையாளத்தை இந்தியாவுடன் தொடர்புபடுத்தப்படடன. மஇமு தான் முதற்தடவையாக அரசியல்ரீதியில் மலையக தமிழர் என மலையக மண்சார்ந்த குழும அடையாளத்தை ஜனரஞ்சகப்படுத்தியது. தொண்டமான் எதிர்ப்புவாதத்தையும் சுதந்திர கட்சி சார்பு அரசியல் கருத்தையும் இது கொண்டிருந்தது. வேலையற்ற படித்த மலையக இளைஞர்கள் இதன் பிரதானசக்தியாக திகழ்ந்தனர். மலையகத்தில் அப்போது யாழ்ப்பாணத்தவரே அரசாங்க உத்தியோகங்களை (பிரதானமான பாடசாலை ஆசிரியர்களாக) வகித்துவந்தனர். எனவே இதன் கோஷங்கள் அடிக்கடி யாழ்எதிர்ப்புவாதத்தை வெளிப்படுத்தின.
மலையக இளைஞர் முன்னணியிலிருந்து பிரிந்த மற்றொரு படித்த இளைஞரணி ஒன்று 70களில் சாந்திகுமார் மரியதாஸ் இராமலிங்கம் வாமதேவன் மெய்யநாதன் நவரத்தினம் ஆகியோர் தலைமையில் பிரிந்து சென்று ‘மலையக மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் சிறிதுகாலம் செயற்பட்டது. மலையக பிரச்சினைகளை சிறப்பாக ஆராயக்கூடிய பல திறமையான பட்டதாரிகளையும் ஆய்வாளர்களையும் அது கொண்டிருந்தது. மலையக மக்களின் பிரச்சினை தொடர்பான பல ஆய்வுகளையும் கருத்தரங்குகளையும் அது நடத்தியது. ஆயினும் மலையகத்தில் அதன்பின்னர் அடிக்கடி ஏற்பட்ட வன்செயலின் அலைகளால் மூழ்கடிக்கப்பட்டு விட்டது. சந்திரசேகரன் இவ்விரு அமைபபுகளிலும் அங்கத்துவம் வகிக்காதபோதும் அவற்றோடு தொடர்பு வைத்திருந்தார்.
1977 தேர்தலின்பின்னர் மலையக மக்கள் மீண்டும் பாராளுமன்ற அரசியலில் பிரவேசித்ததனால் ஏற்பட்ட மிகமுக்கியமான விளைவுகளில் ஒன்று இத்தகைய இளைஞர் அமைப்புகள் செயலிழந்து போனதுதான். பாராளுமன்ற அரசியல்பாதை நிரந்தரமாக மூடப்பட்டிருந்தால் மலையக இளைஞர்களின் அமைப்புகள் பலம்வாய்ந்தவையாகவும் அரசியலில் முக்கிய பங்குவகிப்பைவையாகவும் தலையெடுத்திருக்கும் சந்திரசேகரினின் அரசியல் கூட வேறுதிசையில் சென்றிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.
1977 பாராளுமன்ற தேர்தல்:
1970 முதல் 77 வரை சிறிமா ஆட்சியில் தொண்டமானுக்கெதிரான இனவாத கோஷம் பல்வேறு அமைச்சர்களால் வெளிப்படையாகக் கக்கப்பட்டது. 64ல் சிறிமா அரசாங்கம் கவிழ்ந்தற்கு தொண்டமானே காரணம் என்ற ஆத்திரம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இருந்தது. 1960-64ல் சிறிமா அரசிலே நியமன உறுப்பினராக இருந்த தொண்டமான் அவ்வரசு ஏரிக்கரை பத்திரிகை நிருவனத்தை தேசியமயமாக்கும் நோக்குடன் கொண்டுவந்த பத்திரிகை மசோதாவை ஆதரித்து வாக்களிக்காமல் நடுநிலை வகித்தார். இதனால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் சிறிமாஅரசு கவிழ்ந்தது. 1970 -77ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த சுக அரசு தொண்டமானை பழிவாங்கத் துடித்தது. அவருக்கும் அவரது உறவினர்களுக்கும் சொந்தமான பெருமளவு தேயிலைத் தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டன. அத்துடன் நில்லாமல் அவரை தெய்வமாக நினைப்பவர்கள் தான் மலைய தமிழர்கள் எனற தோரணையில் முழுமலையக தமிழ் மக்களையும் அது பழிவாங்கியது. இதனால் வரலாற்றில் ஒருபோதும் இல்லா அளவு ‘இந்திய எதிர்ப்பு வாதம்’ மலையக தமிழருக்கெதிராக கிளப்பி விடப்பட்டது. கொப்பேகடுவயின் காணி அபகரிப்புக்கெதிராக மலையகத்தில் எழுந்த தன்னிச்சையான போராட்டங்கள் யாவும் தொண்டமானின் தூண்டுதலால் நடைப்பெற்றவையாக அர்த்தப்படுத்தப்பட்டன. தலவாக்கொலை நகரில் அநுர பண்டாரநாயக்க ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் பேசும் போது ‘கண்டிய சிங்களவர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டு அவர்களுக்கு பகிர்ந்தளிக்க முயற்சிக்கும் போது அதற்கு தடையாக தொண்டமான் வந்தால் தொண்டமானையும் கூறுபோட்டு பகிர்ந்தளிக்க தயங்கமாட்டேன்’ என கொப்பேகடுவ முழங்கியது இதற்கொரு உதாரணம். பல சுக அரசியல் கூட்டங்களில் ‘கள்ளத்தோணிகளை வெளியேற்றுவோம்’ என கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதன் மூலம் சு.க. மலையக மக்களின் ஒட்டுமொத்தமான வெறுப்பை சம்பாதிக்கொண்டது மாத்திரமல்ல தொண்டமான்மீது ஆழமான அனுதாபத்தையும் ஏற்படுத்திவிட்டது.
இளம் சந்திரசேகரனும் இதற்கு விதிவிலக்கல்ல.
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே தமிழர்கள் பெரும்பான்மையினராக வாழும் ஒரே மாவட்டம் நுவரெலியாதான். 1977 பொதுதேர்தலில் சிறிமா பண்டாரநாயக்கவின் ஒரே மகனான அநுர பண்டாரநாயக்கவை வெற்றிபெற வைக்கும் நோக்கில் நுவரெலியா மஸ்கெலிய ஆகிய இரு தேர்தல் தொகுதிகள் இணைக்கப்பட்டு மூவங்கத்தவர் தொகுதியாக மாற்றப்பட்டது. இக்காலப்பகுதியில் கணிசமான வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வாழ்ந்தனர். ‘சுருட்டுக்கடை’ என அழைக்கப்பட்ட சிறுசில்லறைக் கடைகள் இங்கு ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் இருந்தன. இதைவிட பாடசாலை ஆசிரியர்களாகவும் கச்சேரி உத்தியோகஸ்தர்களாகவும் மருத்துவர்களாகவும் தோட்ட நிர்வாகத்தில் லிகிதர்களாகவும் கணிசமான யாழ்ப்பாணத்தவர் வாழ்ந்தனர். அதேசமயம் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இலங்கை பிரஜாவுரிமை வழங்கும் நடைமுறை ஆமைவேகத்தில் நடைபெற்றபோதும் அதனால் ஒருபகுதி மலையக மக்கள் வாக்குரிமை பெற்றிருந்தனர். எனவே இவ்விருதரப்பினரதும் வாக்குகளின் மூலம் ஒரு தமிழ் பிரதிநிதி இம்மூவங்கத்தவர் தொகுதியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தொரிவாகக் கூடிய வாய்ப்பு 30 வருடங்களுக்கு பின்னர் உருவாகியிருந்தது. எனவே தொண்டமான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவோடு இத்தேர்தலில் போட்டியிட்டார். இத்தேர்தலில் தான் இதே தொகுதியிலிருந்து ஐதேக சார்பில் காமினிதிசநாயக்கவும் சுக சார்பில் அநுர பண்டாரநாயக்கவும் முதற்தடவையாக பாராளுமன்ற அரசியல் பிரவேசம் செய்தனர்.
சிங்கள அரசுகளின் இனவாத தந்திரோபாயத்தின் ஒரு விளைவாக மலையக நகரங்கள் அனைத்தும் சிங்களவர்களால் கட்டுப்படுத்தப்பட்டன. அதைச்சுற்றிவர சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. சிங்கள அரசியல்வாதிகளும் பொலிசாரும் நகர்புற சிங்கள காடையர்களும் சிங்கள குடியேற்ற வாசிகளுக்கும் சிங்கள வியாபாரிகளுக்கும் பாதுகாவலராக செயற்பட்டனர். தமிழ் மக்களின் வாக்குரிமையைக் கட்டுப்படுத்தி சிங்கள குடியேற்றவாசிகளின் வாக்கு பலத்தை அதிகரிக்கச் செய்வதன் மூலமே மலையகத்தின் அரசியலை சிங்களஇனவாதிகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
தலவாகாக்கெலை நகரத்தில் இந்த நிலைமை மேலும் துலக்கமாக வெளிப்பட்டது. இந்நகரத்தின் மிகப் பெரும்பாலான கடைகள் சிங்களவருக்குச் சொந்தமாக இருந்தன. அதைச்சுற்றிவர சிங்கள குடியேற்றங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சிங்கள காடைத்தனம் இங்கு தலைவிரித்தாடியது. சிவனு லட்சுமனனின் வீர மரணத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த தமிழ் தோட்ட தொழிலாளர்கள் இந்நகரில் வைத்து தாக்கப்பட்ட சமயத்தில் கூட அதற்கு எதிராக எதுவுமே செய்ய முடியாத அளவுக்கு சிங்கள காடைத்தனத்தின் பலமும் பொலிசாராரின் அணுசரனையும் அங்கிருந்தது.
தொண்டமானின் கவனத்தை ஈர்த்த சந்திரசேகரன்…
இப்படியான பின்னணியில் 1977 தேர்தலில் போட்டியிடுவதற்காக தொண்டமான் கட்டுபணம் செலுத்திய பின்னர் அவருக்கு நுவரெலிய-மஸ்கெலிய தேர்தல் தொகுதியிலிருந்த நகரங்களில் அமோக வரவேற்பளிக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை அந்நகரங்களில் இருந்த வர்த்தகர்கள் தத்தம் நகர கமிட்டிகளுடாக செய்தனர். ஆனால் தலவாக்கெலையில் மாத்திரம் சிங்கள காடைத்தனத்திற்கு அஞ்சி அத்தகைய வரவேற்பை ஏற்பாட்டைச் செய்ய நகர கொமிட்டி தயங்கியது. எனவே தலவாக்கெலை இதொகா காரியாலத்திற்கு மாத்திரம் தொண்டமான் விஜயம் செய்வதாக இருந்தது. இதனால் மாவட்டத்தலைவர் நடேசன் மிகவும் கவலையடைந்தார். சந்திரசேகரனிடம் ‘இந்த பயத்திலிருந்து எப்போதுதான் தலவாக்கெலை வெளியே வரப்போகிறதோ’ என நெஞ்சுறுக் கூறினார். சந்திரசேகரன் எவ்வளவு முயன்றும் நகர கொமிட்டியின் மனதை மாற்ற முடியவில்லை. சந்திரசேகரன் அப்போது இன்னும் அம்மாவுக்கும் அவரது அக்காவுக்கும் கட்டுப்பட்ட பிள்ளை. அவர்கள் சந்திரசேகரன் அரசியலில் ஈடுபடுவதை விரும்பவில்லை. மறுபுறத்தில் நடேசன் தலைவரும் அப்பகுதி இளைஞர்களும் அவருக்கு துணையாக நின்றனர்.
கடைசியாக தொண்டமான் தலவாக்கெலை வருகை தந்தபோது சந்திரசேகரனின் தலைமையில் நடேசன் தலைவரின் துணையோடு இளைஞர் அணி ஒன்று அவரை வரவேற்று நகரில் ஊர்வலமாக அழைத்துச் சென்றது. நடேசன் தலைவரிடம் அந்த இளைஞர் யார் என்பதை தொண்டமான் கேட்டு தெரிந்து கொண்டார். அவர் தனது நண்பர் காலஞ்சென்ற பெரியசாமியின் மகன் சந்திரசேகரன் என அறிந்ததும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அன்று ஏற்பட்ட தொண்டமான் – சந்திரசேகரன் சந்திப்புதான் சந்திரசேகரனின் இதொக அரசியல் பிரவேசத்திற்கு அடிகோலியது.
இன்னும் வரும்……
very good. you are only person quilified to.. write about MR .P. CHANDRACHAKARAN .thankyou sir.
“நஞ்சுள்ளங்களின் வசைபாடல்களையிட்டு அதிகம் அலட்டிக்கொள்ளாதீர்கள். அவர்கள் மொத்தம் மூன்று மஞ்சள் இலக்கியவாதிகள். வெவ்வேறு அவதாரங்களாக அவர்கள் வந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் ஆத்திரமடைந்து நிம்மதியிழந்தால் அது கூட எனது எழுத்துக்கு கிடைத்த வெற்றிதானே.”
எவ்வளவு எளிதான தற்காப்பு.
தொப்பி சரியாகத்தான் கரம்மசாலாவின் தலையில் விழுந்திருக்கிறதோ?
காதருக்கு இலங்கை முற்போக்கு அரசியலில் ஒரு பாத்திரம் உண்டு என்பது உண்மை தான். ஆனால் சந்திரசேகரனுக்கு சிவப்புச் சட்டை போடப் புறப்பட்டு அதையும் நாறடிக்கப் போகிறார்.
I was born in 63 and spent most of my life in Dick oya, Agrapatana, Talawakelle, Hatton and Punduloya, I experienced
much of the up country political history after 1974, since I was old enoug to understand. Cader Master has shed more light about pre 75 era politics, thanks for that, I knew late Mr. Nadesan, CWC district commitee leader, he was a smart and handsome gentlemen. Thanks for Cader master, for this fine article, a rare one, what he is doing right now will be studied intrestingly in may more years to come, he is writing part of the history of the Indian tamils in Sri lanka. Apart from late Thondamans autobiography, Cader masters article is the one which gives more insight in to up country politics
did you know about ” theerthakarai” magazine .if you know write about also.thanks