ஜூலை 7 முதல் 48 மணி நேர பாரத் பந்த் நடத்த மாவோயிஸ்ட் நக்சலைட்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில், மாவோயிஸ்ட் அமைப்பின் செய்தித் தொடர்பாளரான ராஜ்குமார் என்கிற ஆசாத் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து இந்த பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக நக்சல் தலைவர் கிஷன்ஜி தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டத்திலிருந்து ரயில் போக்குவரத்து , பால், ஆம்புலன்ஸ், தீயணைப்புப் பணி ஆகியவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து கிஷன்ஜி மேலும் கூறுகையில், மாவோயிஸ்ட் கட்சியின் செய்தித் தொடர்பாளராக விளங்கி வந்த ஆசாத்தை நாக்பூரில் வைத்துப் பாதுகாப்புப் படையினர் பிடித்துள்ளனர். அவருடன் சுகதேவ் என்ற இன்னொரு மாவோயிஸ்ட்டையும் கைது செய்துள்ளனர்.
பின்னர் இருவரையும் அடிலாபாத்துக்குக் கொண்டு சென்று அங்கு வைத்து ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றுள்ளனர் என்றார் கிஷன்ஜி.