490 இலங்கைத் தமிழர்களை ஏற்றிவந்த கப்பல் இன்று கனடாவில் தரையிறங்கியுள்ளது. கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக் டவ்ஸ் கப்பலில் உள்ளோர் தம்மை அகதிகளாகப் பிரகடனப்படுத்தியுள்ள போதிலும் கடத்தல் காரர்களும் பயங்கரவாதிகளும் கப்பலில் இருக்கலாம் என சந்தேகமுள்ளதாக சி.பி.சி செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்தார். தாய்லாந்து கொடியுடன் தரையிறங்கிய சன் சீ என்ற கப்பல் வன் கூவர் இறங்குதுறை நோக்கிப் பனிப் புகாரின் ஊடாகப் பயணித்ததாக இச் செய்திச் சேவை தெரிவித்தது.
கனடா நோக்கி வந்திருக்கும் அகதிகள் கனடிய நாட்டின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப விசாரிக்கப்பட்டு, மனித நேய அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என கனடாவின் எதிர்க்கட்சித் தலைவரான மைக்கல் இக்னேற்றியவ் வலியுறுத்தி கருத்து கூறியிருக்கிறார்.
பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்கள் உட்பட அனைத்து அகதிகளும் தகுந்த முறைப்படி கவனிக்கப்பட வேண்டும் என என்.டி.பி கட்சியின் வெளியுறவுக் கொள்கை விமர்சகர் ஒலிவியா ச்சோ (Olivia Chow) கூறியிருக்கிறார்.