புதிய ஜனநாயக கட்சியின்
சுயேச்சைக் குழு – 6
ஊடகங்களுக்கான செய்தி 01.03.2010
எமது புதிய-ஜனநாயக கட்சி இப் பாராளுமன்றத் தேர்தலில் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடுவது வெறுமனே பாராளுமன்றப் பதவிகளை மட்டும் இலக்காகக் கொண்ட ஒரு விடயமல்ல. அதற்குமப்பால் இதுவரை தமிழ்த் தேசியத்தின் பேரால் முன்னெடுக்கப்பட்டு வந்த பழைமைவாத பிற்போக்கு ஆதிக்க அரசியலுக்குப் பதிலான மாற்று அரசியல் கலாச்சாரத்தை மக்கள் மத்தியில் கட்டியெழுப்பி முன் செல்வதற்கேயாகும். எனவே நமது தேர்தல் பிரச்சார ஊழியர்களும் ஆதரவாளர்களும் மக்கள் மத்தியில் மாற்று அரசியலின் அவசியத்தை விளங்க வைத்து வாக்குகளைப் பெற்றுக் கொள்வதில் முழுமையான அக்கறை செலுத்த வேண்டும்.
இவ்வாறு புதிய-ஜனநாயக கட்சி சுயேச்சைக் குழுவின் முதன்மை வேட்பாளரான சி. கா. செந்திவேல் கட்சியின் யாழ்ப்பாணப் பணிமனையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார ஊழியர்கள் மத்தியில் உரையாற்றும்போது கூறினார்.
அவர் மேலும் பேசுகையில், தமிழ் மக்கள் கடந்த அறுபத்துமூன்று வருடகால பாராளுமன்ற ஆட்சிமுறையின் கீழ் மிகப்பெரிய துன்ப துயரங்களை அனுபவித்து வந்துள்ளனர். இறுதியில் வரலாறு காணாத உயிரிழப்புகளையும் பேரவலங்களையும் பெற்றுக்கொண்டனர். இவற்றுக்கான மூலகாரணம் இந் நாட்டின் பேரினவாத முதலாளித்துவ ஆளும் வர்க்க ஒடுக்குமுறையேயாகும். அதேவேளை அத்தகைய ஒடுக்குமுறைக்கு எதிராகச் சரியான கொள்கைகளையும் வேலைத்திட்டங்களையும் முன்வைக்காது தவறான அரசியல் நிலைப்பாட்டைத் தமிழ் தலைமைகள் காலத்திற்குக் காலம் பின்பற்றி வந்தமையும் மக்களின் அழிவுகளுக்குக் காரணமாகவும் அமைந்து கொண்டதையும் மக்கள் மறந்துவிடமுடியாது.
எனவே இதுவரையான அழிவுகளுக்கும் இழப்புகளுக்கும் பிறகும் பேரினவாத ஆட்சியாளர்கள் தேசிய இனப் பிரச்சினைக்கு உரிய அரசியல் தீர்வை முன்வைக்கத் தயாராக இல்லை. அதேவேளை தமிழ்த் தலைமைகள் தமது கடந்த காலத்தின் தவறான கொள்கைகளை மறுமதிப்பீடு செய்யவோ சுயவிமர்சனம் செய்து கொள்ளவோ தயாராக இல்லை. இந் நிலையில் இதே தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் பல துண்டுகளாகப் பிளவுபட்டு பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக் கொள்வதற்கு எவ்வித குற்ற உணர்வோ கூச்சமோ இன்றி தேர்தல் களத்தில் நிற்பது தான் விசனம் தருவதாக உள்ளது.
எம்மைப் பொறுத்த வரையில் பாராளுமன்றப் பதவிகளைப் பெறுவதற்காக மட்டும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடமுடியாது. பாராளுமன்றப் பதவி அரசியலுக்கு அப்பால் மக்களை அரசியல்மயப்படுத்தி அந்த அரசியலின் ஊடாகத் தமது தலைவிதியைத் தாமே தீர்மானிக்கும் புதிய மாற்று அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்கான ஒரு களமாக இத் தேர்தல் களத்தைப் பயன்படுத்துகின்றோம். இத்தகைய அரசியல் முன்னெடுப்பின் மூலம் எமக்குப் பாராளுமன்றப் பதவிகள் மக்களால் வழங்கப்பட்டால் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்களுக்கான போராட்டங்களையும் முன்னெடுப்போம். நாம் முன்வைக்கும் மாற்று அரசியல் என்பது வெறும் தமிழ்த் தேசியவாத முழக்கங்களையோ இனவாத, சாதிவாத, பிரதேசவாத குறுகிய கொள்கைகளையோ கொண்ட ஒன்றல்ல. இவற்றுக்குப் பதிலாக தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பெண்கள், அரசாங்க தனியார் துறை ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் மக்களினதும் அடிப்படை வாழ்வுரிமைகளையும் வாழ்வாதாரங்களையும் உத்தரவாதப்படுத்தும் வகையிலான கொள்கைகளைக் கொண்ட மாற்று அரசியல் வேலைத்திட்டமாகவே இருக்கும். இவ் வேலைத்திட்டத்தில் இடதுசாரி ஜனநாயக முற்போக்கு தேசியவாத சக்திகள் ஐக்கியப்பட்டு முன்செல்வதை நாம் தொடர்ந்து வலியுறுத்துகின்றோம்.
ஆதலால் தமிழ் மக்கள் மத்தியில் புதிய அரசியல் சூழலைத் தோற்றுவிக்க முன்னோக்கி சிந்ததிக்கும் அனைத்து சக்திகளும் இத் தேர்தலில் புதிய ஜனநாயக கட்சியின் கேத்தல் சின்னத்தையுடைய சுயேச்சைக்குழு 6 ஐ வெற்றி பெறச் செய்யவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இக் கூட்டத்தில் இரண்டாம் வேட்பாளரும் கட்சியின் வடபிரதேசச் செயலாளருமான கா. கதிர்காமநாதன், மூன்றாம் வேட்பாளரான முன்னாள் உள்ளுராட்சி ஆணையாளர் த. வ. கிருஷ்ணசாமி ஆகியோரும் உரையாற்றினர்.
முதன்மை வேட்பாளர்
சி. கா. செந்திவேல்
நம் ஊடகங்களின் முதலாளிமார் இன்னமும் சம்பந்தன், டக்ளஸ், காங்கிரஸ் என்று பழைய ஏமாற்றுக் கூட்டங்களின் விடயங்கட்கே முக்கியமளிக்கின்றன.
புதிய ஜனநாயக கட்சி அவர்களுடன் போட்டியிட்டு பணத்தை அள்ளி வீச முடியாது.
இவ் வாய்ப்பை மக்கள் மத்தியில் மாற்று அரசியலுக்கான அணி ஒன்றைக் கட்டி எழுப்ப அவர்கள் பயன்படுத்துவார்களென நம்புகிறேன்.
அவர்கள் சிலராவது பாராளுமன்றத்துக்குப் போனல் அங்கு ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் குரல் கேட்கும். ஒடுக்கப்பட்ட மற்ற மக்களுக்காகவும் பேசுவார்கள்.
அதற்கு மேல் எதையும் பாராளுமன்றம் தராது.
பழைய கூட்டம் உள்ளே போனால் தமிழ் மக்களை விலை பேசிப் பதவி சலுகைகளை வாங்குவார்கள்.