சுன்னாகத்தில் நீர் மற்றும் நில வளம் நஞ்சாக்கப்பட்ட செய்தி இனியொருவில் ஆரம்பித்து உலகம் முழுவதும் முள்ளிவாய்காலுக்குப் பின்னான மற்றொரு அவலமாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட மற்றொரு பல்தேசிய நிறுவனமான வேதாந்தாவின் தலைமையில் நடத்தப்படும் கடலடி இயற்கை வாயு அகழ்வு தொடர்பான செய்தியை மின் வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க வெளியிட்டுள்ளார்.
கேரின் இந்தியா என்ற வேதாந்தாவின் உப நிறுவனம் கேரின் லங்கா என்ற அதன் மற்றொரு உப நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் மன்னார் கடற்படுக்கையில் எண்ணை மற்றும் எரிவாயுவிற்கான அகழ்வு இரண்டு இடங்களில் முழுமையடைந்துள்ளதாகவும், மூன்றாவது பகுதியில் ஆய்வுகள் முழுமையடையும் நிலையில் உள்ளதாகவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
விரைவில் இயற்கை வாயு விற்பனையை நிறுவனம் ஆரம்பிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
நைஜீரியா உட்பட பல்வேறு ஆபிரிக்க நாடுகளின் பல பகுதிகளை மக்களின் வாழ்வைச் சிதைத்து அங்கு மக்கள் வாழ முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மன்னாரில் ஏற்படுத்தப்படும் அழிவு கடல் வளத்தை முற்றாகச் சூறையாடும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.
சுன்னாகம் பேரழிவிற்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்கள் மன்னார் கடற்படுக்கையை மையமாகக்கொண்டு ஏற்படுத்தப்படும் அழிவுகளுக்கு எதிரானதாகவும் அமைய வேண்டும். சுன்னாகம், மன்னார் கடற்படுக்கை போன்றன அவசரமாகப் பாதுகாக்கப்பட வேண்டும். அழிவு ஆரம்பமாகிவிட்டதை சம்பிக்க ரணவக்க ஏற்றுக்கொண்டுள்ளார்.
மன்னாரில் அகழ்வு நடத்தப்படும் பிரதேசங்கள், அதன் பின் விளைவுகள் போன்றன தொடர்பான ஆய்வு ஒன்றை அரச நிறுவனங்களுக்கு அப்பால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நீரியல் விரிசல் (Hydraulic Fracturing or Fracking) எனும் மிக அபாயகரமான எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வு முறைமை அண்மைக்காலங்களில் மேற்கத்தைய நாடுகளில் பாவிக்கப்படத் தொடங்கியமையால் பல மக்கள் போராட்டங்கள் மேற்கத்தைய நாடுகளில் அடிக்கடி வெடிக்கின்றன. மேற்கத்தைய நாடுகளுக்கு உரித்தான அதிநவீன அடக்குமுறைகளினால் அப்போராட்டங்களும் திசை திருப்பப்படுகின்றன. பிரித்தானியாவில் பொதுப்பட்டியலில் பூகோள அரசியல் சார்ந்த பெரும் ஊழல்களினால் பதிந்துள்ள ‘வேதாந்த றீஸோர்ஸஸ்’ தனது உப நிறுவனமான ‘கார்ன் இன்டியா’ (Cairn India) மூலம் நிலத்தடி மற்றும் ஆழ்கடலடி ‘நீரியல் விரிசல்’ முறைமையை பெரிதும் பாவித்து வருகின்றது.
ஆழ்கடலடி ‘நீரியல் விரிசல்’ தமிழ்க் கடற்பரப்புக்கு அண்மித்ததாக ‘க்ரிஷ்ணா கோதாவரி’ படுக்கையில் நிறைவேறி வருவதாகவும் அதி ரகசியமாக தமிழ்க் கடற்பரப்பில் தொடரும் அகழ்வாராய்ச்சிகளும் ‘நீரியல் விரிசல்’ முறைமைகளை உபயோகிக்குமா என்று ‘வேதாந்தவை முறி’ (Foil Vedanta) எனும் சர்வதேச மக்கள் போராட்டக் குழு அண்மையில் எழுதிய கட்டுரை முக்கியமானது.
இதில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிப்பதே அண்மையில் சம்பிக்க ரணவக்க சுற்றுச் சூழல் மீதான தாக்கம் பற்றிய ஆய்வு இனி மேற்கொள்ளப்படும் என்று மழுப்பியமை. சுன்னாகத்தில் நடந்தேறியுள்ள சுற்றுச் சூழல் மாசடைவு எனும் பாரிய குற்றத்திற்கு பதிலளிக்காது ரணவக்க முண்டியடித்துக் கொண்டு அடுத்த பாரிய அழிவுக்கு வித்திடுவது அவனின் அண்மைய மைத்திரிபாலவுடனான இந்திய விஜயத்தினால் வந்த தெம்பு.
‘வேதாந்தவை முறி’ (Foil Vedanta) அண்மையில் எழுதிய கட்டுரையில் எவ்வாறு இந்திய அதிகார வர்க்கம், குறிப்பாக வேதாந்த நிறுவனத்தின் இயக்குனனான ‘ஓம்கார் கோசுவாமி’ 2013 இல் இந்தியா ஐ.நா மனித உரிமை சபையில் ஸ்ரீலங்காவுக்கு மனிதவுரிமை மீறல்களுக்கு முகங்கொடுக்க ஒரு வருட அவகாசம் (அது தான் இன்று ஆறுமாத பிற்போடல் எனும் இன்னொரு சாட்டில் நிரந்தர பிற்போடலுக்கு வ்ழிவகுத்தது )
வழங்கப்படுவதற்கு பெரிதும் உழைத்தவன் என்பதுவும் ஆதாரத்துடன் பதிந்துள்ளது.
http://www.foilvedanta.org/articles/cairn-lanka-and-the-corporate-takeover-of-the-tamil-seas/
http://parwai.blogspot.ca/2015/02/blog-post.html?spref=fb
http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/117089/language/ta-IN/article.aspx