ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் ‘ஆபரேட்டிவ் போர்ஷன்’ என்று சொல்லப்படும் தீர்ப்பின் சாராம்சத்தை நீதிபதி குன்ஹா இப்படித்தான் தொடங்கினார்…
”66 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு வழக்கில் 53 (53,60,49,954 ரூபாய்) கோடி ரூபாய் வருமானம் முறைகேடான வழிகளில் சம்பாதிக்கப்பட்டுள்ளது என்பது இந்த வழக்கில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளது. இந்த வழக்கின் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு உள்ளவர், பொது ஊழியராகப் பொறுப்பில் இருந்த காலத்தில், இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளது. அவருடைய இந்தச் செயல் ஊழல் தடுப்புச் சட்டம் 13 (i)(e)-ன் படி தண்டனைக்குரிய குற்றம். முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளவர், இரண்டாவது (சசிகலா), மூன்றாவது ( சுதாகரன்), நான்காவது (இளவரசி) குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளவர்களுடன் சேர்ந்து கூட்டுச்சதியில் ஈடுபட்டு குற்றம் புரிந்துள்ளதும் நிரூபணமாகி உள்ளது. இந்தியத் தண்டனைச் சட்டம், பிரிவு 120 (b)-ன் படி ‘கூட்டுச்சதி (criminal conspiracy)’ செய்தல் குற்றமாகும்.
இந்த வழக்கில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு உள்ளவர்கள், முதல் குற்றவாளி செய்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். இந்தியத் தண்டனைச் சட்டம் 109-ன் படி ‘குற்றத்துக்கு உடந்தை (aiding and abet)’ என்பதும் குற்றமாகிறது. எனவே, நான்கு பேரும் குற்றவாளிகள் என்று இந்த நீதிமன்றம் அறிவிக்கிறது. ஒவ்வொருவருக்குமான தண்டனை விவரங்களைப் பிறகு அறிவிக்கிறேன். நீங்கள் ஏதாவது சொல்ல விரும்பினால் சொல்லலாம்.”- நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா இப்படி வாசித்து முடித்ததும் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரோடு அவர்களுடைய வழக்கறிஞர்களின் முகமும் இருண்டு போனது. அப்போது நேரம் 11.30 மணி!
அப்போதே ஜெயலலிதாவின் காரில் இருந்த தேசியக் கொடி அகற்றப்பட்டது. அந்த ஒரு நிகழ்வே நீதிமன்ற அறைக்கு வெளியில் நின்றுகொண்டிருந்த அ.தி.மு.க-வைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கு நிலைமையை உணர்த்திவிட்டது. அனைவரும் சோகத்தில் மரத்தடியில் அமர்ந்துவிட்டனர்.
மீண்டும் வாதங்கள்!
மாலையில் நீதிபதி குன்ஹா தண்டனை விவரத்தை வாசித்தார். ”குற்றவாளிகள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்குத் தண்டனையாக ஒவ்வொருவருக்கும் தலா நான்கு வருடங்கள் சிறைத் தண்டனை அளிக்கிறேன். அதுபோல, முதல் குற்றவாளிக்கு அபராதத் தொகையாக 100 கோடி ரூபாய் விதிக்கிறேன். வழக்குத் தொடரப்பட்டபோது வழக்கில் தவறான வழிகளில் சேர்க்கப்பட்டு நீதிமன்றத்தோடு இணைக்கப்பட்ட சொத்து மதிப்பு 66 கோடி ரூபாய். அது அரசாங்க மதிப்பீட்டின்படி கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது அதன் மதிப்பு 5 மடங்காக அதிகரித்துள்ளது. எனவே, அபராதத் தொகை அதற்கேற்றவாறு கணக்கிடப்பட்டு நூறு கோடி ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் குற்றவாளி, இந்த அபராதத்தைக் கட்டாத நிலையில் கூடுதலாக ஒரு வருடம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். அதுபோல, மற்ற குற்றவாளிகள் தங்களது அபராதத்தைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக ஆறுமாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்” என்று முடித்தார்.
‘பல லட்சம் கோடி ரூபாய் ஊழல்களை மிகச் சாதாரணமாகச் சாதித்துவிடும் எந்த அரசியல்வாதிக்கும் இதுவரை 100 கோடி ரூபாய் அபராதம்’ என்று விதிக்கப்பட்டது இல்லை. இத்தனை பெரிய தொகையை அபராதமாகச் செலுத்த அறிவுறுத்தப்பட்ட முதல் அரசியல்வாதி, முதல் முதலமைச்சர் ஜெயலலிதாதான்.
”இப்போது இந்த அபராதம் பற்றி தவறான தகவல்கள் வருகின்றன. அதாவது, ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட 66 கோடி ரூபாய் சொத்துகள் போக, மீதம் 34 கோடி ரூபாய் மட்டும் அபராதமாக செலுத்தினால் போதும் என்று சொல்கின்றனர். ஆனால், தீர்ப்பில் நீதிபதி அப்படிச் சொல்லவில்லை. 100 கோடி ரூபாய் அபராதம் என்பது தனியானது. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
ஏனென்றால், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் அனைத்தும் அரசாங்கத்தினுடையவை. ஒருவர் முதலமைச்சராக இருக்கும்போது அவருடைய வருமானத்தைத் தாண்டி அவருக்குக் கொடுக்கப்படும் அன்பளிப்புகள் மற்றும் வருவாய்கள் அனைத்தும் அரசாங்கத்தின் கருவூலத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்பது விதிமுறை. அதன்படி ஜெயலலிதாவின் வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்டு இருந்த சொத்துகள் அனைத்தும் அரசாங்கக் கருவூலத்தில் சேர்க்கப்படும். அது தவிர்த்து, தனியாக 100 கோடி ரூபாயை அபராதமாக ஜெயலலிதா கட்ட வேண்டும். அதுவும் முறையான கணக்கு வழக்கு காட்டப்பட்ட பணத்தில் கட்ட வேண்டும். அந்த அபராதத்தைச் செலுத்தி அதற்கான ரசீதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால் மட்டுமே அவர் மேல்முறையீட்டுக்கோ அல்லது ஜாமீன் கேட்டோ விண்ணப்பிக்க முடியும்” என்று நீதித்துறை வல்லுநர்கள் சொல்கிறார்கள்.
மேல் முறையீடும் அப்பீலும்!
இந்த வழக்கில் மேல்முறையீடும் (அப்பீல்) ஜாமீனும் தனித்தனியாகக் கிடையாது. மேல்முறையீடு செய்யும்போது, ‘நான் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்கிறேன். எனக்கு ஜாமீனும் வழங்க வேண்டும்’ என்று மனுச்செய்ய வேண்டும். ஆனால், தீர்ப்பின் நகல் இவர்கள் கையில் கிடைக்கும் வரை அவர்கள் மேல்முறையீடு செய்ய முடியாது. மேலும் மேல்முறையீடு செய்யும்போது அவர்கள் அபராதத் தொகையைச் செலுத்தி அதற்கான ரசீதை இணைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அந்த மனு விசாரணைக்கே ஏற்றுக்கொள்ளப்படும். இந்தத் தொகை அதிகம் என்றும் கட்டுவதில் சிரமம் என்றும் சொன்னால், அதற்காகத் தனியாக கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும். அதில், தீர்ப்பு வரும் வரை சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடுக்கும் ஜாமீனுக்கும் விண்ணப்பிக்க முடியாது.
வழக்குச் செலவை யார் கொடுப்பது?
சொத்துக் குவிப்பு வழக்கை தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கு மாற்றியது முதல், அந்த வழக்கை நடத்த இதுவரை 5 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. அந்தச் செலவை கர்நாடக அரசுக்கு தமிழக அரசு கொடுக்க வேண்டும். அந்தத் தொகையை தமிழக அரசு கட்டத் தவறினால், ஜெயலலிதா 1991-க்கு முன்பாக தனக்கு இருந்ததாகக் காட்டியுள்ள சொத்துகளை விற்று அந்த ஐந்து கோடியைக் கட்ட வேண்டும்.
போயஸ் கார்டன்!
போயஸ் கார்டன் வீட்டுக்கு ஏதாவது பிரச்னை வருமா? என்ற சந்தேகம் கிளப்பப்படுகிறது. ”அந்த வீடு ஜெயலலிதா முதன்முறையாக முதலமைச்சராவதற்கு முன்பாகக் கட்டப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு அவர் அந்த வீட்டில் கூடுதலாகக் கட்டப்பட்ட பகுதிகள், செய்யப்பட்ட ஆடம்பர வேலைப்பாடுகள், அலங்காரப் பொருட்கள் அரசுடைமையாகும்” என்று சொல்லப்படுகிறது.
காவல் துறையிடம் ஜெயலலிதாவின் கார்!
ஜெயலலிதாவுக்கு பரப்பன அக்ரஹாரா சிறையில் மருத்துவர்கள் உடல் நிலையை பரிசோதித்தனர். அப்போது அவருக்கு ரத்த அழுத்தம் சீரற்ற நிலையில் இருந்தது. அதற்கான சிகிச்சை அளித்தனர். அரை மணி நேரத்தில் ரத்த அழுத்தம் சீரானது. அதன்பிறகு, நான்கு பேரையும் சிறைக்கு அனுப்ப நீதிபதி குன்ஹா உத்தரவு பிறப்பித்தார்.
சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், ஜெயலலிதாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு இருப்பதால், அவரை அவர்கள் பொறுப்பில் இருந்து தங்கள் கஸ்டடியில் எடுப்பதற்குள் கர்நாடக மாநில காவலர்களுக்குப் பெரும்பாடாகிவிட்டது. இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ள தேசிய பாதுகாப்புப் படையினர், ‘எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தால்தான், நாங்கள் அவரை அனுப்புவோம்’ என்றனர். இதில் டென்ஷனான கர்நாடக மாநில போலீஸார், ‘நீதிமன்ற உத்தரவைக் கேட்டீர்கள் அல்லவா? மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவுடன் அவர் பதவி உட்பட அவருக்குரிய சலுகைகள் அனைத்தையும் இழந்தவராகிறார். நாங்கள் எழுத்துப்பூர்வமாக கொடுப்பதற்கு எந்த அவசியமும் இல்லை’ என்றனர். அதன்பிறகு ஜெயலலிதாவை கர்நாடக காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
அதன் பிறகு, ஜெயலலிதாவின் காரில் அவரை அழைத்துச் சென்று பரப்பன அக்ரஹாரா சிறையில், எண் 7402 அறைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மணி சரியாக இரவு 8.20.
– ஜோ.ஸ்டாலின்
ஜூனியர் விகடன்-
1991 ஆம் ஆண்டில் ஆரம்பித்து ஐந்து வருடங்களில் மட்டும் முதல் முறையாக ஜெயலலிதா முதலமைச்சரான போது சேர்க்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பாக மட்டுமே இங்கு வழக்கு நடத்தப்பட்டது. 18 வருங்களின் முன்னர் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கின் பின்னதான சொத்துக்குவிப்பி இங்கு குறிப்படப்படவில்லை.
While preferring a Coplaint against a High Official, do the Judiciary look into the back-ground of the Complainant? When thousands and thousands of public are willing to accept Chief Minister Ms J, even with her concocted history of Disproportionate wealth, even a accused of Graver Crimes, punishment can be over looked, After all this is a question of money, not a Murder. She was a famous cine-star and has not Cheated any individual……………………………………………….
Defrauding the state is a much larger crime than doing the same to individuals. Your fame and position is irrelevant to the law of the land. In front of justice all are equal.