கலைவடிவங்கள் ஒவ்வொன்றும் அதை உருவாக்கும் மக்களின் கலாச்சாரத்திலும் ,வரலாற்றிலும் நிலைபெறுகிறது.அவை தாம் உருவான சமூகத்தின் பெருமையையும் நிலைநாட்டிக் கொள்கின்றன.
தலைமுறை, தலைமுறையாக உயிர்பெறும் கலைகள் வாழ்வில் இரண்டறக் கலந்து , அதை உருவாக்கியவர்களது உயரிய சிந்தனைகளையும் ,அவர்களது உயர் நாகரீகத்தையும் காட்டுவதுடன் பிறரையும் சென்றடைகிறது.
தென்னகத்தின் பழங்குடி மக்களான தமிழ் மக்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக பழகி , செழுமைப்படுத்திய இசை வடிவங்களில் கிடைத்த உன்னதமான வடிவம் ராகங்கள் ஆகும்,
பழந் தமிழர்களின் ஐந்து நிலத்திணைகளில் மலையும் மலை சார்ந்த பகுதியை குறிஞ்சி நிலம் என அழைத்தனர் .குறிஞ்சி நிலத்திற்குரிய பண்னையும் வகுத்தனர்.அவர்கள் அதனை குறிஞ்சிப்பண் என்றும் அழைத்தனர்.
” குறிஞ்சிப்பண்ணை ,மதுமாதவி, செருந்தி , துருத்தி , செந்துருதி,செந்துருத்தி , செந்திருதி, , , செருந்து, , செந்தி, செந்து, செந்திசை, குறிஞ்சிப்பாணி, மத்யமாவதி என பல்வேறு பெயர்களால் அழைத்தனர் ” என சிலப்பதிகாரம் தொடங்கி பல்வேறு பழந் தமிழ் இலக்கியங்களிலிருந்து எடுத்துக்காட்டுக்களை ஆதாரமாகக் கூறுவார் இசை அறிஞர் நா.மம்மது.
பழந் தமிழர்கள் தங்கள் குறிஞ்சி நிலத் தெய்வமான சேயோனை இந்த குறிஞ்சிப்பண்ணில் பாடி மகிழ்ந்திருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை எனலாம்.
குறிஞ்சிப்பண் என பழந் தமிழர் போற்றிய ராகத்தின் இன்றைய பெயர் மத்யமாவதி.
ஐந்து சுரங்களைக் கொண்ட [ Pentatonic Scale Ragas] இனிமையான ஐந்து ராகங்களான மோகனம் , ஹிந்தோளம் ,சுத்ததன்யாசி ,சுத்தசாவேரி போன்றவற்றுடன் மத்யமாவதியும் அடங்கும்.
எல்லையற்ற இன்பமும் , புத்துணர்வும் ,உத்வேகமும் தந்து உள்ளத்தை பரவசப்படுத்தும் ராகங்களில் தனிச் சுவை தருவது மத்யமாவதி ராகம்.
உள்ளத்தில் பேருணர்ச்சிகளை பெருக்கெடுக்க வைத்து , உள்ளார்ந்த இன்பத்தை சுரக்கவைத்து இனிய ரசங்களை பெருக வைக்கும் ராகங்களில் முதன்மையானது மத்யமாவதி ராகம்.
உச்சஉணர்ச்சி [ Exuberance ],திடீர் எழுச்சி ,உணர்ச்சிப் பெருக்கு ,களிப்பு , கிளர்ச்சி போன்ற பல அர்த்தங்களை இசையில் இன்பரசமாகத் தருவதில் மத்யமாவதிக்கு இணையான ராகம் இல்லை எனலாம் .
குறிஞ்சிப்பண் என பழந் தமிழர் போற்றிய ராகத்தின் இன்றைய பெயர் மத்யமாவதி.
ஐந்து சுரங்களைக் கொண்ட [ Pentatonic Scale Ragas] இனிமையான ஐந்து ராகங்களான மோகனம் , ஹிந்தோளம் ,சுத்ததன்யாசி ,சுத்தசாவேரி போன்றவற்றுடன் மத்யமாவதியும் அடங்கும்.
உலகெங்கும் ஒலிக்கக்கூடிய ஐந்து சுரராகங்களில் ஒன்றான மத்தியமாவதியின் சாயல்களை உலகின் பல பாகங்களிலும் நாம் கேட்டு இன்புறலாம் .குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளிலும் , ஆபிரிக்க நாடுகளிலும் , தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் அதிகமாகவும் , தென்அமெரிக்க பழங்குடி மலைவாழ் செவ்விந்தியமக்களின் வாய்மொழிப்பாடல்களிலும் கேட்கலாம் .
ஆபிரிக்க நாடான சூடான் மக்களிசையில் , மக்களின் தன்னெழுச்சியான ஆட்டத்துடன் ஆரப்பரிக்கும் இந்த ராகத்தின் இதயத் துடிப்பை தாராளமாக கேட்கலாம்.
செவ்வியலிசையான கர்நாடக இசையுலகில் தொடர் பயன்பாட்டில் உள்ள இந்த ராகம் ,பெரும்பாலும் கச்சேரியின் முடிவில் பாடப்படும் ராகமாவும் விளங்குகிறது.மத்யமாவதி ராகத்தைப் பாடி மங்களமாக கச்சேரியை முடிப்பது என்பது கர்நாடக இசையுலகில் சம்பிரதாயமாகக் கருதப்படுகிறது .
கர்னாடக இசையில் 22 வது தாய் ராகமான கரகரப்ப்ரியா ராகத்தின் ஜன்ய ராகம் இது .இந்த ராகத்தை கிரகபேதம் செய்தால் ஹிந்தோளம் , சுத்ததன்யாசி , மோகனம் போன்ற ராகங்கள் பிறக்கும்.ஐந்து சுரங்களைக் கொண்ட [ pentatonic scale ] ராகங்களுக்கே உரிய இனிமை இந்த ராகத்திலும் நிறைந்திருக்கிறது .
ஆரோகணம் : ச ரி2 ம1 ப நி2 ச
அவரோகணம் : ச நி1 ப ம1 ரி2 ச
கர்னாடக இசையில் அனேக பாடல்கள் இந்த ராகத்தில் உள்ளன :
இன்னமும் பிறவாமலே – முத்துத்தாண்டவர்
தர்மசம்வர்த்தினி – முத்துசுவாமி தீட்சிதர்
நளின லோசனா நின் – தியாகராஜர்
நகுமோ நீ கலவானி – தியாகராஜர்
ஆடாது அசங்காது வா – ஊத்தக்காடு
கற்பகமே கண் பாராய் – பாபநாசம் சிவன்
பாலிம்சு காமாட்சி – சியாமா சாஸ்திரி
கர்னாடக இசையில் மட்டுமல்ல இசைநாடகங்களிலும் ,நாட்டியங்களிலும் அதிகம் பயன்படும் ராகங்களில் இதுவும் ஒன்று.
வட இந்திய இசையான ஹிந்துஸ்தானிய சங்கீதத்தில் இதனை மதுமத் சாரங் அல்லது மத்யமாவதி சாரங் என அழைக்கின்றனர் .ஹிந்துஸ்தானிய சங்கீதத்தில் மிக விரிவாக ஆலாபனை செய்யப்படும் ராகங்களில் மத்யமாவதியும் ஒன்று.
மேக் மல்கர் ராகமும் மத்யமாவதி ராகத்திற்கு நெருக்கமான ராகமாகக் கருதப்படுகிறது.
பிருந்தாவனசாரங்கா , பிருந்தாவனி போன்ற ராகங்கள் மத்யமாவதிக்கு மிக நெருக்கமானவையாக கருதப்படுகின்றன.
குறிப்பாக பிருந்தாவனசாரங்கா மிக நெருக்கமான ராகமாக இருப்பதால் சில குழப்பங்களும் உண்டு என்பர்.
வயலும் ,வயல்சார்ந்த இடத்து மக்களான மருதநிலத்து மக்களின் வாழ்வை ,அவர்களது பாடல்களை சிலப்பதிகாரத்தில் சிறப்பித்து கூறும் இளங்கோவடிகள் நாடுகாண் காதையில் உழவர்கள் பாடல்கள் என ” ஏர்மங்கலம் ” , ” முகவைப்பாட்டு ” என்பவற்றை உழவர் பாடல்கள் எனக் கூறுவார்.
முதன்முதலாக ஏர் பூட்டி உழுவதை “பொன்னேர் ” என்று ஏரை வாழ்த்தி பாடும் பாடலே ஏர்மங்கலம் என்றும் ,நெல் அறுவடையாகி ,நெல் சுமக்கும் போதும் ,பின் ” போர் ” அடிக்கும் போதும் பாடும் பாடல்கள் முகவைப்பாடல்கள் என அழைக்கப்பட்டன என்பர்.இவ்விதம் உழவர்களும் , உழத்திகளும் ஆடியும் பாடியும் மகிழ்ந்த கூத்து வகைகளும் , பாடல்வகைகளும் பள்ளு இலக்கியமாகின.
உழவர்களின் வாழ்வைப் பிரதிபலித்த , அதில் முகிழ்த்த பள்ளு இலக்கியத்தின் முதல் இலக்கியமான முக்கூடற்பள்ளு பாடல்கள் பாடப்பட்ட ராகங்களில் மத்யமாவதி ராகமும் முதன்மையானது.
உழைக்கும் மக்கள் தங்கள் உழைப்பின் களைதீரவும் , தமது துன்பம் துயரத்தைப் போக்கவுமே பாடினர்.அந்தப்பாடல்களின் சந்தக்குழிப்புகளிலிருந்து மெருகேற்றப்பட்டு ராகங்களாகின என்பது இசை வரலாறாகும்.
இசையின் கதை என்பது ஓசை , ஒலியின் கதை ஆகும். இன்பமும் ஈர்ப்பும் இயைந்து தரும் இசையின் உட்கிடையாக இறுகப்பற்றியிருக்கும் ராகங்களில் அறிந்தும் அறியாமலும் மக்கள் காலங்காலமாக லயித்திருக்கின்றார்கள்.
ராகங்களில் வேர்பிடித்து , மக்கள் இதயபீடங்களில் அமர்ந்த ராகங்களில் , ஈர்ப்புத் தன்மைமிக்க பாடல்களை மரபு சார்ந்தும் திரைப்படகாட்சிகளுக்கு இசைந்த மெல்லிசை கானங்களாகவும் , தாம் அனுபவித்த விதங்களிலெல்லாம் சுதந்திரமாகவும் தந்து மக்களைக் கவர்ந்த திரையிசையமைப்பாளர்கள் தங்கள் இசையில் பயன்படுத்தி வெற்றி கண்ட அற்புதமான ராகங்களில் ஒன்று அருமை மத்யமாவதி !
ஊற்றிலிருந்து சுரக்கும் நீர் போல நினைவுகளை சுரக்க வைக்கும் தேன்வண்டல் பாடல்கள் தான் எத்தனை , எத்தனை ! மெல்லிசையில் ராகரசங்களால் நெஞ்சில் நிழல் பரப்பிய பாடல்கள் எத்தனை எத்தனை !
மெல்லிசை என்ற இனிமை விளக்கேற்றி திரையை ஒளிவீசச் செய்த மேதைகளின் ரசவாதம் நம்மை வியக்க வைக்கிறது.
மலரிலும் மெல்லிய , தேனினும் இனிய உணர்ச்சி ததும்பும் இந்த ராகத்தை ,அதில் உட்புதைந்த இனபத்தை துழாவி துழாவி எடுத்து அதில் இன்பங்களை இழைத்து இழைத்து அதன் பெருமையை தூக்கி நிறுத்தியவர்கள் திரையிசைமைப்பாளர்களே என்பது மிகையான கூற்றல்ல!
தமிழ் திரையில் வெளிவந்த மத்யமாவதி ராகத்தில் அமைந்த பாடல்கள் சில :
01 அங்கும் இங்கும் எங்கும் இன்பமே – படம் : ராஜமுக்தி [1948] – பாடியவர்கள்: எம் .கே .தியாகராஜபாகவதர் + எம் எல் வசந்தகுமாரி – இசை:சி ஆர் சுப்பராமன் -இயற்றியவர் : பாபநாசம் சிவன்
மத்யமாவதி ராக அலையில் மிதக்கும் இன்பத்தை அள்ளி வீசும் பாடல்.தியாகராஜபாகவதரும் , எம் எல் வசந்தகுமாரியும் இணைந்து சுருதி சுத்தமாகப் பாடிய பாடல்.இளம் இசையமைப்பாளரான சி.ஆர். சுப்பராமன் இசையமைத்த செவ்வியல் இசை தழுவிய பாடல்.எம் . எல் .வசந்தகுமாரி பாடிய முதல் பாடலும் இதுவே.
1940 களின் இறுதியில் மெல்லிசையின் வீச்சுக்களை தர ஆரம்பித்த சி.ஆர். சுப்பராமன் ,எம் கே.தியாகராஜபாகவதருடன் இணைந்து தனது இசைக்கனவுகளில் ஒன்றை நிறைவு செய்தார்.செவ்வியல் இசைப்பாங்கிலும் தான் மேதை என்பதை சி.ஆர். சுப்பராமன் நிறுவிய பாடல்களில் ஒன்று.
பாண்டுரங்கன் அருள் இருந்தால் இங்கும் அங்கும் எங்கும் இன்பமே என்று மத்யமாவதியில் ஈசனைத் துதிக்கும் அருமையான பாடல்.
02 அற்புத லீலைகளை யார் அறிவார் – படம் : சிவகாமி [1960] – பாடியவர் : M.K.தியாகராஜ பாகவதர் – இசை : K.V.மகாதேவன் – இயற்றியவர் : பாபநாசம் சிவன் சிவகாமி தமிழ் திரைப்படம் 1960 இல் வெளிவந்த தியாகராஜபாகவதரின் படமாகும்.மிக அரிதாக கே.வீ.மகாதேவன் தியாகராஜபாகவதரின் படத்திற்கு இசையமைத்த படமுமாகும்.
மத்யமாவதி ராகத்தை இசைத்த முன்னோடிகளில் இசைமேதை கே.வீ .மகாதேவனும் ஒருவர் என்பது அவதானத்திற்க்குரியது.எளிமையான இடையிசையில் மத்தியமாவதி ராகத்தின் சுகம் தரும் இன்பத்தை இதமாக அமைத்துள்ளார் இசையமைப்பாளர்.பாடலைப் பாடி , அதைத் தனதாக்கி வெற்றி கண்டவர் பாகவதர்
03 ஆனந்தமாய் வாழ வேணுமே – படம் : கூண்டுக்கிளி [ 1954 ] – பாடியவர் :T.V. ரத்தினம் – இசை : கே வீ மகாதேவன்
ஆனந்தமாய் வாழ வேணுமே – நாட்டில்
அமைதி பொங்கி பசியும் பிணியும் நீங்கியே
ஆனந்தமாய் வாழ வேணுமே …..
என்று முற்போக்குக் கவிஞன் விந்தன் எழுதிய பாடலுக்கு இன்ப லாஹிரியை தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் மத்யமாவதி ராகத்தில் , கிராமத்து பெண் ஒருத்தியின் எண்ண எதிரொலியாக
இசைமேதை கே.வீ .மகாதேவன் அமைத்த ரீங்காரப்பாடல்.
குரலில் கம்பீரமும் , விறுவிறுப்பும் , கமகங்களை அனாயாசமாக வெளிப்படுத்தும் தனித்தன்மையும் கொண்ட T.V.ரத்தினம் பாடி அசத்திய பாடல்.
பாடல் அமைப்பிலும் , பாடும் விதத்திலும் பரவச மின்னலை நெஞ்சில் பாய்ச்சும் பாடல் என்றால் மிகையில்லை.படத்தில் கதாநாயகி அறிமுகமாகும் பாடல் இது.
04 ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா – படம் :மஞ்சள் மகிமை – பாடியவர் : கண்டசாலா + சுசீலா – இசை : மாஸ்டர் வேணு
மனதை வருடும் ஹம்மிங்குடன் ஆரம்பிக்கும் அழகான பாடல்.மத்யமாவதி ராகத்தை கௌரவப்படுத்திய மாஸ்டர் வேணு என்ற இசையமைப்பாளரின் ஒப்பற்ற கற்பனை ஆற்றலைப் பறை சாற்றும் பாடல்களில் ஒன்று.எப்படிப்பட்ட உணர்வு அந்த இசைமேதைக்கு இருந்திருக்கிறது என்று எண்ணி எண்ணி வியக்க வைக்கின்ற இசையமுதம்!
இலங்கை வானொலியில் நெஞ்சில் நிறைந்தவை நிகழ்ச்சிக்கென்றெ அமைக்கப்பட்ட பாடலோ என்ற எண்ணம் எழ வைக்கின்ற பாடல்.பட்டுப்போன்ற இந்தப்பாடல் எத்தனை தடவை காற்றலலையில் மிதந்திருக்கும் !!
மாங்கல்ய பாக்கியம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் தமிழ் வடிவமான இப்படத்திற்கு மஞ்சள் மகிமை என பெயர் சூட்டியவர் கலைஞர் கருணாநிதி என்பதும் அதற்காக அவர் பெற்ற ஊதியம் 5,000 ரூபாய் என்பது கொசுறு செய்தி.
05 பார்த்தீரா இவர் சரசம் – படம் : மாங்கல்யம் – பாடியவர் : கண்டசாலா + பி .லீலா – இசை : எஸ் .ராஜேஸ்வரராவ்
மல்லிகையின் தேனை அருந்தி கிறங்கும் பொன் வண்டுகளை போல நம்மை மத்யமாவதி ராகத்தேனில் திளைக்க வைக்கும் மதுரமான பாடல். இதுவும் தெலுங்கு சினிமாவில் வீசிய மெல்லிசைக் குளிர்ச்சியில் விளைந்த தேனமுதம். அருமையான இசையில் நம்மை குழைத்தெடுத்தவர் இசைமேதை எஸ்.ராஜேஸ்வரராவ்.
06 மலரோடு விளையாடும் தென்றலே வாராய் – படம் : தெய்வபலம் [1959 ] – பாடியவர் : பி பி ஸ்ரீநிவாஸ் – இசை : அஸ்வத்தாமா
இதயங்களை பிசையும் அதே வேளையில் மனகிழ்ச்சியையும் தந்து அதீதக் கற்பனைகளைக் கிளர வைக்கும் பாடல்கள் பல தமிழ் சினிமாவில் வெளியாகி இருக்கின்றன.ஒரு இசைக்கலைஞன் அதிக படங்களுக்கு இசையமைக்காவிடினும் , இசையமைக்கும் ஒரு சில படங்களிலேயே அவர்களது அடியாழக்கற்பனைகளை உந்தி தள்ளி அமரத்துவமிக்க பாடல்களைத் தந்து விடுகிறார்கள். அவை இசை ரசிகர்கள் மனதில் என்றைக்கும் நிலைபெற்று இசைப்பொக்கிசங்களாகியும் விடுகின்றன.
அந்தப் பாடல்களின் பல்லவியை பாடும் பொழுதோ கேட்கும் பொழுதோ மனதில் ஒரு வித லாஹிரி உண்டாகிவிடும்.இசையின் திளைப்பில் நம்மைக் கட்டி வைக்கும் மந்திரப் பண்பு கொண்ட மத்யமாவதி ராகம் தரும் சுகத்தை நாம் பாரதிதாசனின் கவிதையிலும் [அழகின் சிரிப்பு ] நாம் தரிசிக்கலாம்.
,,,,,,வெள்ளம்
எழில் வீணை , அவ்வீணை மேல்
அடிக்கின்ற காற்றே , வீணை
நரம்பினை அசைத் தின்பத்தை
வடிக்கின்ற புலவன் !
பாரதிதாசன் விரிந்த கற்பனையில் தோன்றும் காற்றுப்புலவன் மீட்டும் வீணை இசை போன்ற மென்மையை இந்த விரகதாபப் பாடலில் தந்து சிறப்பித்தவர் இசையமைப்பாளர் அஸ்வத்தாமா.இவர் வீணை காயத்ரியின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பாடலைப் பாடியவர்களும் [ பி .பி.ஸ்ரீநிவாஸ் + எஸ் .ஜானகி ] நெஞ்சம் நெகிழும் வண்ணம் பாடிச் சிறப்பித்திருக்கிறார்கள்.தென்றல் பற்றிய பாடலாசிரியரின் வர்ணனையும் சுவையின்பத்தை கூட்டிச் செல்கிறது.
07 தங்கச்சி சின்ன பொண்ணு – படம் : கருப்புப்பணம் [1963 ]- பாடியவர் : சீர்காழி + எல்.ஆர் .ஈஸ்வரி + குழுவினர் – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
கவாலி இசையை ஆதாரமாகக் கொண்டு அமைக்கப்பட்ட மெட்டில் மத்யமாவதியை அமைத்து இனிமையின் உச்சங்களை தொட்டு பூரிக்க வைக்கின்ற பாடல்.கைதட்டலும் , ஹம்மிங்கும் உள்ளங்களைக் குதூகலிக்க வைக்கிற அற்புதமான பாடல்.சீர்காழியாரின் ஹம்மிங்கும் , ஹோரசில் காஷ்யமும் ஒன்று கலந்து மெல்லிசையில் புதுத் தடம் பதித்த மெல்லிசைமன்னர்களின் பரிசோதனைப் பாடல்களில் ஒன்று.
08 எல்லோரும் உன்னை நல்லவன் என்றே கொண்டாட வேண்டுமடா – படம் : பாக்யவதி – பாடியவர் :ஆர் பாலசரஸ்வதி தேவி – இசை :எஸ்.தட்சிணாமூர்த்தி
எந்த ராகத்திலும் ,எந்தவிதமான உணர்வுகளையும் தரும் வல்லமைமிக்க திரை இசையமைப்பாளர்கள் இனிமையும் , குழைவும் , மென்மையும் தரும் மத்தியமாவதி ராகத்தை விட்டு வைப்பார்களா ..?
தாய்மையின் அன்பையும் , இனிமையையும் , கனிவையும் தனது குரலில் கொண்ட பாடகி ஆர் பாலசரஸ்வதிதேவி. அவர் பாடிய இனிய தாலாட்டுப் பாடல்களில் ஒன்று இந்த இனிய பாடல்.
இந்த பாடலுக்கு இசையமைத்தவர் இசைமேதை எஸ்.தட்சிணாமூர்த்தி.” சின்ன அரும்பு மலரும் ,சிரிப்பைச் சிந்தி வளரும் ” என்று சிறந்த தாலாட்டுப்பாடலை ஆபேரி ராகத்தில் தந்த மேதை அவர்.
09 இனிதாய் நாமே இணைந்திருப்போமே – படம் : காலம் மாறிப்போச்சு – பாடியவர் :திருச்சி லோகநாதன் + ஜிக்கி – இசை : மாஸ்டர் வேணு
இசைமேதை மாஸ்டர் வேணு இசையமைத்த புத்தெழுச்சி நிறைந்த பாடல்கள் கொண்ட “காலம் மாறிப்போச்சு “படத்தில் வெளிவந்த அற்புதமான மத்யமாவதி ராகப் பாடல்.காதலின் ஆனத்தத்தை என்றென்றும் கேட்டனுபவிக்கும் வண்ணம் இசையின் இன்ப ஓட்டங்களில் நம்மை கைபிடித்து அழைத்துச் செல்லும் அருமைப்பாடல்.
திருச்சி லோகநாதன் – ஜிக்கி இணை பாடலின் உத்வேகத்திற்கு மெருகுணர்ச்சியூட்டும் வண்ணம் பாடிச் சிறப்பித்திருக்கின்றனர்.
10 கண்ணுடன் கலந்திடும் சுப தினமே – படம் : பாடியவர் : கண்டசாலா + பி லீலா – இசை :
தெலுங்கிலும் தமிழிலும் வெளியான திரைப்படத்தில் வெளியான இந்தப்பாடல் மெல்லிசையின் முன்னோக்கிய இசைவார்ப்பு என்று துணிந்து கூறலாம்.மெல்லிசையின் உயிர்ப்புக்கு அடிகோலிய அந்தக் காலங்களில் வெளிவந்த இனிமையான பாடல்களில் ஒன்று.தெலுங்கு சினிமாவில் வீசிய மெல்லிசைத் தென்றலில் மிதந்து வந்த நறுமணங்களில் ஒன்று.
மத்யமாவதி ராகத்தின் மென்மையை காதலின் ஏகாந்த உணர்வாக அமைத்து சிறப்பித்த தெலுங்கு சினிமா இசையமைப்பாளர்கள் அதன் மேன்மையையும் காட்டியவர்கள் என்று துணிந்து கூறலாம்.
செனாய் வாத்தியத்தின் பிரயோகமும் ,அனுபல்லவியில் “காவில் குலாவிடும் கோகிலமே” என்ற வரிகளை கண்டசாலா பாடும் பாங்கும் , சரணத்தில் பி.லீலா ” மலர்க்காவினிலே வீர விகாரமோ ” என்ற வரிகளை பாடும் போதும் நெஞ்சம் கனிந்து விடுகிறது.
மத்யமாவதியின் எழில் காட்டும் பாடல்.
12 எங்கிருந்தோ வந்தான் இடை சாதி நானென்றான் – படம்: படிக்காத மேதை [1954 ] – பாடசீர்காழி கோவிந்தராஜன் – இசை :கே வீ மகாதேவன்.
பாரதியார் எழுதிய பாடல்களுக்கு மிக அரிதாக திரை இசைத்திலகம் கே.வீ . மகாதேவன் இசையமைத்த உணர்ச்சி ததும்பும் பாடல்.
மத்யமாவதியின் ஜீவனை திரைக்குப் பொருத்தமாக உணர்வுக்குத் தகுந்தார்ப் போல் வடித்தெடுத்த இசை அற்ப்புதம்.
மரபு ராக பொக்கிசத்திலிருந்து கதையின் கதாபாத்திரம் துயர நனவோடையில் மிதக்கும் வகையில் அமைந்த பாடலை பல்வேறு உணர்வுகளை நம்மில் எழ வைக்கும் வண்ணம் பாடி மெய்சிலிர்க்க வைக்கும் சீர்காழி கோவிந்தராஜனை பாட வைத்த இசைமேத மகாதேவனை என்ன வார்த்தை சொல்லி பாராட்டுவது!!?
முக பாவத்தில் ரங்கராவ் நிகழ்த்திக்காட்டியுள்ள நுண் அசைவுகள் அவரை கலா மேதையாக நிலைநிறுத்தியுள்ளது.அந்தப் படத்தின் நாயகரே அவர் தான்!!
13 கலை எழில் வீசியே கண் ஜாடை – படம் :சபாஷ் ராமு – பாடியவர்கள் : ஏ .எம் .ராஜா + பி சுசீலா
கண்ணுடன் கலந்திடும் சுப தினமே ” என்ற பாடலின் மறுவடிவமோ என்று எண்ண வைக்கும் அளவுக்கு அந்தப் பாடலின் தாக்கம் அதிகம் உள்ள பாடல்.
14 மக்களைப் பெற்ற மகராசி மகாலக்ஸ்மி போல் விளங்கும் முகராசி – படம் : மக்களைப் பெற்ற மகராசி 1958 – பாடியவர் :ஜிக்கி – இசை : கே. வீ . மகாதேவன்
படத்தின் இறுதி நிமிடங்களில் ஒலிக்கும் பாடல் இது . கதையின் நாயகியான தாய் இறந்ததும் ஒலிக்கும் இந்தப் பாடலில் சோகத்தையும் , கனிவையும் இழைத்து படத்தையும் மங்களமாக நிறைவு செய்வதுடன் மனதை நெகிழவும் வைக்கின்ற மகாதேவனின் அபாரத் திறன் வியக்க வைக்கும்.
15 திருமால் பெருமைக்கு நிகரேது – படம்: திருமால் பெருமை [1965 ] – பாடியவர் :டி எம் சௌந்தரராஜன் – இசை :கே வீ மகாதேவன்
செவ்வியல் இசைப்பாங்கில் , மத்யமாவதி ராகத்தில் ஆரம்பிக்கும் இந்தப் பாடல் பின் ராகமாலிகையாகி முடிகிறது.
16 உலகின் முதலிசை தமிழிசையே – படம் : தவப்புதல்வன் [ 1972 ] – பாடியவர் :டி எம் சௌந்தரராஜன் – இசை :எம் எஸ் விஸ்வநாதன்
யுகல்பந்தி என்ற இரு வேறுபட்ட இசைகள் சங்கமிக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்தப் பாடலில் வடக்கும் , தெற்கும் மோதிக் கொள்ளும் போட்டி பாடலாகும்.பாடலின் பல்லவி மத்யமாவதி ராகத்திலும் , தொடரும் ஹிந்தி பாடல் வரிகள் பகாடி ராகத்திலும் அமைக்கப்பட்ட ஹிந்திப் பாடல் வரிகளை எழுதியவர் பி. பி.ஸ்ரீநிவாஸ்.
17 ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா – படம் : பொன்னூஞ்சல் [ 1972 ] – பாடியவர் :டி எம் சௌந்தரராஜன் + பி சுசீலா – இசை :எம் எஸ் விஸ்வநாதன்
காதலர்களின் மன மகிழ்ச்சி ஆரவாரத்தை ஹம்மிங்கில் அமைத்து மத்யமாவதியை புது தினுசாகக் காட்டிய மெல்லிசைமன்னரின் முத்திரைப் பாடல்.செனாய் வாத்தியத்தை கம்பீரத்துடனும், மகிழ்ச்சியுடனும் பயன்படுத்தி உணர்வுகளை கிளற வைக்கின்ற பாடல்.ராகத்தின் உள்ளோசைகளில் லயித்து சிறகடிக்க வைக்கும் பாடலில் மத்யமாவதி ராகம் ஒளிந்து கொண்டு ஜாலம் காட்டுகிறது.
18 மதனமாளிகையில் மந்திரமாலைகளாம் – படம் : ராஜபார்ட் ரங்கதுரை [ 1974 ] – பாடியவர் :டி எம் சௌந்தரராஜன் + பி சுசீலா – இசை :எம் எஸ் விஸ்வநா
கூத்து , நாடக நடிகரின் வாழ்வை சித்தரிக்கும் படம் ராஜபார்ட் ரங்கதுரை.
ரங்கதுரை [சிவாஜி ] கம்பீரமாகப் பாடும் பாடலாக அமைக்கப்பட்ட பல்லவியைக் கொண்ட பாடல்.
ஓங்கிக் குரல் எடுத்துப் பாடும் கிட்டப்பாவின் சாயலில் அமைந்த பல்லவியை டி.எம்.சௌந்தரராஜன் மிக அழகாக பாடியிருப்பார்.மத்யமாவதியில் அமைந்த இந்தப் பல்லவி மெய்சிலிர்க்க வைக்கும் இசையமைப்பு என்றால் வெறும் புகழ்ச்சியல்ல.
பல்லவியிலேயே ராகத்தின் மாண்பை நாடகமரபு சார்ந்து இசையமைத்து பெருமைப்படுத்தி விடுகிறார் மெல்லிசைமன்னர் விஸ்வநாதன்.பல்லவி ஆரம்பித்து முடியும் இடத்தில் நாடகம் பார்த்துக் கொண்டிருக்கும் நாயகியின் எண்ண ஓட்டங்கள் மத்யமாவதி ராகத்தின் மெல்லிசையாகி பரவச நிலைக்குக் கொண்டு செல்கிறது.
பாடி நடித்த பரம்பரையில் மெல்லிசைமன்னர் வந்ததால் அவருக்கு இது வாலாயமாகி விட்டது எனலாம். தமிழ் சினிமாவில் மத்யமாவதி ராகத்திற்கு கிடைத்த உன்னத இது.
19 வேலாலே விழிகள் – படம் : என்னைப்போல் ஒருவன் [ 1975 ] – பாடியவர் :டி எம் சௌந்தரராஜன் + பி சுசீலா – இசை :எம் எஸ் விஸ்வநாதன்
மத்யமாவதியின் இனியசஞ்சாரங்களில் மெல்லிசைமன்னரின் தன்னெளுச்சியும் , உத்வேகப் பெருக்கும் கொண்டு தங்குதடையின்றி பாயும் மெல்லிசை நதி.
20 கங்கை ஜமுனை இங்கு தான் சங்கமம் – படம் : இமையம் [ 1976 ] – பாடியவர் :கே ஜே ஜேசுதாஸ் + வாணி ஜெயராம் – இசை :எம் எஸ் விஸ்வநாதன
ராகத்தில் தடம் புரண்டு விடாத , மெல்லிசைப் பிரவாகத்தில் கரைபுரண்டோடும் இனிய பாடல். ஜேசுதாஸ் – வாணி ஜெயராம் இணை தந்த பல நல்ல பாடல்களில் ஒன்று.பாடலின் முடிவில் ஒன்றுக்குள் ஒன்றாகி குழைந்து செல்லும் உத்தி பயன்படுத்தப்பட்டு சுகத்தில் மிதத்தும் பாடல்.
21 சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து – படம் : பிராப்தம் [ 1972] – பாடியவர் :டி எம் சௌந்தரராஜன் + பி சுசீலா – இசை :எம் எஸ் விஸ்வநாதன்
திரையின் கதைக்கும் , உணர்வுக்கும் தகுந்தாற்ப் போல பாடல்களை தன்னெழுச்சியாக , எளிமையாகவும் , ராகங்களில் இருக்கும் இனிமையை ஒர்ந்தறிந்து தருவதில் மேதமையுமிக்க , மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் தனது இசை வளத்தைக் காட்டிய பாடல்களில் ஒன்று.பாடலின் வரிகளும் இசையும் ஒன்று கலந்து நம் நெஞ்சங்களை அள்ளிச் செல்லும் பாடல்.
தனது இசையால் ஒரு இசைமண்டலத்தை உருவாக்கி ராஜ்ஜியம் அமைத்த மெல்லிசைமன்னரின் நம் நெஞ்சங்களில் எதிரொலிக்கும் பாடல்.
22 ஹரிவராசனம் விஸ்வ மோகனம் – படம் : சுவாமி ஐயப்பன் 1976 – பாடியவர் :கே .ஜே .ஜேசுதாஸ் – இசை : ஜி தேவராஜன்
சினிமாவில் இடம் பெற்ற பாடலாக அந்த நிலையைக் கடந்து செவ்வியல் இசையின் தரத்தில் பேசப்படும் பாடல்.பாடலின் இசையமைப்பு விதமும் பாடிய விதமும் மத்யமாவதியின் இனிமையையும் மகோன்னதத்தையும் காண்பிக்கும்
பாடல்.23 மரகதவல்லிக்கு மணக்கோலம் – படம் : அ
ன்புள்ள அப்பா 1987 – பாடியவர் :கே .ஜே .ஜேசுதாஸ் – இசை : ஷங்கர் கணேஷ்
அடக்கி வைத்த உணர்ச்சிகள் உயிரியக்கம்மிக்க இசையில் பொங்கிப் பிரவகிக்கும் அற்புதமான பாடல்.ஷங்கர் கணேஷ் இரட்டையர்கள் இசையமைத்த அற்புதமான பாடல்களில் ஒன்று.” மகள் என்ற உறவு கொடுக்கும் வரை ” என்ற வரிகளில் தந்தையின் நெகிழ்வு நம்மையும் கலங்க வைத்துவிடுகிறது.வாத்திய அமைப்பில் நேர்த்தியும் இனிமையும் , ஜேசுதாசின் கம்பீரமும் ,மென்மையுமிக்க குரலில் மின்னும் பாடல்.
24 ஆறடி ராட்சசனோ என்னை – படம் :ஐந்தாம் படை 2009 – பாடியவர்கள் : குமார் சானு + ஸ்ரேயா கோசல் – இசை : டி.இமான்
வங்கப் பாடகரும் ,ஹிந்தியில்பல நல்ல பாடல்களை தனது மதுரக்குரலால் பாடி புகழ் பெற்றவருமான குமார் சானு பாடிய இனிமையான பாடல் இது. அவரது மயக்கும் குரலை ஹிந்திப்பாடலில் கேட்டு ராசாத்த நாம் தமிழில் அவரது குரல் ஏன் ஒலிப்பதில்லை என்ற எண்ணம் என்னுள் வந்ததுதுண்டு.அவர் பாடிய முதல் தமிழ் பாடல் இதுவென நினைக்கிறேன்.
இளையராஜாவுக்கு பின் வந்த இசையமைப்பாளர்களில் இனிமையான பாடல்களைத் தர முயலும் இசையமைப்பாளர்களில் டி.இமானும் ஒருவர்.மத்யமாவதி ராகத்தில் அமைந்த இந்தப்பாடலை மிக இனிமையாக இசையமைத்திருக்கின்றார்.
25 தைய்யா தைய்யா தக தைய்யா – படம் :உயிரே 2009 – பாடியவர்கள் : சுக்வீந்தர் சிங் + மால்குடி சுபா + குழுவினர் – இசை : ஏ .ஆர் .ரகுமான்
இளைஞர்களை துள்ள வைத்த பாடல்.இராகத்தில் விளைகின்ற முழு இன்பமும் இந்தப்பாடலில் இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு வசியம் டியூனில் இருக்கிறது.மத்யமாவதியில் அமைத்த ரகுமானின் கற்பனை தாளத்திற்கு மட்டும் முக்கியம் கொடுத்து விடுகிறது.
26 தோம் கஎஉவில் இருந்தோம் – படம் :ஸ்டார் 2001 – பாடியவர்கள் : ஷங்கர் மகாதேவன் + குழுவினர் – இசை : ஏ .ஆர் .ரகுமான்
பாடலின் ஆவேசத்திலும் மத்யமாவதி ஆங்காங்கே இனியையும் காட்டி செல்லும் பாடல்.
ராகங்களில் பலவிதமான ரசங்களைக் கறந்தெடுக்கும் ஆற்றல் , சிருஷ்டி ஆற்றல் போன்றவை இசையமைப்பு ரகசியங்களின் ஆதாரமாகக் கருதப்படுவதுடன் கதையின் , கதாபாத்திரங்களின் இயல்புகளுக்கிசைந்த பாடல்களில் கற்பனை ஊற்று வளத்தையும் உள்ளடக்கத்தில் வைத்திருக்கும்.
இசையமைப்பில் தங்கள் வீரியத்தைக் காண்பித்து புதுத்தடங்கள் வகுக்க முனைந்த இசைமேதைகள் பலர் தமிழ் சினிமாவில் தோன்றியிருக்கின்றார்கள்.கற்பனைகளின் லாவண்யங்கள் என்று கருதப்பட்ட வகையில் ராகங்களின் இசைச் சுவையை பன்முகப்பட்ட உணர்வுகளில் வடித்தெடுத்து திரையிசை என்ற எல்லைக்குள்ளேயே இசைவீச்சுக்களைக் காட்டிய சாதனையாளர்கள் தான் எத்தனை . எத்தனை !
ராகங்களின் நுண்ரசனையில் தாம் ஊறித்திளைத்து , தமது படைப்பாற்றில் அந்தரங்கத்தில் திரண்ட இசை ஊறல்களை , ஜீவதுளிகளை இசைவார்ப்புகளாக விதவிதமான ரசங்களில் வடித்தெடுத்த பின்னரும் ,அவற்றை மீறிய புதிய கற்பனைகள் தோன்றிவிட முடியுமா என்ற எண்ணம் இசை ரசிகர்கள் மத்தியில் உண்டானது வியப்பில்லை.
தனது முன்னவர்களின் இசையில் லயித்து ,அவர்களின் நுண்ணிசைச் சூட்சுமங்களை நயந்து நயந்து ,பின் அவர்களின் கற்பனைக்கப்பாலும் ராகங்களை நுணுகி , நுணுகி ஒலிப்பின்னல்களை இழைத்து, இழைத்து என்னென்ன விதமாக ராகங்களை கையாள முடியுமோ அத்தனை விதங்களில் எல்லாம் ரசவாதங்கள் புரிந்து தனது இசையாட்சியால் சாதனைச் சிகரங்களைத் தொட்டவர் இசைஞானி இளையராஜா !
ராகங்களில் செம்மையும் , துலக்கமும் , நவீனமும் காட்டிய இசைஞானி இளையராஜா மத்யமாவதி ராகத்தில் அமைத்த பாடல்கள் :
01 தாலாட்டு பிள்ளை ஒன்று தாலாட்டு – படம் :அச்சாணி 1976 – பாடியவர்கள்: எஸ்.பி .பாலசுரமணியம் + பி.சுசீலா – இசை :இளையராஜா
பாடலின் முன்னிசையிலேயே மத்யமாவதியின் மென்மையை ஜலதரங்கம் , புல்லாங்குழல் போன்ற இயற்கை வாத்தியங்களால் கோடிட்டுக் காட்டி நம்மைச் சாந்தப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட பாடல். தாலாட்டு மரபுக்கேற்ப பெற்றோரின் மனநிலையும் ,எதிர்கால ஆசையையும் காட்டி செல்லும் இந்தப் பாடலில் குழந்தை அன்பில் நம்மையும் கட்டி மகிழ்ச்சி பயணம் செய்ய வைக்கிறார் இசைஞானி.
02 மஞ்சக் குழிச்சு – படம் :16 வயதினிலே 1976 – பாடியவர்கள்: எஸ்.ஜானகி – இசை :இளையராஜா
திரையிசையில் நாட்டுப்புற இசையின் கூறுகள் அவ்வப்போது பயன்படுத்தப்பட்டு வந்தாலும் நிஜமான கிராமிய இசையின் இனிய கோலங்களை நமது வாசற்படிக்கு கொண்டுவந்து சேர்த்தவர் இசைஞானி.
மத்யமாவதியில் பதுங்கியிருக்கும் குதூகலத்தை வெளிக்கொணரும் பாங்கும் , பாடலில் பயன்பட்டுள்ள தாளங்களும் , வாத்தியங்களில் குறிப்பாக வட இந்திய செவ்வியல் இசைக்கருவியான செனாய் வாத்தியத்தால் கிராமிய இசையில் மண்டிக் கிடக்கும் இனிமைகளை கிளர்த்தி உள்ளுணர்வின் இயங்கு சக்தியாக மாற்றிக்காடிய மேதமையும் வெளிப்படும் பாடல்.
எனது பால்ய வயதில் எங்கள் ஊர்க் கன்னிகள் தேன்சிட்டுப் பறவைகள் போல் மஞ்சள் நீரூற்றி மிகிழ்ந்ததையும் பாடல்க்காட்சி நினைவுறுத்தும்.
03 சோலைக் குயிலே காலைக்கதிரே – படம் :பொன்னு ஊருக்குப் புதுசு 1978 – பாடியவர்கள்: எஸ்.பி .சைலஜா – இசை :இளையராஜா
வண்ணப்படங்களுக்கே வண்ணம் பூசும் அபாரக்கற்பனை நிறைந்த பாடல்.காட்சியைப் பார்க்க வேண்டிய தேவையை இல்லாமல் செய்து தனது இசையாலே மனத்திரையில் எழில் ஓவியங்களை தீடிக்காட்டி தன்னை இசை வல்லாளன் என இளையராஜா நிரூபித்த பாடல்களில் ஒன்று.
வறண்டு போன தமிழ் சினிமா இசைக்கு புதிய இசைப்பின்னல்களால் ஒளிக்கிரணங்களை அள்ளி வீசி , இசை ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த பாடல்.
காலையின் மென்மையில் ஆலாபனை நிகழ்த்தும் பனியும் , வயல்வெளிகளை சுற்றிப்பறந்து அழகுக்கோலம் காட்டும் பறவைகளும் , செழித்துக் குலுங்கும் வாழை இலைகளில் வழுக்கி ஓடி ஜாலம் செய்யும் நீர்த்துளிகளும் , அழகிய வண்ண மலர்களின் சிரித்த அழகும் , பச்சை நிறத்து லாவண்யங்களையும் ,புலர்ந்தும் புலராத கிராமிய காலை நேரத்து இன்பங்களை எல்லாம் நம் மனத்திரையில் அள்ளி இறைக்கும் பாடல்.
ஒரு கலைஞன் இத்தகைய இன்பங்களை எல்லாம் தனது படைப்பில் கொண்டு விசித்திர கற்பனைகளை காட்டி நம்மை அதில் திளைக்க வைக்க எத்தகைய உயர்ந்த மன எழுச்சி வேண்டும் அல்லது அந்த ராகங்களில் என்னவிதமான அக எழுச்சி பெற்றிருக்க வேண்டும் என்று வியக்க வைக்கும் மகா கலைஞன் இளையராஜா.
04 என் கல்யாண வைபோகம் உன்னோடு தான் – படம் :அழகே உன்னை ஆராதிக்கிறே 1978 – பாடியவர்கள்: வாணி ஜெயராம் – இசை :இளையராஜா
எத்தனை ,எத்தனை பூரிப்பு ,ஆர்ப்பரிப்பு என்று வியக்கும் இந்தப்பாடலில் வாஞ்சையோடிழைந்து மனதை வருடும் சோகத்தையும் மத்யமாவதியின் நுண்ணுணர்வை கிளர்த்தும் ஆச்சர்யத்தையும் இழைத்து உணர்வை மேலிட வைக்கும் பாடல்.
மத்யமாவதியின் இன்ப அதிர்வை பாடலின் பல்லவியிலேயே [0:19 – 0:23 செக்கனில் ] புல்லாங்குழலும் ,கிட்டாரும் இணைந்து ஒன்றை ஒன்று சீண்டும் இசைத்துணுக்கிலேயே காட்டி போதை ஊட்டி விடுகிறார் இசைஞானியார்.பின் தொடரும் பாடலில் நெஞ்சில் உணர்வெழுச்சி தந்து விரிந்தாடி வரும் இன்பத்தில் தித்திக்க வைக்கின்றார்.
05 செவ்வந்தி பூக்களில் செய்த வீடு – படம் :மெல்ல பேசுங்கள் 1982 – பாடியவர்கள்: தீபன் சக்கரவர்த்தி + உமா ரமணன் – இசை :இளையராஜா
” கூவின பூங்குயில் கூவின கோழி “திரு ப்பள்ளி எழுச்சி ஆரம்ப வரிகளுடன் ஆரம்பிக்கும் பாடலில் எத்தனை இன்பம்!!
மிலையும் எழிற் பெருங்கடலின் அமுதப்ர வாகம்!
மேலெல்லாம் விழி அள்ளும் ஒளியின் ப்ரவாகம்!
நலம் செய்தான்; ஒளிமுகத்தைக் காட்டிவிட்டான், காட்டி நடத்துகின்றான் தூக்கமதில் ஆழ்ந்திருந்த உலகை!
என்று பாரதிதாசன் பாடியது போல நமது இசைமுகத்தை நமது ராகங்களிலேயே மூழ்கித் திளைத்து , தனது வித்தை இன்பத்தால் தூக்கத்தில் ஆழ்ந்த இசையுலகை துயில் எழுப்பிய பாடல்.
06 நிலாக்குயுது நேரம் நல்ல நேரம் – படம்: சகல கலா வல்லவன் 1982 – பாடியவர்கள் :மலேசியா வாசுதேவன் + எஸ்.ஜானகி – இசை: இளையராஜா
ராகங்களில் புதைந்த இன்பங்களை, ஒரு புதுதினுசாக மனித உயிரின் ஊற்றாக ஆழ்மனத்தில் திகழும் காதல் அல்லது காம உணர்வுக்கு [ சிருங்கார ரசம் ] போடப்பட்ட இனிய பாடல்.மனித இனத்தின் உயிர்வாழ்வை ஆட்டிவைக்கும் ஆதார சுருதியாக விளங்கும் நுண்ணுணர்வுக்கு மத்யமாவதி என்கிற உயிருக்கு உவகையும் ,களிப்பும் ,போதையும் குழைந்து தரும் அற்புதமான ராகத்தில் அமைந்த இனிய மெல்லிசைப்பாடல்.
07 கவிதைகுயிலே – படம்: தென்றலே என்னைத் தோடு 1986 – பாடியவர்கள் :எஸ் .பி .பாலசுப்ரமணியம் – இசை: இளையராஜா
ஒரு ராகத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு எத்தனை கற்பனைகள் காட்ட முடியும் என வியப்பு தரும் பாங்கில் தாளத்தில் துள்ள வைக்கும் பாடல் 08 காத்து காத்து ஊத காத்தும் வீசுதே – படம்: என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் 1986 – பாடியவர்கள் :மனோ + லலிதா ஷாகிரி – இசை: இளையராஜா
08 காத்து காத்து ஊத காத்தும் வீசுதே – படம்: என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் 1986 – பாடியவர்கள் :மனோ + லலிதா ஷாகிரி – இசை: இளையராஜா
” நிலாக்குயுது நேரம் நல்ல நேரம் ” பாடலின் சாயல் நிறைந்த இந்த பாடலையும் அதே போன்ற காட்சியமைப்புக்கு இயல்பான பாடலாக அமைத்த இசைஞானியின் அழகிய கற்பனை வியக்க வைக்கும்.
ஒலியின் இன்பத்தில் விளையும் நூதனங்களை எல்லாம் விரித்து விரித்து செல்லும் இசை மயாஜாலக்காரன் என்பதை உணர்த்தும் பாடல்.
09 தென் பொதிகை தென்றல் காற்றே – படம்: காவல் கீதம் 1992 – பாடியவர் :சித்ரா – இசை: இளையராஜா
வாழ்வின் இனிய தருணங்களையும் , வாழ்வின் மீதான பிடிப்புக்களையும் தனது இசைச் சித்தரிப்புக்களில் ஈர்ப்புமிக்க ராகங்களில் அமைத்து பேரெழுச்சி தரும் இது போன்ற இசையற்புதங்களை பேரியக்கமாக நிகழ்த்திக்க்காட்டியவர் இசைஞானி.அவரது வற்றாத இசைப்பெருங்காதல் எவ்விதமானது என்ற எண்ணம் இந்தப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் என்னுள் எழும் . கனிவும் , பாசமும் வெளிப்படும் இந்தத் தாலாட்டுப் பாடலை நெகிழ்ச்சியுடன் பாடி சிறப்பித்திருக்கிறார் சித்ரா.
10 தாழம் பூவே வாசம் வீசு – படம்: கைகொடுக்கும் கை 1986 – பாடியவர்கள் :எஸ்.பி.பாலசுரமணியம் + எஸ்.ஜானகி – இசை: இளையராஜா
சில பாடல்களைக் கேட்கும் போது மனது மலரும் பூ போல இதழ் அவிழ்ந்து நிற்கும் அழகிய நிலைக்கு கொண்டு சென்று விடும்! செவ்வியல் இசை ராகங்களின் அழகின் உன்னதத்தை மெல்லிசைவார்ப்புக்களில் அதன் அதீத ருசிகளை உணர்வுகளின் உன்னத படிமங்களாக விரித்து ,ராகங்களை இன்னதென்று அறியாத ரசிகர்களின் மனதில் ராகங்களின் சுகந்தங்களைக் கொண்டு வந்து சேர்த்த திரை இசையமைப்பாளர்களில் உச்சம் தொட்ட இசைமேதை இசைஞானி இளையராஜா.
பாசத்தில் திளைக்கும் காதலர்களின் உள்ளத்திளைப்பு இந்தப்பாடல்.
11 துள்ளித் துள்ளி நீ பாடம்மா – படம்: சிப்பிக்குள் முத்து 1986 – பாடியவர்கள் :எஸ்.பி.பாலசுரமணியம் + எஸ்.ஜானகி – இசை: இளையராஜா
இந்தப் பாடலை முதன் முதலில் கேட்ட போது ஏதோ தெலுங்கு வாசம் வீசுவதாக உணர்த்திய பாடல்.சீதையம்மா ,,சீதையம்மா என்ற சொல்லாடல் தான் அதன் காரணமாய் அமைந்தது.என்னுடைய கணிப்பு தவறவில்லை.தெலுங்குப்படத்தின் மறுபதிப்பு இந்தப் படம்.
பார்த்தீரா இவர் சரசம் , கண்ணுடன் கலந்திடும் சுப தினமே , போன்ற மத்யமாவதி ராகப்பாடல்களை கண்டசாலா பாடி கேட்கும் போதெல்லாம் தெலுங்கு வாசம் வீசும்.அந்தப்பாடல்கள் எல்லாம் தெலுகு இசையமைப்பாளர்கள் இசையமைத்தார்கள் என்பது கவனத்தில் கொள்ள வேண்டும்.
இப்போது மேலே குறிப்பிட்ட மத்யமாவதி ராகத்தில் அமைந்த பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் தெலுங்கு இசையமைப்பாளர்களின் ரசனையையும் , புலமை விளையாட்டையும் கேட்டு வியக்கிறேன்.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இசைஞானி தெலுங்கு வாடை வீச இசையமைத்தது தான்.தண்ணீரை பழமாக மாற்றும் இயற்கையின் மந்திரஜாலம் போல படைப்பாற்றலில் ஜாலங்கள் செய்யும் இசைஞானியின் நூதன விளையாட்டு.
12 பொன்வானப் பூங்காவில் தேரோடுது – படம்: வாலிபமே வா வா 1982 – பாடியவர்கள் :கே + ஜே . ஜேசுதாஸ் எஸ்.பி.சைலஜா – இசை: இளையராஜா
ராகங்களை ரசிக்க மெல்லிசையின் இன்பத்தில் திளைப்பது பயன் தரும் என்பதை உணர்த்தும் பாடல் இது.மேலைத்தேய இசையொழுங்கமைப்பை [ Arrangement ] வித்தியாசமாகக் காட்ட முனைந்த பாடல்.Counterpoint என்ற மேலை இசையின் அடிப்படையில் வாத்தியங்களின் வித விதமான அணிச் சேர்க்கைகளால் அழகு பெரும் பாடல்.
13 தங்க நிலவுக்குள் நிலவொன்று – படம்: ரிக்சா மாமா 1991 – பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் – இசை: இளையராஜா
மெல்லிசையின் உச்சம் தொடும் மத்யமாவதி ராகத்தின் இனிய பாடல் இது.மெல்லிசையில், வாத்திய அமைப்பில் இது போல ஒரு பாடல் தமிழ் திரை இசையில் , இல்லை இந்திய திரையிசையில் வந்ததில்லை என்று அடித்துக் கூறக் கூடிய பாடல்.
இந்தப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் நாடி நரம்புகளில் இரத்த ஓட்டம் விரைந்தோடி உடலெல்லாம் மயிர்க்கூச்செறிந்து விடும்.
வாத்திய அமைப்பைக்கொண்டு இந்த விதமான இன்ப உணர்ச்சி பேரலையை இசைஞானிக்கு முன்போ இல்லை பின்போ யாரும் செய்யவில்லை எனலாம்.இது போன்ற வாத்திய அமைப்பின் சௌந்தர்யங்களை ஆழத்திலும் அகலத்திலும் தந்த இசைஞானி இளையராஜா பற்றி ஹிந்தி திரை இசையின் பீஷ்மர் என வர்ணிக்கப்படும் இசைமேதை நௌசாத் அலி பின்வருமாறு கூறினார்.
” THIS MAN [ ILAIYARAJA ] HAS ACHIEVED IS 100 TIMES MORE THAN WHAT ANY OF US HAVE ACHIEVED.” – nausad ali
14 வெள்ளி நிலவே நீலக் கடலைப் பாடிடச் சொன்னது யார் படம் : சின்ன வாத்தியார் 1995 – பாடியவர்: கே.ஜே .ஜேசுதாஸ் – இசை : இளையராஜா
மத்யமாவதியின் சுகமான தீண்டலில் நம்மை மிதக்க வைத்து , வார்த்தையால் வர்ணிக்க முடியாத உணர்வுகளைக் கிளர்த்தி ஊனை உருக வைக்கின்ற பாடல்.நெஞ்சை விம்ம வைக்கும் பாடல்.
பாடலின் பல்லவி முடிந்து 01:10 நிமிடத்திலிருந்து ஆரம்பிக்கும் ஆர்மோனியத்தின் இசையும் ,அதப் பின் தொடரும் வயலின் அணி வகுப்பும் [ 01:40 வரை ] துயரத்தின் எல்லைக்கும் ,கருணையை நீக்கமறவும் தந்து ராக பேராற்றில் நம்மை கரைய வைக்கிறது.
பாடலின் சரணத்திற்கு முன் வரும் வேறு விதமானபின்னணி இசையால் எவ்வளவு உணர்வைக் காட்ட முடியுமோ அவ்வளவு சிரத்தையுடன் காட்டி மத்யமாவதியின் ஆற்றலையும் தனது ராகத் திளைப்பையும் நமக்குக் கற்றுத் தருகிறார் இசைஞானி.
இசை என்பது வெறும் ஒலிகள் மட்டுமில்லை , உணர்வுகளின் ஓலம் என்று காட்டியவர் இசைஞானி இளையராஜா.
பாடலை பாடியவரும் நமது ஆன்மாவைத் தழிவிச்செல்லும் வகையில் பாடியிருக்கிறார்.
15 நீதானே எந்தன் பொன் வசந்தம் – படம்: நினைவெல்லாம் நித்யா 1982 – பாடியவர் : எஸ்.பாலசுப்ரமணியம் – இசை: இளையராஜா
“இசையில் சித்து விளையாட்டு ” இது தான் என்பதை இந்தப் பாடலின் வாத்திய இசையில் கேட்டு நாம் திளைக்க இசைஞானி தந்த தேனிசை விருந்து.
16 வனமெல்லாம் செண்பகப்பூ – படம்: நாடோடிப் பாட்டுக்காரன் 1994 – பாடியவர் : எஸ்.பி .பாலசுப்ரமணியம் – இசை: இளையராஜா
பாடலின் பல்லவி முடிவில் [ 01:06 நிமிசத்திலிருந்து 01:36 வரை ] செனாய் வாத்தியத்தின் எழுச்சி இசையும் தொடரும் புல்லாங் குழல் இசையும் நெஞ்சை அள்ளும் நாட்டுப்புற இசைத் தாளமும் இசைஞானியின் இசைத் திளைப்பு !!
இவை மட்டுமா இசைஞானியின் கற்பனை இன்னும் விரிந்து செல்லும் பேராச்சரியம் மேலும் மேலும் வியக்க வைக்கும்!!
17 பொன் மேனி உருகுதே – படம்: மூன்றாம் பிறை 1991 – பாடியவர் : எஸ்.ஜானகி – இசை: இளையராஜா
18 கன்னி இளம் பூவுடல் – படம்: ஆயிரம் நிலவே வா 1982 – பாடியவர் : எஸ் .ஜானகி – இசை: இளையராஜா
19 அழகான மஞ்சப்புறா – படம்: எல்லாமே என் ராசா தான் 1995 – பாடியவர் : மனோ +எஸ் .ஜானகி – இசை: இளையராஜா
தமிழ் திரை இசை போல வேற்று மொழிகளிலும் மத்தியமாவதி ராகத்தின் அற்புதத்தை சினிமா இசைமேதைகள் அள்ளித் தந்து நம்மை மகிழ்வித்திருக்கின்றனர்.
ஹிந்தியில் வெளி வந்த [ Film Sawan Ko Aane Do – music Rajkamal ] ” Teri Tasveer Ko Seene Se Laga ” என்ற ஜேசுதாஸ் பாடல் இதயங்களைப் பிணிக்கும் வல்லமை கொண்டதாகும்.
1960 களின் மிகப்புகழ் வாய்ந்த Mother India [1960] திரைப்படத்தில் சில பாடல்களை மத்யமாவதி ராகத்திலேயே இசையமைத்து பெருமை சேர்த்திருப்பார் இசைமேதை நௌசாத்.
அந்தப்படத்தில் இடம் பெற்ற ” Dukh Bhare Din Beete Re ” என்ற புகழ் பெற்ற பாடலின் எதிரொலியை மெல்லிசைமன்னர்களின் பாசமலர் படப் பாடலான ” எங்களுக்கும் காலம் வரும் ..” என்ற பாடலில் கேட்கலாம்.
தமிழ் பக்திப்பாடல்களில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய ” மங்களம் அருள்வாள் மதுரைக்கு அரசி ” என்ற பாடல் மத்யமாவதியின் சிறப்புக்கு எடுத்துக் காட்டாகும், மத்யமாவதிக்கு மிகநெருக்கமான ராகம் பிருந்தாவனசாரங்கா ராகம்.
தொடரும் ….
முன்னைய பதிவுகள்:
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 22 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 21 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 20 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 19 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 18 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் [ 17 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் [ 16 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் [ 15 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் [ 14 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 13 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 13 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 12 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 11 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 10 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 9 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 8 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 7 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 6 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 5 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 4 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 3 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 2 ] – T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 1 ] – T.சௌந்தர்
திரு .சவுந்தர்
தாங்கள் எழுதிய பதிவுகளில் இதுவும் சிறப்பான ஒன்று.தங்கள் தரும் ச்தகவல்கள் தான் இன்னும் சிறப்பாக இருக்கின்றன.
தங்கள் பாணியை சில “வார்த்தை விரும்பிகள் ” பின்பற்றுவதும் மகிழ்ச்சி தருகிறது, சில ஞானசூனியங்கள் ராகம் பற்றியும் பேச முனைகின்றன.
ராஜாவின் ராக விளையாட்டுக்கள் அபாரம்.தொடர்ந்து ஊக்கத்துடன் எழுதுங்கள்.பொங்கல் வாழ்த்துக்கள்.
சினிமாப் பாடல்கள் பற்றி இவ்வளவு விஸ்தாரமான கட்டுரைகளை இணையத்தில் நான் எங்கும் காணவில்லை.தங்கள் உழைப்பைப் பாராட்டுகிறேன்.
குமரன்
ராகங்களிலும் இசையிலும் உங்களுக்கு இருக்கும் ஆழ்ந்த அறிவு ஆச்சரிய தையும் திகைப்பையும் ஒரு சேர தருகிறது. இதை எழுத எடுத்து கொள்ளும் நேரம் மிக அதிகம் என்றாலும், அதை அப்டியே பொது மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற உங்கள் ஆர்வத்துக்கு மிகவும் நன்றி.
.
ஐயா தங்களின் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
5 – ஆபேரி 6 மோகனம் 7 கல்யாணி 8 கீர்வாணி 13 தேஷ் 17 சிந்துபைரவி 19 பஹாடி ராக கட்டுரைகளை காணமுடியவில்லை. தயைகூர்ந்து இதற்கு ஆவணசெய்ய கேட்டுக்கொள்கிறேன்.
பயனுள்ள பதிவுகள். மேலும் முல்லை பாணி, மருதப்பாணி, நெய்தல் பாணி குறித்த விளக்கம் தரவும். நன்றி.
முல்லைப்பாணி என்றால் மோகனம் , மருதபாணி என்றால் சுத்த தன்யாசி , நெய்தல் பாணி ஹிந்தோளம்