கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி 3-ம் கட்ட உண்ணாவிரதப் போராட்டம் இடிந்தகரையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி செப்டம்பர் 11-ம் தேதி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. 127 பேர் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். பின்னர், மக்களின் அச்சத்தை தீர்க்கும்வரை அணுமின் நிலையப் பணிகளை நிறுத்திவைக்க வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை அடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை திருப்தி அளிக்காததால் போராட்டக் குழுவினர் 2-ம் கட்ட போராட்டத்தை இடிந்தகரையில் அக்டோபர் 9-ம் தேதி தொடங்கினர். இந்தத் தொடர் உண்ணாவிரதத்தில் 106 பேர் ஈடுபட்டனர்.
பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலுக்காக மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் அணு அபாயத்தை விதைக்கும் இந்த நடவடிக்கைக்கு எதிரான போராட்டங்களுக்கு எதிராக இந்திய மத்திய, மானில அரசுகள் குறிப்பான எந்தப் பதிலையும் வழங்கவில்லை.
இந்தப் போராட்டம் தீவிரமடைந்து அணுமின் நிலையத்துக்குச் செல்லும் சாலைகளில் போராட்டக்காரர்கள் தர்னாவில் ஈடுபட்டனர். மேலும், அணுமின் நிலையத்துக்கு வேலைக்குச் சென்ற ஒப்பந்தத் தொழிலாளர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால், அணுமின் நிலையத்தில் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தர்னாவைப் போராட்டக் குழுவினர் கைவிட்டனர். மேலும், உள்ளாட்சித் தேர்தலுக்காக இடிந்தகரையில் நடைபெற்று வந்த தொடர் உண்ணாவிரதத்தை திங்கள்கிழமை மட்டும் நிறுத்திவைத்தனர்.
இந்நிலையில், 3-ம் கட்ட உண்ணாவிரதப் போராட்டம் இடிந்தகரையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இதில் தினம் ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதத்தில் இடிந்தகரை மக்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு ஆதரவாக கூடங்குளம் மக்களும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய்ப்பட்டினத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.