புலையன் என்ற சொல்லுக்கு தமிழ் லெக்சிகனில் (Tamil Lexicon) “கீழ்மகன்” (கீழ்ச்சாதியான்) என்று பொருள் தரப்பட்டுள்ளது. அதே சொல்லுக்குப் “புரோகிதன்” என்று வேறொரு பொருளும் தரப்பட்டுள்ளது.
புரோகிதர் என்றால் மதகுரு (Priest); சமயத் துறையின் தலைமகன். சமயச் சடங்குகளை நிகழ்த்துவது இவரது சிறப்புரிமை. இந்தத் தலைமகன் எப்படிக் கீழ்மகனாகவும் கருதப்படமுடியும்? இது ஆழ்ந்து ஆய்வு செய்வதற்குரியதாகிறது.
சமயச் சடங்குகளில் கடவுள்வழிபாட்டுச் சடங்குதான் முதலிடம் வகிப்பது. இதற்கு அடுத்து புராதன சமுதாயத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது ஈமச்சடங்காகும். திருமணச் சடங்கு முதலியவெல்லாம் காலத்தால் மிகவும் பிற்பட்டவை. எனவே கடவுள் வழிபாட்டைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இறுதிச்சடங்குதான் முதல்இடத்தில் இருப்பது.
பழந்தமிழகத்தில் இத்தகைய பெருமைவாய்ந்த இறுதிச் சடங்கை நடத்திவைக்கும் மரியாதைக்குரிய மதகுருவாகப் “புலையர்” இருந்தனர். குடிமக்களுக்கு மட்டுமல்லாது மன்னர்களின் இறுதிச் சடங்குகளையும் இவர்களே செய்துள்ளனர்.
சுடுகாட்டில், இறந்தமன்னனின் உடல் கிடத்தப்பட்ட பிறகு, புலையன் சோறும்,கள்ளும் படைக்க, இறந்தவன் அதை வாங்கி உண்பான் என்று நம்பப் பட்டது. அதன்பின் உடலுக்கு எரியூட்டப்படும்.
இதைக் குறிப்பிடும் பாடல்கள் புறநானூற்றில் உள்ளன.
“புல்லகத்திட்ட சில்அவிழ் வல்சி
புலையன் ஏவப் புல்மேல் அமர்ந்து உண்டு
அழல்வாய்ப் புக்க…
இப்பாடலை (எண்: 360) மேற்கோள் காட்டிப் புலையர் புரோகிதராயிருந்தனர் என்று பொருள் தந்துள்ளது லெக்சிகன்.
ஆனால் இதே புறநானூற்றில் இன்னொரு பாடலும் உள்ளது. இதில் இறுதிக்கடன் தீர்க்கும் தகுதி புதல்வனுக்கு மட்டுமே உண்டு என்று வலியுறுத்தப் படுகிறது.
இப்பாடலில் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி இவ்வாறு கூறுகிறான்:
“இதோ அம்பு செலுத்த ஆயத்தமாகிவிட்டேன். அதற்குமுன் பசுக்களும், பார்ப்பனரும், பெண்களும், இறந்தோர் கடன்முடிக்கப் பிள்ளை பெறாதவர்களும் விலகியோடிப் பாதுகாப்பு தேடிக்கொள்ளுங்கள்!” (புறம்: 9).
“ஆவும், ஆனியல் பார்ப்பன மாக்களும்
…………………………………………….
தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போல் புதல்வரைப் பெறாதீரும்
……… நும் அரண் சேர்மின்”.
பல யாகசாலைகள் நிறுவி வேள்விகள் நடத்த உதவிய அந்த மன்னனைப் புகழும் புலவர் வைதிகச் சார்பினர் என்று கொள்ளலாம். இவர் இறுதிச் சடங்கில் புலையனின் முக்கிய இடத்தை மறுத்துவிடுகிறார்.
செத்தவனுக்குக் கொடுக்கப் படும் உணவுதான் அவனது எதிர்கால வாழ்வைப் பாதுகாக்கும். இதைப் பிண்டோதகக் கிரியை என்பர் வைதிகர். இந்த மிக முக்கியமான சடங்குதான் இப்புறப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறார் உ.வே.சா.
ஆனால் புறநானூற்றில் இரண்டு பாடல்களில் (360, 363) பிண்டம் கொடுக்கும் சடங்கைப் புலையன் செய்ததாக வந்துள்ளது. அன்று தமிழகத்தில் வந்து குடியேறியிருந்த வைதிகர் பார்வையில் இது படுபயங்கரமான பாவமாகும். இருந்தாலும் எதிர்ப்புக்குரல் மிக பலவீனமாகவும், மறைமுகமாகவும்தான்
ஒலிக்கிறது. புலையன் பிண்டம் தரலாகாது என்று நேரடியாகத் தடை செய்வதற்குப் பதில் புதல்வனைப் பெறாதோர்க்குக் கதிமோட்சமில்லை என்று நுட்பமாக உரைக்கிறது; புலையனின் இடத்தில் புதல்வனை வைக்கிறது.
அன்றைய வைதிகர்கள் ஏன் இப்படி எச்சரிக்கை காட்டினார்கள்? சாதாரணமாக “சாதித் தூய்மை” காப்பாற்ற மிகக் கடுமையாகப் பிரச்சாரம் செய்பவர்களாயிற்றே அவர்கள்? மனுதர்மம் எழுதப் பட்ட காலகட்டமல்லவா அது?
மௌரியர்களின் ஆட்சியின் பொது [ குறிப்பாக அசோகர் காலத்தில்] வடக்கில் நெருக்கடிக்கு ஆளாகித் தென்னகத்துக்கு வந்த வைதிகப் புரோகிதர்கள் தமிழகத்தில் ஒரு பெரும் சிக்கலை எதிர் இங்கே ஏற்கனவே ஒரு ஆரோக்கியமான பண்பாடும் அதன் சமயம் சார்ந்த பாதுகாவலரான புரோகிதர்களும் ,புலவோரும் இருந்தார்கள்.இவர்கள் பொதுவாகப் பறையர் ,பாணர் முதலிய குடிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.குடிமக்களும் ,மன்னர்களும் தமக்குள்ள எத்தனையோ மாறுபாடுகள் இருந்தாலும் இப்புரோகிதரைப் பெரிதும் மதித்தார்கள்.இந்நிலையில் புதிதாக வந்த வைதிகப் புரோகிதர் என்ன செய்வது ?புலையரைக் கடுமையாக எதிர்க்க உடனடியாக இயலவில்லை.
அன்று மறுத்த நிலத்தில் விவசாயம் ஓரளவு வளர்ச்சியுற்றிருந்தது.ஆனாலும் தமிழகத்தின் பண்பாட்டுத் துறையில் முல்லை நிலத்தவரின் செல்வாக்கே ஓங்கியிருந்தது.முல்லை நிலம் என்று சொல்லும் போது அது மலைப்பகுதியையும் உள்ளடக்கியதாகக் கொண்டிருந்தது.[ இதில் இலக்கணத்தின் இறுக்கத்தை தவிர்த்து விடுவதே நல்லது ]
விவசாய வளர்ச்சி என்பது கூட முல்லை நிலத்தி தான் முதலில் ஏற்ப்பட்டது.
காவிரிப்படுக்கைகளில் நெல் பயிரப்படுவதற்கு முன்பே மலையடிவாரக் காட்டுப்பகுதிகளில் பயிர்த் தொழில் பயிலப்பட்டு விட்டது.தமிழகத்தில் முன் தோன்றி மூத்த பயிர்கள் நெல்லும் , கரும்பும் அல்ல. வரகும் , தினையும் ,கொள்ளும் , அவரையும் தான். மூத்த குடிகள் பாணனும் ,
பறையனும் ,துடியனும், கடம்பனும் தான்.புலையர் என்று பொதுவான பெயர் சூட்டப் பெற்றிருந்த இவர்களின் வீரத்தையும் ,குடிச் சிறப்பையும் வியந்தோதும் புறப்பாடல் ஒன்றுள்ளது. – புறம் :355 ]
” துடியன் பாணன் பரியன் கடம்பன் என்று
இந்நான்கல்லது குடியுமில்லை “
எனவரும் முல்லை நிலத்தை வீர பூமி எனச் சித்தரிக்கிறது.
இப்புலையர் குடியினர் பலவகையான கைத் தொழில்களிலும் வல்லவர்களாக இருந்தனர்.
” பாண்தலையிட்ட பலவல் புலையனை ” என்கிறது கலித் தொகை[35].இசைக் கருவிகள் பலவற்றில் வல்லவன் என்பதோடு பிற திறன்களும் பல கொண்டவன் புலையன் என்று காட்டுகிறது இது.
புல் என்பது அக்காலத்தில் பனை மூங்கில் முதலியவற்றை குறிப்பதாக இருந்தது.புல்லுதல் என்றால் புணர்த்தல் ,சேர்த்தல் என்று பொருள்படும்.பனம்பேழ் எனப்படும் பனைமட்டையின் நாரைக் கொண்டும், மூங்கில் ,பிரம்பு ,நாணல் முதலியன் கொண்டும் பல்வேறு வகையான பயனுள்ள பொருட்களை இவர்கள் பிணைத்து உருவாக்க வல்லவர்கலாயிருந்தனர்.மண்பாண்டங்கள் செய்வதிலும் இவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.பாண் என்ற சொல்லுக்கும் பாண்டம் என்பதற்கும் நெருங்கிய நேரடித் தொடர்பு உண்டு.
பானைகளின் வாயில் தோல்செறித்துக் கட்டி சிலவகைத் தாளக் கருவிகள் தயாரிக்கப் பட்டன. அதுமட்டுமல்ல; இந்தப் பாண்டம் செய்யும் புலையர்குடியினர் இறந்தோரை வைத்துப் புதைக்கும் முதுமக்கள்தாழியையும் செய்பவர்களாக இருந்தனர். எனவே சுடுகாட்டில் புரோகிதம் செய்வது மட்டுமன்றி இடுகாட்டிலும் இவர்கள் பணி இன்றியமையாததாக இருந்தது. இறுதியடக்கம் செய்ய உதவுவதை இழிவானது என்று நாகரிகம் படைத்தவர்கள் நினைக்கமாட்டார்கள். சுடுகாடு மற்றும் இடுகாடு குறித்துப் பார்ப்பனியத்தில் உள்ளதுபோல் அருவருப்பு அடைவது அர்த்தமற்றதாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இத்தகைய நல்ல நாகரிகம் இருந்தது. பார்ப்பனியப் பண்பாட்டால் இந்நாகரிகத்தை நாம் இழந்தோம்.
“கலம்செய் கோவே, கலம்செய் கோவே! வண்டிச் சக்கரத்தில் ஒட்டிக்கொண்டு வந்த பல்லி போல, என் கணவனோடு பல ஆபத்தான பாதைகளைக் கடந்து வந்தேன். ஆனால் அவனோ இன்று இறந்துபோனான். அவனைப் புதைக்க ஒரு ஈமத்தாழி செய்து எனக்குத் தந்தருள். அதையும் சற்றுப் பெரியதாகச் செய்துவிடு– எனக்கும் அதில் இடம் இருக்குமாறு.” இப்படி ஒரு புலையரை இறைஞ்சுகிறாள் ஒரு புறநானூற்றுப் பெண்.
இது ஓர் அற்புதமான புறப்பாடல் செய்தி (எண்: 256). இதைவிட அற்புதம் ஒரு கைவினைஞன் போற்றப்பட்டு “கோ” என அழைக்கப் பட்டிருப்பது. “அருள்கூர்ந்து தாழியைச் செய்துதா,” என்று புலையனான அவன் தயவு கோரப்படுகிறது.
இவையனைத்தையும் தொகுத்துப் பார்க்கும்பொழுது பழந்தமிழகத்தில் புலையர் போற்றப்பட்டிருந்தமை புலனாகும்.
வடக்கேயிருந்து கி.மு.வில் தமிழகத்துக்கு முதலில் வந்த பார்ப்பனர் பலர் இந்த நிலைமைகளோடு பகைமை பாராட்டவில்லை. புலையரின் பண்பாட்டுத் தலைமையை வெறுத்து ஒதுக்கவில்லை. இவர்களில் பல பார்ப்பனர் தமிழர்களுக்கு ஒத்துழைப்பு நல்கினர். பலர் நடுநிலை வகித்தனர். ஆனால் அசோகனுக்கு அஞ்சி சநாதன வைதிகர் தெற்கே வரத்தொடங்கிய பிறகு படிப்படியாக சமூகப் போராட்டம் வலுப்பெறலாயிற்று. சங்க இலக்கியப் படைப்புகளில் மிகப் பழைமையானவற்றில் இந்தப் போராட்டம் அதிகம் வெளிப்படாது. பிறகு திருக்குறள் படைக்கப் பட்ட காலகட்டத்தில் பிறப்பால் உயர்வு,தாழ்வு குறித்த விவாதம் சூடு பிடித்துவிட்டது. பரிபாடலில் வைதிகத்தின் அழுத்தமான முத்திரை விழுந்துள்ளதைக் காணலாம். இதற்குப் பிறகு புலையர் என்ற சொல் இழிவான பொருள் கொண்டதாயிற்று. வடக்கே சண்டாளர் என்ற ஒரு தொல்குடியின் பெயரே ஒருவகை இழிசொல்லாக மாற்றப் பட்டதுபோல புலையர் என்பதும் உச்சரிக்கப் படலாயிற்று.
நான் இதுவரை கூறியுள்ள கருத்துகளுக்கு நேர் எதிரான ஆய்வுமுடிவுகளை வெளியிட்டுள்ளார் ஜார்ஜ் ஹார்ட் (George L. Hart III) என்ற அமெரிக்க ஆய்வறிஞர். இவரது கருத்துப்படி, தீண்டாமை என்பது பழந்தமிழரால் உருவாக்கப் பட்டு கடைப் பிடிக்கப் பட்டதே ஆகும்; இதற்கு வைதிகர் பொறுப்பில்லை. இந்தத் தீண்டாமைப் பழக்கம் தோன்றக் காரணமாக இருந்தது ஆரியர்க்கு முந்தைய பழந்தமிழரின் மதநம்பிக்கைகள். இப்பழந்தமிழ் மதத்தில் ஒரு வளர்ச்சியுற்ற கடவுட்கோட்பாடு இருந்ததில்லை. இத்தகைய சமயநம்பிக்கையை animism என்று கூறுவர். இதன்படி பழந்தமிழர் பல்வேறு பொருள்களில் தெய்விகத் தன்மை உறைவதாகக் கொண்டனர். அணங்குகள் என்று அழைக்கப்பட்ட அந்த தெய்விக சக்திகளைக் கடவுளர் என்று தெளிவாக உருக்கொடுக்க முடியாது. அந்தச் சக்திகள் அபாயகரமானவை. அதன் காரணமாக அவற்றைக் கையாளும் மதச்சடங்குகள் யாவும் கீழ்ச்சாதிகளான பாணர், பறையர் முதலிய புலையரிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தன. ஆபத்தான சக்திகளோடு உறவாடும் கீழ்ச்சாதியினரைத் தீண்டினாலும் ஆபத்துதான் என்று கருதித் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டது.
மேற்கூறிய கருத்துகளை ஜார்ஜ் ஹார்ட் “பண்டைத் தமிழிலக்கியம்” என்ற கட்டுரையில் தெரிவித்துள்ளார். (“Essays on South India”, ed. Burton Stein, Vikas, New Delhi , 1976).
இவை அனைத்தும் முற்றிலும் தவறான முடிவுகள். வைதிகக் கருத்துகள் பற்றிய பிரக்ஞை ஏதுமின்றி இவரைப் போன்ற நவீன ஆய்வாளர்கள் பலர் இந்திய வரலாற்றை அணுகுவதால் இந்த விபரீதங்கள் நேர்கின்றன. உரிய இலக்கியப் புரிதலும் இவர்களிடம் இல்லை.
ஆரியரல்லாத பழந்தமிழர் பல்வேறு பொருள்களில் கடவுள்தன்மை கண்டார்கள் என்பது உண்மை. அணங்குகள் முதலிய பல சக்திகளை நம்பியதும் உண்மை. ஆனால் அவர்களது சமயநம்பிக்கை வெறும் animism என்ற நிலையோடு நின்றிருக்கவில்லை. அவர்களிடம் ஒரு நல்ல கடவுள் தத்துவத்தின் கரு இருந்தது. ஒப்பீட்டளவில் அவர்களுடைய கடவுள் இந்தியாவில் அன்றிருந்த பிற கடவுள்கள் அனைவரிலும் உயர்ந்தவன் எனலாம். (இது பொதுவாக கி.மு.காலம் குறித்தது).
அன்றைய தமிழகத்தில் எத்தனையோ விதமான கடவுள்நம்பிக்கைகள் இருந்தபோதிலும் அனைத்துச் சக்திகளையும் அடக்கியாளும் ஒரு தனிப் பெருங்கடவுள் இருந்ததாக மக்கள் நம்பினர். அவன்தான் முருகன். அணங்குகள் யாவும் அவனுக்கு அடங்கியவை. “கணங்கெழு கடவுள்” என்று அவனைக் குறிப்பிடுகிறது நற்றிணை (எண்: 358). அந்தக் கணம் என்ற சொல் பெருங்கடவுளின் ஆணைக்குக் கீழ்ப்படும் சிறுதெய்வங்களைக் குறிப்பதாகும். இயற்கையில் உறையும் பல்வேறு சக்திகளும் கணம் என்பதில் அடங்கும்.
இந்த முருகனைப் “பெரும்பெயர் முருகன்” என்கிறது பண்டை இலக்கியம். நெடுவேள், நெடியோன் என்பனவெல்லாம் அவனது உயர்தனி இடத்தை (supremacy) வலியுறுத்தும் பெயர்களே.
இயற்கைப் பொருள்களை வழிபடும் மதமாக (animism) மட்டுமே பழந்தமிழ் மதம் இருந்திருக்குமானால் அதில் தலைமைக் கடவுள் என ஒரு பெருங்கடவுள் இருந்திருக்கமுடியாது. முருகனோ ஊர்க்கடவுள் அல்ல, வட்டாரக் கடவுளும் அல்ல. தமிழகம் முழுதும் தாழ்ந்து பணிந்த ஒரே தெய்வம். கி.மு.காலத்தில் அவனோடு போட்டிபோட சிவனும் இல்லை, விஷ்ணுவும் இல்லை. போட்டி இந்திரனிடமிருந்துதான் முதலில் வந்தது. அதை நொடிப் பொழுதில் முருகன் முறியடித்ததாக பிற்காலப் புராணக் கதை கூறுகிறது. மகாபாரதத்திலும் இந்திரன் முருகனைக் கொல்ல முயற்சி செய்தான் என்று கூறப்பட்டுள்ளது.
பலகாலம் இந்தப் பகையுணர்வு நீடித்திருந்ததை இக்கதைகள் வெளிப்படுத்துகின்றன. இறுதியாக முருகன் தன்னிடம் தோற்ற இந்திரனின் மாப்பிள்ளை ஆகிவிடுகிறான்.
தமிழகத்துக்குக் குடிபெயர்ந்து வந்த வைதிகரின் சமய நம்பிக்கைக்கும், இங்கே ஏற்கெனவே நிலவிவந்த கடவுட்கோட்பாட்டுக்கும் (முருகன்) இடையிலான நெடுங்காலப் போராட்டத்தை இக்கதைகள் மறைமுகமாகப் பிரதிபலிக்கின்றன. .
தொடரும்..