06.08.2008.
வாழ்க்கை செலவுக்கு ஏற்ற சம்பள உயர்வு வழங்குமாறு கோரி தேசிய எதிர்ப்பு தினத்தினை அடுத்த மாதம் நடத்துவதற்கு 30 சுயாதீன தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முடிவு செய்துள்ளன.
வர்த்தக தொழிற்சங்க ஒன்றியம், புகையிரத, கல்வி, சுகாதார, தபால், துறைமுக சேவையிலுள்ள சுயாதீன தொழிற்சங்கங்கள் மற்றும் அரச அச்சக தொழிற்சங்கம் ஆகிய 30 சுயாதீன தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய சந்திப்பின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
சுகாதார தொழிற்சங்கங்களில் ஒன்றியத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தலைமையில் சுமார் 3 மணித்தியாலம் நடைபெற்ற சந்திப்பிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற சம்பள உயர்வினை அரசாங்கம் வழங்க வேண்டுமென பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனை அரசு பொருட்படுத்தாதுள்ளதனால் இதற்கு எதிராக எவ்வாறு போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து ஆராயப்பட்டதென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
அத்துடன் இதற்கும் ஜே.வி.பி. மேற்கொள்ளவுள்ள மூன்று நாள் வேலை நிறுத்தத்திற்கும் சம்பந்தமில்லையென தெரிவித்த அவர் இது குறித்து அவர்களுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.