வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள 11 பெண்கள் அமைப்பு கூட்டாகச் சேர்ந்து அமைத்துள்ள பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு (டபிள்யு.ஏ.என்), கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பெண்களை இராணுவத்தில் ஆட்சேர்ப்பு செய்வதற்கு சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையிட்டு ஆழமான கவலை அடைந்துள்ளது.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழ்பவர்களுக்கு, விசேடமாக அந்தப் பிரதேசங்களில் உள்ள பெண்களுக்கு,வேண்டிய மிகவும் அடிப்படையான வசதிகளைத் தானும் அளிப்பதற்கு போருக்கு பிந்திய அபிவிருத்தி தவறியுள்ளது. போதுமான பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் போன்றவை இல்லாமல், இன்னும் சொல்வதானால் மிகவும் அடிப்படைத் தேவையான பாதுகாப்பாகத் படுத்துறங்குவதற்கு வேண்டிய ஒரு இடம் கூட இல்லாத பாதுகாப்பற்ற சூழ்நிலையில் அவர்கள் தொடர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்.
யுத்தத்தின் பின்பு வன்னியில் வாழும் 60 விகிதமான குடும்பங்களின் தலைவர்களாக பெண்களே உள்ளனர், வீட்டிலுள்ளவர்களுக்கு தேவையான முக்கிய பாதுகாப்பை வழங்குபவர்களாக இருப்பதுடன், மேலதிகமாக அவர்களின் குடும்பத்தின் முதன்மையான ஊதிய வருவாயை சம்பாதிப்பவர்களாகவும் பெண்களே உள்ளனர். எனவே நாட்டின் சமூக, பொருளாதார, மற்றும் கலாசார தேவைகள், உரிமைகள் என்பனவற்றை இட்டு நிரப்பும் முக்கியமான பாத்திரத்தை பெண்களே வகிக்கிறார்கள். உயர்ந்து வரும் வேலையில்லா திண்டாட்டம், மற்றும் வாழ்க்கைச் செலவினம் என்பன அவர்களின் தெரிவுகளை கட்டுப்படுத்துவதுடன், பெண்கள் தங்கள் தெரிவுகளுக்கு அப்பாற்பட்ட முடிவுகளை எடுக்கவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளாhகள்.
பொருளாதார செயற்பாடுகளில் செலுத்தப்படும் இராணுவத்தின் தலையீடு உட்பட்ட இராணுவ மயமான சூழலில், ஏற்கனவே பலவீனமான நிலையில் உள்ள இந்த சமூகத்திடம் நிருவாகம், ஏன்; நல்லிணக்கம் கூட நன்மை பயக்குவதாக அல்லாமல் அதனை மேலும் வலுவிழந்ததாக்கியுள்ளன.
சமீப வாரங்களில் ஊடகங்கள் பிரதானப்படுத்தி தெரிவித்திருப்hதைப்போல, தமிழ் பெண்கள் இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளார்கள். அதேவேளை இந்த செயற்பாடு நல்லிணக்கத்துக்கு உட்பட்டதாகவும் மற்றும் அதை நோக்கியதுமான ஒரு நடவடிக்கையைப் போல தோற்றமளிக்கக்கூடும், ஆனால் ஒரு மேலோட்டமான பார்வையில் நோக்கும் போது அந்த நியமனங்களில் வெளிப்படைத்தன்மை,தகவல் வழங்கல், என்பனவற்றில் பற்றாக்குறை இருப்பதாகத் தென்படுவதுடன், வற்புறுத்தல்களும் இடம்பெற்றாதகத் தெரிகிறது. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள இராணுவத்தினரே இந்த ஆட்சேர்ப்பில் தொடர்பு கொண்டிருப்பதுடன் அவர்கள் பொருளாதார ரீதியில் பலவீனமான குடும்பங்களையே இதற்காக இலக்கு வைத்துள்ளனர்.
சில கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகளைச் செய்துள்ளார்கள் அல்லது அவர்கள் நேரடியாகச் சென்றுள்ளார்கள் மற்றும் சில சம்பவங்களில், அவர்கள் அந்தப்பகுதி கிராம சேவையாளரை பயன்படுத்தியுள்ளார்கள். பெண்கள் தலைமையிலுள்ள குடும்பங்கள் அல்லது, ஐந்து அல்லது ஆறு குடும்ப அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பங்கள் என்பனவற்றில் உள்ள இளம் பெண்களே பொதுவாக இலக்கு வைக்கப்பட்டுள்ளார்கள். இதில் பெரிதும் கவலைப்படுவதாக உள்ள விடயம் தகவல் வழங்குதல் மற்றும் முறையான சம்மதம் பெறுதல் என்பனவற்றில் உள்ள குறைபாடுகளே.
ஆட்சேர்ப்புக்கு ஆளானவர்களிடம் அவர்கள் எழுதுனர் சேவை, அல்லது கிராமசேவையாளருடனான வேலைகளிலேயே ஈடுபடுத்தப்பட உள்ளார்கள், அந்த வேலை சில மணித்தியாலங்களுக்கு மட்டுமே உள்ளது மற்றும் அவர்களால் அவர்களது சொந்த இடங்களிலேயே வேலை செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மாதாந்தம் 30,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. சுமார் 109 பெண்கள் அதற்காக விண்ணப்பித்;து நேர்முகப் பரீட்சைக்கும் தோற்றியுள்ளார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்ட தகவல்களில், அவர்கள் இராணுவத்துக்காக வேலை செய்யவேண்டியிருக்கும் மற்றும் தங்கள் கடமைகளைச் செய்வதற்காக அவர்கள் இராணுவத்தில் சேரவேண்டியிருக்கும் என்று ஒருபோதும் அவர்களிடம் தெரிவிக்கப்படவில்லை.
2012 நவம்பர் 5ல், இந்த வேலைகளுக்காக தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்த இந்த பெண்களை, இராணுவத்தினர் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பாரதிபுரம் இராணுவ முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.
ஒரு ஆண் மருத்துவர் மற்றும் ஒரு ஆண் தாதி ஆகியோரால் இந்தப் பெண்கள் ஒரு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் பெயர் மற்றும் விலாசம் என்பனவற்றறைத் தவிர சகல தகவல்களும் சிங்கள மொழியிலேயே சேகரிக்கப்பட்டன.
அந்தப் பெண்களிடம் கிராம சேவையாளர் அல்லது சமாதான நீதவான் அல்லது கிறீஸ்தவராக இருக்குமிடத்து ஒரு கிறீஸ்தவ பாதிரியார் ஆகிய யாராவது ஒருவரிடமிருந்து ஒரு பரிந்துரைக் கடிதம், பிறப்பு சான்றிதழ், மற்றும் பாடசாலை விடுகைச் சான்றிதழ் என்பனவற்றை அவர்கள் பகுதியில் உள்ள காவல்நிலையத்துக்கு சென்று ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்தப் பெண்கள் அந்த ஆவணங்களை ஒப்படைக்க காவல்நிலையத்துக்குச் சென்றபோது அங்கு அவர்களது கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் இராணுவ நபர்கள் இந்தப் பெண்களின் வீடுகளுக்கு சென்று நவம்பர் 15ந்திகதி வந்து வேலையில் இணையுமாறு அறிவுறுத்தியுள்ளார்கள். இராணுவத்தினர் இந்தப் பெண்கள் மற்றும் யுவதிகளிடம் அவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் சிங்களம் என்பனவற்றை போதிப்பதற்காக 03 மாத வதிவிட கற்கைநெறி ஒன்று உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்கள்.
நவம்பர் 15,அன்று ஒரு ஆண் இராணுவ அதிகாரி அந்தப் பெண்கள் அனைவரையும் அவர்கள் வீடுகளில் இருந்து கூட்டிச்சென்று பாரதிபுரம் முகாமுக்கு அனுப்பிவைத்தார். முதலாவது நாள் அந்தப் பெண்களின் சுய விபரங்களை சேகரிப்பதிலேயே, கழிந்தது. 16ந் திகதியான இரண்டாவது நாள், புதிதாகச் சேர்க்கப்பட்டவர்களுக்காக ஒரு இராணுவ விழா நடத்தப்பட்டது. அப்போதுதான் அந்தப் பெண்கள் தாங்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளனர் என்கிற விபரத்தை அறிந்தனர்.
சிலர் அச்சமடைந்து தங்கள் குடும்பங்களுக்கு அறிவித்ததுடன், தாங்கள் இராணுவத்தில் சேருவதற்கு விரும்பவில்லை என்று இராணுவத்தினரிடம் அறிவித்தார்கள். ஆனால் விழா முடிந்த பிற்பாடுதான் அவர்கள் போகமுடியும் என்று அவர்களிடம் இராணுவத்தினர் அறிவித்தனர். 17ந் திகதி அந்த விழா இராணுவ முகாமிற்கு உள்ளே நடைபெற்றது, அதேவேளை அந்தப் பெண்களின் குடும்ப அங்கத்தினர்கள் சிலர் அதே முகாமின் மறுமுனையில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஒரு பெண் இராணுவ அதிகாரி, ஒவ்வொரு புதிய ஆட்சேர்ப்பாளரின் அருகில் நின்றபடி அந்தப் பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் தகவல் பரிமாற்றம் செய்வதை தடுத்தார். இந்தப் பெண்களின் தகப்பன்மார்கள் மாலையணிவித்துக் கௌரவிக்கப் பட்டார்கள் மற்றும் அவர்களது தாய்மாருக்கு “வீரத்தாய்” என்று பொறிக்கப்பட்ட பட்டயங்கள் வழங்கப்பட்டன. அந்த 109 பெண்களில் 06 பெண்கள் அவர்களது குடும்பத்தினருடைய முயற்சியினால் விடுவிக்கப்பட்டார்கள். அதன் விளைவாக ஏனைய பெண்களும் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி தங்கள் குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கப்பட்டார்கள். டிசம்பர் 02 ந்திகதி முதல் முகாமுக்குள் கைபேசிகள் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டது.
அந்தப் பெண்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அந்தப் பெண்களுக்கோ அல்லது அவர்களது குடும்பங்களுக்கோ துல்லியமான தகவல்கள் வழங்கப்படவில்லை, அதனால் அவர்கள் விரும்பியதை தேர்வு செய்வதற்கான அனுமதி அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த நடைமுறைகள், சட்டப்படி தேவையான வர்த்தமானி அறிவித்தல் செயல்முறைகளை மீறுவதாக உள்ளன.
இந்தப் பெண்களின் , குறிப்பாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ளவர்களது வாழ்க்கையில் , உடல் தகுதிப் பயிற்சிகள் வழங்கவேண்டிய தேவை, மற்றும் வடபகுதி முழுவதும் இராணுவ மயப்படுத்தல், மற்றும் இந்தப் பெண்கள் சேவையில் உள்ளவரை அவர்களுக்கான தொடர்ச்சியான பாதுகாப்பு போன்றவை சம்பந்தமாக அரசாங்கம் மற்றும் இராணுவத்தினர் ஆற்றியுள்ள பங்களிப்பு காரணமாக எற்பட்டுள்ள இந்த நிலமை ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது.
வேறு இரு மாறுபட்ட நிகழ்வுகளில், குடியியல் சேவைக்குரிய நியமனங்கள் (பாலர் கல்விப் போதனை ஆசிரியர்கள், மற்றும் இராணுவத்தினர் நடத்தும் அரசாங்கப் பண்ணைகளுக்கான வேலைகள்) அதற்குரிய சிவில் நிருவாகத் துறைகளினால் வழங்கப்படுவதற்குப் பதிலாக ஸ்ரீலங்கா இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடாக பெண்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. சிவில் நிருவாகத்தில் இராணுவமயமாக்கல் மற்றும் வன்னியில் உள்ள சமூகத்தினருக்கு நடந்துள்ளவை என்பன,சமமான, நியாயமான, மற்றும் வன்முறையற்ற சமூகத்தை உருவாக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கடப்பாடு சம்பந்தமாக ஆழமான கேள்விகளை எழுப்புகின்றன.
ஐநா பாதுகாப்புச் சபையின் பிரேரணை 1325 தெளிவாக தெரிவிப்பது, யுத்தத்தின் பின்னான சூழலில் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு பெண்களின் பூரண பங்களிப்பு மிகவும் அவசியம், ஆயுதக் களைவு மற்றும் படை நீக்கம் என்பனவற்றின் முன்நிபந்தனையுடனான அவிவிருத்திக்கு, பெண்களின் தனித்தன்மையான தேவைகளை கணக்கில் கொள்ளல் வேண்டும், என்று.
முன்னர் போரினால் சீரழிந்துள்ள பிரதேசங்களில் தீர்மானங்களை மற்றும் தெரிவுகளை மேற்கொள்ளும் அதிகாரம், பெண்களுக்கு குறைவாக இருப்பதையிட்டு பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு (டபிள்யு.ஏ.என்), ஆழ்ந்த கவலை அடைகிறது, மற்றும் அரசாங்கத்தின் நல்லிணக்க திட்டத்தின் ஒரு நியாயமான செயல்முறையாக சிவில் நிருவாகம் முற்றாக சிவில் கட்டமைப்புகளிடம் கையளிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.