இலங்கையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2011-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இலங்கையில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும். நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய முழு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 1981-ம் ஆண்டு நடத்தப்பட்டது. அதன் பின்னர் அந்நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுப் போர் மற்றும் குழப்பங்களால் முழு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த முடியவில்லை. 1991-ம் ஆண்டு நடத்தப்படவேண்டிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறவே நடத்தப்படவில்லை. 2001-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பெரும்பாலான இடங்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததால் அப்பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அந்நாட்டில் உள்ள 25 மாவட்டங்களில் 18 மாவட்டங்களில் மட்டுமே 2001-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சென்ற ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த சண்டையில் இலங்கை ராணுவம் வெற்றி பெற்றது. இதையடுத்து இலங்கையின் அனைத்துப் பகுதிகளும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. இதனால் 2011-ம் ஆண்டு நடத்தப்பட உள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நடத்தப்பட உள்ளது. இந்த மாபெரும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியில் சுமார் 80 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய முறைகள் மற்றும் துறை ரீதியாக கையாளப்பட வேண்டிய உத்திகள் ஏற்கெனவே இறுதி செய்யப்பட்டுவிட்டன. மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்படும் பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட உள்ளன. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணிக்கான நிதியை இலங்கை அரசு வழங்கும். அது குறித்து மேற்கொள்ளப்பட உள்ள விழிப்புணர்வு பிரசாரங்களுக்கு, தனியார் நிறுவனங்கள் நிதி உதவி செய்ய உள்ளன. இலங்கையில் 1871-ம் ஆண்டு முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. வழக்கமாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கெடுப்பு நடத்தப்படும். அந்நாட்டில் நிலவி வந்த இனப்பிரச்னை மற்றும் உள்நாட்டு சண்டைளால் 1981-ம் ஆண்டுக்குப் பிறகு முழுமையாக கணக்கெடுப்பு நடத்த முடியவில்லை. 30 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த ஆண்டு முழு கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இலங்கையில் தற்போதைய மொத்த மக்கள் தொகை 2 கோடியே 10 லட்சமாக இருக்கும் என உத்தேசமாகக் கூறப்படுகிறது. தமிழ் மக்களின் பாரம்பரீய பிரதேசங்களில் ஒன்றான வடக்கில் பெருந்தொகையான தமிழ் மக்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிற நிலையில் இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சுதந்திரமாக தமிழ் மக்களின் எண்ணிக்கை சொல்லப்படுமா? அல்லது தமிழ் மக்களை இரண்டாவது சிறுபான்மை இனமாக அறிவிக்கிற திட்டத்தோடு இது மேற்கொள்ளப்படுகிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.