மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள தனேரா பகுதியில் வைத்து மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த மகாராஷ்டிர போலீசின் சி-60 சிறப்புப் படையினர் சுற்றி வளைத்து நடத்திய தாக்குதலில் 26 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக மகாராஷ்டிர போலீசார் அறிவித்தனர். கொல்லப்பட்டவர்களுள் மிக முக்கியமான மாவோயிஸ்ட் தலைவர் மிலிந்த் டெல்டும்டேவும் ஒருவர்.
இவரது தலைக்கு 50 லட்சம் ரூபாயை மகாராஷ்டிர அரசு அறிவித்திருந்தது. 1980-பதுகளில் மகாராஷ்டிர கோல் இந்தியாவின் துணை நிறுவனத்தில் பணி செய்த மிலிந்த் தொழிற்சங்க நடவடிக்கைகளில் திவீரமாக பணி செய்தார். அப்போதே மார்க்சிஸ்ட் லெனின்ஸ்ட் (மக்கள் யுத்தம்) கட்சியில் இணைந்து பணி செய்த மிலிந்த் பின்னாட்சிகளில் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவுகளால் தனித்தும் செயல்படத் துவங்கினார். பின்னர் மாவோயிஸ்டுகள் ஒன்றிணைந்த பின்னர் மக்கள் யுத்தம் கட்சியில் இணைந்தவர்.
உள்ளூர் பழங்குடி மக்களிடம் நன்கு அறிமுகமானவர். சத்தீஸ்கர் பழங்குடிமக்களால் தீபக் என்றும் மகாராஷ்டிராவில் சஹ்யாந்திரி என்றும் அறியப்படும் மிலிந்த் டெல்டும்டே பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஆனந்த் டெல்டும்டேவின் தம்பி ஆவார்.
பட்டியலின மக்களைக் கொண்டு உருவான மஹர் படைகள் பீமாகொரேகானின் வைத்து மராத்திய பேஷ்வா படைகளை வெற்றி கொண்டதன் நினைவை போற்றும் வகையில் 200-வது வெற்றி விழா கொண்டாடப்பட்டது. அதில் வன்முறைக்கு காரணமானவர்கள் என குற்றம் சுமத்தப்பட்டவர்களில் மிலிந்த் டெல்டும்டேவும் ஒருவர். அவரது அண்ணன் ஆனந்த் டெல்டும்டே கைதாகி சிறையில் இருக்கும் நிலையில் மிலிந்த் டெல்டும்டே 26 பேருடன் சேர்த்து கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை மோதல் நடந்ததாக மகாராஷ்டிர போலீசார் கூறும் நிலையில் மகாராஷ்டிரம், சத்தீஸ்கர்.மத்தியபிரதேச மாநிலங்களுக்கு பொறுப்பாளராகவும், மாவோயிஸ்ட் மத்திய கமிட்டி உறுப்பினருமான மிலிந்த் டெல்டும்டே கொல்லப்பட்டுள்ளார். மாவோயிஸ்டுகளுடனான ஆலோசனைக் கூட்டத்திற்காக கூடிய போதே இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மாவோயிஸ்ட் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மகாராஷ்டிர காவல் படையில் சி-60 என்ற படையினருடன் உள்ளூர் பழங்குடிகளும் இணைந்துள்ளார்கள். இந்த பழங்குடிகள் ஆள்காட்டிகளாக செயல்படுகிறார்கள். இவர்களுக்கு உள்ளூர் நிலப்பரப்பு பாதைகள் என அனைத்தும் அத்துப்படி. காவல்படையினருக்கு இது குறித்து போதுமான அறிவு இல்லாத நிலையில் தேடுதல் வேட்டைகளுக்கும் உளவுத் தகவலுக்கும் பழங்குடிகள் பயன்படுத்தப்படுகிறார்கள்.