கூலித்தமிழும் லைக்கா மொபைலும்
ஊழிக்காலத்தின் முடிவாய்
ஊற்றெடுத்த கண்ணீரையும்
செந்நீரையும் – தன்
சட்டைபைகளில்
பெரு நிதியாக்கிய
பெரு முதலாளியின் காலடியில்
கூலித் தமிழ் -தன்
அறம் இழந்து வருகிறது
அக்கம் பக்கமுள்ள
சக மனிதரின் அவலக் குரல்
மூளையில் பதிய அனுமதிக்காத
பெயர்களில் மாத்திரம்
தோழமை சுமந்தவரின்
வெற்று வார்த்தை முழக்கங்களில்
கூலித் தமிழ்
கூனிக் குறுகி எம்மிடம் வருகிறது
கொலை வெறியும் லாபவெறியும்
கொண்டலையும்
பணம் படைத்தவரின் பலம் காட்ட
அவர் போடும் சில்லறைக்காய்
கூலித் தமிழ் -தன்
சுயம் இழந்து தடுமாறி வருகிறது
மேடை கிடைத்தால் போதும்- அது
உயிரிழந்த உடல்கள் மீது நின்றாலென்ன
அவர்தம்
அச்சம் அவலம் அழுகுரல்கள் மீது அமைந்தாலென்ன
லைக்காவின் பிச்சைக்காய்
கூலித் தமிழ்
மண்டியிட்டு வருகிறது
வகை வகையாய் – நம்
மனிதரை கொன்று குவித்தார்
திசையெங்கும் இருள் வெளியில்
துரத்தியடித்தார்
ஒரு பிடி சோறும்
ஒண்டிக் கொள்ள ஓரிடமும்
இல்லiயென்றே வீசியெறிந்தார்
உயிருக்காய் ஓடியவரின் காலடி ஓசைகள்
நம் இதயங்களின் துடிப்பாக
அத்தனையும் நிகழ்த்தியவரின்
கூட்டுப் பங்காளியுடன்
ஓட்டிக் கொண்டு வரும்
கூலித் தமிழ்
யாருக்காக
என்ன சொல்லி விட போகின்றது?
*லைக்கா மோபைல் நிறுவனத்தின் ஆதரவுடன் இலண்டனில் வெளியாகும் ‘கூலித் தமிழ்’ என்ற நூல் வெளியீட்டு நிகழ்வை முன்வைத்து