21.01.2009.
மரபணு உருப்பெருக்கம் என்ற ஒரேயொரு காரணத்தால் 6 கோடி தெற்காசியர்கள் (உலக சனத்தொகையில் 1 சதவீதம்) இதயநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட விஞ்ஞான ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கிறது.
பரம்பரைப் பாதிப்பு இந்திய உபகண்டத்தில் 150 கோடி பேருக்கு ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள், மருத்துவர்களை உள்ளடக்கிய குழுவொன்று “நேற்சர் ஜெனற்றிக்ஸ் அக்கடமிக் ஜேர்னல்’ சஞ்சிகையில் எழுதியுள்ளனர்.
தெற்காசியர்களில் 4 சதவீதமானோரை பரம்பரை ரீதியான இதயநோய் தாக்குவதாக பிரிட்டன், இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
“இப்போது இந்தப் பாதிப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது. கருவுற்றிருக்கும் போது ஆரம்ப கட்டத்திலேயே இப்போது இதனைக் கண்டுபிடிக்க முடியும்’ என்று அவர்கள் விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
மரபணு ரீதியான சோதனையின் மூலம் இந்தப் பாதிப்புக்களை இளம் பராயத்திலேயே தற்போது இனங் கண்டுகொள்ள முடியும். காலப்போக்கில் இதற்கான மருந்தையும் கண்டுபிடிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடாந்தம் உலகில் 1 கோடி 75 இலட்சம் பேர் இதயநோயால் மரணிக்கின்றனர். இதேவேளை, உலகில் இதய நோயால் பீடிக்கப்படுவோரில் 60 சதவீதமானோர் இந்தியர்கள் என்று அண்மையில் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
26 நாடுகளைச் சேர்ந்த 2,085 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இந்தோனேசியா, மலேசியாவிலுள்ள தெற்காசிய வம்சாவளியினருக்கே இந்த பரம்பரை அலகால் இதயநோயின் தாக்கம் உள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.