நேற்று 14.05.2016 அன்று வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40 ஆண்டு நினைவுதினம் ஆங்காங்கு கொண்டாடப்பட்டது. இத்தீர்மானம் என்பது தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான ஆரம்பத் தத்துவார்த்த அடிப்படையை வழங்கியிருக்கிறது என்பது ஒரு சாராரின் கருத்தாகவிருக்கும் அதே வேளை அதற்கான மாற்றுக் கருத்துக்களும் ஒரு சிறிய வட்டத்தினுள் எழுந்துள்ளன.
பழமைவாத ‘தமிழ்த் தேசியவாதிகளின்’ ஒரு சிறிய பிரிவினர் ஜேர்மனியில் ஒன்று கூடி சில உரைகளோடு இத்தீர்மானத்தின் நினைவு நாளை முடித்துக்கொண்டனர். இதன் மறுபக்கத்தில் அனந்தி சசிதரன் மற்றும் சிவாஜிலிங்கம் குழுவினர் வடக்கில் இத் தீர்மானத்தைக் கொண்டாடினர்.
“ஒவ்வொரு தேசிய இனத்தினதும் உள்ளியல்பான சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமை பொருந்திய, சமயச் சார்பற்ற தமிழீழ அரசை மீட்டளித்தலும் மீள உருவாக்குதலும் இந்த நாட்டில் தமிழ்த் தேசிய இனம் உளதாயிருத்தலைப் பாதுகாக்கும் பொருட்டுத் தவிர்க்க முடியதாகியுள்ளதென இம் மாநாடு தீர்மானிக்கின்றது.” என மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத் தீர்மானத்தின் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டே நடைபெற்ற இலங்கைப் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு தொகுதியைத் தவிர அனைத்துத் தொகுதிகளிலும் வடக்குக் கிழக்கில் வெற்றிபெற்றது. தந்தை செல்வா என்று அழைக்கப்படும் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையிலான பாராளுமன்றக் குழு இலங்கைப் பாராளுமன்றத்திற்குச் சென்றது. இத்தேரதலின் போது நடைபெற்ற பிரச்சாரங்களிலேயெ இலங்கையில் தமிழர்கள் மத்தியில் அதிகமான இனவாதக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ‘சிங்களவனின் தோலில் செருப்புத் தைப்போம்’ என்பன போன்ற இனவெறி வார்த்தைகளால் வடக்குக் கிழக்கு உணர்ச்சி அரசியல் தூண்டிவிடப்பட்டது. தமிழீழத்தை அடையும் வரை ஓயமாட்டோம் என்று மேடைகளில் முழங்கிய அரசியல்வாதிகளின் உணர்ச்சிப் பேச்சுக்களைக் கேட்ட இளைஞர்கள் தமது கைகளைக் கீறி இரத்தப்பொட்டு வைத்த சம்பவங்கள் சாதாரணமாகின.
இதனைத் தனக்குக் சார்பாகப் பயன்படுத்திக்கொண்ட சிங்களப் பேரினவாத அரசியல்வாதிகள் சிங்கள மக்களை உணர்ச்சிமயப்படுத்தி தமது வாக்குப் பலத்தை அதிகரித்துக்கொண்டனர். தவிர, சிறுபான்மைத் தமிழர்களை ஒடுக்குவதற்கான அங்க்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டன.
இதன் மறுபக்கத்தில் தோன்றியிருந்த இடதுசாரிய எழுச்சி இலங்கை முழுவதிலும் இனவாத அலையில் முற்றாக அடித்துச்செல்லப்பட்டது.
இந்தப் பின்புலத்தில் சுய நிர்ணைய உரிமை என்றால் என்ன, வட்டுகோட்டைத் தீர்மானத்தின் அடிப்படைகள் என்ன என்ற எந்தப் புரிதலுமின்றி ஒரு கூட்டம் உணர்ச்சி அரசியலை முன்வைக்க அதனை மற்றொருமுறை தன்னுரிமையை அழிப்பதற்கான கருவியாக பேரினவாதம் பயன்படுத்தும் சூழல் தோன்றியுள்ளது,
சுய நிர்ணைய உரிமை என்றால் என்ன?
சுய நிர்ணைய உரிமை என்பது ஒரு தேசிய இனம் தான் விரும்பினால் பெருந்தெரிய அரசிலிருந்து பிரிந்து செல்வதற்கும் இல்லையெனில் இணைந்து கூட்டாட்சி நடத்துவதற்குமான ஜனநாயக உரிமையாகும். பிரித்தானியா என்ற நாடு இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய மூன்று சுய நிர்ணைய உரிமை கொண்ட தேசங்களின் இணைவாகும். இந்தத் தேசங்கள் தாம் விரும்பினால் வாக்கெடுப்பு நடத்திப் பிரிந்துசென்று தனியரசு அமைத்துக்கொள்ளலாம்.
2014 ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்து பிரிந்து செல்வதற்கான சரவசன வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாயினும் ஒரு 5.3 வீதமான அதிகப்படியான வாக்குகளால் இணைந்து கூட்டாட்சி நடத்துவது என மக்கள் தீர்மானித்தனர்.
ஒடுக்கும் அரசை நோக்கி எமக்குச் சுய நிர்ணைய உரிமையை வழங்குங்கள் நாம் இணைந்திருப்பதா அன்றிப் பிரிந்து செல்வதா எனத் தீர்மானித்துக்கொள்கிறோம் எனக் கோருவது அடிப்படை ஜனநாயகக் கோரிகையாகக் கருதப்படுகிறது. ஐக்கிய நாடுகள் நிறுவனம் 1945 ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் இறுதியில் அனைத்து மக்களுக்கும் சுய நிர்ணைய உரிமை உண்டு என்றும் அவர்கள் சுதந்திரமாக தமது கலாச்சார, பொருளாதார நடவடிக்கைகளைத் தொடர்வதற்கும் உரிமை உண்டு என தனது தீர்மானத்தில் குறிப்பிடுகிறது. அதேவேளை சுய நிர்ணைய உரிமை என்பது தேசிய இனங்கள் அல்லது தேசங்கள் பிரிந்து சென்று தன்னாட்சி நடத்துவதற்குரிய உரிமை என ஐ.நா அங்கீகரிக்கிறது.
அமெரிக்க ஜனாதிபதி வில்சன் சுய நிர்ணைய உரிமை என்பது வெறும் சொல்லாடல் மட்டுமன்றி உலக ஜனநாயகத்தின் அடிப்படை என்றார்.
சோவியத் ஒன்றியம் முதன் முதலாக அனைத்துத் தேசிய இனங்களுக்கும் பிரிந்து செல்லும் உரிமை வழங்கபட்டது. 1918 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் அரசியல் யாப்பில் அந்த நாட்டிலிருந்த அனைத்துத் தேசிய இனங்களுக்கும் பிரிந்து செல்லும் உரிமையை வழங்கியது.
சுயநிர்ணைய உரிமையும் பிரிவினவை வாதமும்
சுய நிர்ணைய உரிமை என்பது அனைத்துத் தேசியைனங்களதும் அடிப்படை ஜனநாயக உரிமையாகும். அத் தேசிய இனம் விரும்பினால் வாக்கெடுப்பு நடத்தி பிரிந்து செல்வதற்குரிய உரிமையே சுயநிர்ணைய உரிமை. எது எவ்வாறாயினும் பிரிந்து செல்வதைத் தவிர வேறு ஒன்றையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று ‘அடம்பிடிப்பது’ பிரிவினைவாதமாகும். வட்டுக்கோட்டைத் தீர்மானம் பிரிந்து செல்வதற்கான உரிமையைக் கோருவதற்குப் பதிலாக பிரிவினையைக் கோருகிறது. தீர்மானமும் அதற்குப் பின்னான பிரச்சாரங்களும் ‘ஆண்ட தமிழர்கள் மீண்டும் ஆள்வார்கள்’ என்ற பழமைவாவத குறுகிய எல்லைக்குளிருந்து முன்வைக்கப்பட்ட பிரிவினைவாதமாகும். இக் கோரிக்கை உலகிற்கு தமிழர்களீன் போராட்டத்தின் ஆரம்பத்தையே பிரிவினைவாதமாக முன்வைத்தது. வடக்குக் கிழக்குத் தமிழர்களுக்கு பிரிந்து செல்லும் உரிமை வழங்கப்பட்ட பின்னர் அவர்கள் கூட்டாட்சியைக் கூட நடத்தியிருக்கலாம். அக்கூட்டாட்சி பிறழ்வடையும் போது பிரிந்து செல்லலாம் என்பது கூட ஒரு முழக்கமாக முன்வைக்கப்படலாம். இவை அனைத்திற்கும் பிரிந்து செல்லும் உரிமைக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
பிரிவினைவாதத்தின் எதிர்மறை விளைபலன்கள்
1. சிங்கள மக்கள் மத்தியிலிருந்து சுய நிர்ணைய உரிமைகான போராட்டத்தை இலங்கை அதிகாரவர்க்கம் அன்னியப்படுத்தி பேரினவாததை வளர்த்து அதனை வாக்குகளாக மாற்றிப் பலமடைந்தன.
2. இலங்கைப் பேரினவாத அரசுகள் உலக மக்கள் மத்தியில் தமிழர்களின் கோரிக்கையைப் பிரிவினைவாதமாக வெளிப்படுத்தி அழித்ததது.
3. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள சுய நிர்ணைய உரிமையைக் கோராமையால் பிரிவினை வாதத்தை அழிக்கிறோம் என்ற தலையங்கத்தில் சுய நிர்ணைய உரிமையை அழித்தது.
4. ஐ.நா போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்கள் தமிழீழக் கோரிக்கையைச் சுய நிர்ணைய உரிமையக் கோரிக்கையாக ஏற்றுக்கொள்ளாமைக்கான நியாங்களை வழங்கிற்று,
5. நல்லாட்சி அரசு என்ற தலையங்கத்தில் தோன்றியுள்ள அரசு பிரிவினைவாததை வெற்றிகொள்கிறோம் என்ற அடிப்படையில் சுய நிர்ணைய உரிமையை அழிப்பதற்கான நியாயத்தை வழங்கிற்று.
இன்றைய அரசியல் சூழலும் பிரிவினைவாதமும்
இன்றைய அரசியல் சூழலில் இலங்கையில் இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துகிறோம் என்ற முகமூடியுடன் சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கையை இலங்கை அரசு நிராகரிக்கின்றது. மறுபக்கத்தில் இலங்கையிலோ அதற்கு வெளியிலோ சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கை முன்வைக்கப்படவில்லை. ஒரு புறத்தில் புலம்பெயர் குழுக்கள் ‘தமிழீழம்’ என்ற கோரிக்கையை முன்வைத்து பிரிவினைவாதமே தமது நோக்கம் என்கிறன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற ஏகாதிபத்தியக் கூலிகள் சமஸ்டி ஆட்சி அல்லது மேலதிக அதிகாரம் போன்ற கோரிக்கையை முன்வைத்து சுய நிர்ணைய உரிமையை நிராகரிக்கின்றன. இலங்கைப் பேரினவாத அரசிற்கும் அதன் பின்புலத்தில் செயற்படும் ஏகபோக அரசுகளுக்கும் இது சுய நிர்ணைய உரிமையை நிராகரிக்க ஏதுவான அரசியல் சூழலை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. பிரிந்து செல்லும் உரிமை என்ற ஜனநாயக உரிமைக்கான கோரிக்கை இலங்கையில் முன்வைக்கப்பட வேண்டும். இலங்கையில் வாழும் அனைத்துத் தேசிய இனங்களுக்கும் உரித்தான இந்த உரிமைக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டு அது அனைத்துத் தேசிய இனங்கள் மத்தியிலும் பிரச்சாரப்படுத்தப்படுவதே இன்றை அவசர தேவை.
//பிரித்தானியா என்ற நாடு இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய மூன்று சுய நிர்ணைய உரிமை கொண்ட தேசங்களின் இணைவாகும். இந்தத் தேசங்கள் தாம் விரும்பினால் வாக்கெடுப்பு நடத்திப் பிரிந்துசென்று தனியரசு அமைத்துக்கொள்ளலாம்.//
ஐக்கிய இராட்சியத்தற்கு உட்பட்ட ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் தேசங்களுக்கு சுயநிர்ணய உரிமை இல்லை. ஸ்காெற்லாந்தில் வாக்கெடுப்பு நடாத்துவதை பிரித்தானிய பாராளுமன்றமே தீர்மானித்தது. அதுபோல் பிரித்தானிய பாராளுமன்றம் தீர்மானித்தாலே தவிர வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து தேசங்கள் தாம் விரும்பியபடி வாக்கெடுப்பு நடாத்தி பிரிந்து போக முடியாது.
பிரித்தானியாவில் இருப்பது அதிகாரப் பரவலாக்க அலகுகளே தவிர கூட்டாட்சி அலகுகள் அல்ல. இதுபோன்ற அடிப்படைகளே தெரியாமல் வட்டுகோட்டைத் தீர்மானத்தை விமர்சிக்கப் புறப்டுவது வெறும் காழ்ப்புணர்ச்சியே தவிர வேறேதுமில்லை.