தமிழ் மக்களுக்கு ஆதரவாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழ்நாடு தழுவிய மனிதச் சங்கிலி அறப்போராட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மொத்தம் 2 ஆயிரம் கிலோ மீற்றர் நீளத்துக்கு நடைபெற்ற இந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
வடக்கே தாம்பரத்தில் தொடங்கி செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திருச்சி, திண்டுக்கல், வாடிப்பட்டி, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக தெற்கே கன்னியாகுமரி வரை கிட்டத்தட்ட 717 கிலோ மீற்றர் தொலைவுக்கு முதல் அணிவகுப்பு நடைபெற்றது.
மேற்கே கோவையில் தொடங்கி திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம், நாகப்பட்டினம் வரை 352 கிலோ மீற்றர் தொலைவுக்கு 2 ஆவது மனிதச் சங்கிலி அணிவகுப்பு நடைபெற்றது.
தாம்பரத்தில் தொடங்கிய மனிதச் சங்கிலி கன்னியாகுமரி வரை இடைவிடாமல் நீண்டிருந்தது. ஒரு சில இடங்களில் இடைவெளி இருப்பதை பார்த்ததும் அந்தந்த பகுதி மக்களும் ஓர் ஊரில் இருந்து மற்றோர் ஊருக்குச் செல்வோரும் தாங்களாக முன்வந்து மனிதச் சங்கிலியில் நின்றிருந்தவர்களுடன் கரம் கோர்த்தனர். இதனால் 3 பாதைகளிலும் அமைக்கப்பட்ட மனிதச் சங்கிலி இடைவிடாமல் நீடித்தது.
மொத்தம் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த மனிதச் சங்கிலியில் பங்கேற்றதாக மதிப்பிடப்பட்டிருக்கின்றது.அனைத்து ஊர்களிலும் பாடசாலை, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
பல இடங்களில் 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் தங்களின் பெற்றோருடன் கைகோர்த்து நின்றனர். மனிதச் சங்கிலி அறிவிக்கப்படாத தேனி, திண்டுக்கல் உட்பட பல மாவட்டங்களிலும் பொதுமக்கள் தனித்தனியாக மனிதச் சங்கிலி நடத்தினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் உரையாற்றும் போது,
“இலங்கையைச் சேர்ந்த 10 லட்சம் தமிழர்கள் பல்வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து வருவதற்கு இலங்கை அரசு தான் காரணம். மத்திய அரசு உடனடியாக தலையிட்டுப் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். திமுக அரசு அதன் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள போராடுகிறது. நாங்கள் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற போராடுகிறோம்” என்றார்.