கர்நாடக மாநிலத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையைச் சார்ந்த ஈழத்தமிழர்கள் 61 பேர் மங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்களை கைது செய்த போலீசார் இவர்கள் கடந்த மார்ச் மாதம் கர்நாடக மாநிலத்திற்கு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.ஆனால் இவர்கள் என்ன காரணத்திற்காக வந்தார்கள் என்று தெரியவில்லை. 70-பதுகள் துவங்கி 2009-ல் போர் முடிந்த அடுத்த சில ஆண்டுகள் வரை இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு ஈழ மக்கள் வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே ஈழ மக்கள் இந்தியாவுக்கு வருவது பெருமளவு குறைந்து விட்டது.
ஆனால் வெளிநாடுகளுக்கு தஞ்சம் தேடிச் செல்ல விரும்பும் பலரும் தமிழகம் வழியாகவும், கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு கடலோர மாநிலங்கள் வழியாகவும் வெளிநாடுகளுக்குச் செல்ல முயல்கிறார்கள். இப்போது கைதாகியிருக்கும் 61 பேரும் மார்ச் மாதம் தமிழகம் வந்து அங்கிருந்து கர்நாடக மாநிலம் சென்று அங்கிருந்து மங்களாபுரம் (மங்களூர்) வழியாக வெளிநாடு செல்ல இருந்ததாகவும், அவர்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கர்நாடக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.