ஜுன் மாதத்தில் இந்திய அரசின் அனுசரணையுடன் ஈழத் தமிழர்கள் மீதான இன ஒடுக்குமுறைகான தீர்வு குறித்து ஒன்றுகூடல் ஒன்று புது டெல்லியில் நடைபெறவுள்ளது. E.N.D.L.Fஎன்ற இந்திய அரசின் துணை உளவுப்படையினால் ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்விற்கு புலம்பெயர் நாடுகளிலிருந்தும் பலர் சென்று பங்கெடுக்கவுள்ளதாகத் தெரியவருகிறது. முன்னதாக பிரித்தானியாவில் சுற்றுப்பயணம் செய்த தமிழக காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ் அமைப்புக்களைக் கலந்துகொள்ளுமாறு தனித்தனியாக அழைப்பு விடுத்திருந்தார்.
இந்திய இராணும் வட கிழக்கை ஆக்கிரமித்த போது அதன் துணை இராணுவப்படையாகச் செயற்பட்ட ஈ.என்.டி.எல்.எப் அமைப்பு இப்போது தமிழ் நாட்டில் சென்னையிலும், பெங்களூருவிலும் இயங்கி வருகிறது. புலம் பெயர் நாடுகளிலும் இந்த உளவு அமைப்பின் பிரதிநிதிகள் செயற்பட்டு வருகின்றனர்.
இலங்கையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டு பல மனிதப் படுகொலைகளுக்குக் காரணமான இந்திய இராணுவத்தின் துணைப்படையாகச் செயற்பட்ட ஈழ தேசிய ஜனநாயக முன்னணி (ENDLF) இப்போது இந்திய அரசு சார்பாக புதிய தலையீடுகளை மேற்கொண்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையின் பின்னணியில் இந்திய அரசு முழுமையாகச் செயற்பட்டது மட்டுமன்றி ஈழப் போராட்டம் ஆரம்பித்த நாள் முதல் இந்திய அரசினதும் உளவுப்படையினதும் தலையீடு பல அழிவுகளை ஏற்படுத்தியிருந்தது. முள்ளிவாய்க்கால் வரை ஈழப் போராட்டத்தை நகர்த்திவந்து அழித்த இந்திய அரசின் இன்றைய தலையீடு தொடர்ச்சியான அழிவுகளுக்கு வழிவகுக்கும்.