பல பயனுள்ள தகவல்களை உள்ளடக்கியுள்ள இக் கட்டுரையின் கருத்துகள் தனபாலவின் தனிப்பட்ட கருத்துக்களே. இனியொருவின் கருத்துக்கள் அல்ல…
இலங்கையில் இடதுசாரிகளும் இனப்பிரச்சினையும்.
சிங்கள இடதுசாரிகளின் மேல்மனச் சோஷலிஸமும் அடிமன இனவாதமும்.(1930-2010)
இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இலங்கைத்தீவு இரத்தக் குழம்பில் முழ்கியிருப்பதற்கான காரணங்களை ஆழமாக ஆராய்ந்து அறிய வேண்டியது அவசியம். தெற்கு, தென்கிழக்காசியாவில் மிகவும் பலம் பொருந்திய இடது சாரி அரசியல் தோன்றி உருப்பெற்ற நாடு இலங்கைத்தீவாகும். ஆனால் அந்த இடதுசாரி இயக்கங்கள் முற்றிலும் படு தோல்வி அடைந்துள்ளன. இனப்பிரச்சனையை கையாள்வதில் அவர்கள் கைக்கொண்ட நிலைபாடுகள் வரலாற்று வளர்ச்சிக்கு எதிர்க்கணியமாய் அமைந்து விட்டன. இத்தகைய நிலை எவ்வாறு ஏற்பட்டது என்பதை இங்கு நாம் ஆராய வேண்டியது அவசியமாகும்.
சிங்கள மக்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் இருந்து மிகப்பெயர் பெற்ற இடதுசாரிகள் தோன்றினர். காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த இலங்கைத்தீவை விடுதலை பெற்ற ஒரு நாடாக்குவதிலும் ஜனநாயகம், சோசலிஸம், இன அக்கியம் போன்ற கொள்கைகளை இலட்சியபூர்வமாய் முன்வைத்த தலைவர்களாயும் மேற்படி இடது சாரிகள் முதலிற் காணப்பட்டனர். காலனித்துவ ஆட்சிக்கால இடது சாரிகள் எனவும் காலனித்தவத்தின் பின்னான கால இடதுசாரிகள் எனவும் இருபெரும் பிரிவுகளாகப் பிரிப்பதுடன் தனிச்சிங்கள சட்டத்திற்கு முன் தோன்றிய தலைமுறையினர், தனிச்சிங்கள சட்டத்தின் பின் தோன்றிய இடது சாரித் தலைமுறையினர் என தெளிவாக இனம் பிரிக்க முடியும்.
காலனித்துவ காலத்தில் தோன்றிய தலைவர்கள் மேலைத்தேச கல்விமுறைகளை கொண்டவர்களாயும் உலகளாவிய இடதுசாரி இலட்சியத்தை உடையவர்களாயும் காணப்பட்டதினால் அவர்களிடம் இனக் குரோத சிந்தனை தலை எடுத்திருக்கவில்லை. ஆனால் தனிச்சிங்கள சட்டத்தின் பின் தோன்றிய சிங்கள இடதுசாரித் தலைமுறையினரோ இனக்குரோத உணர்வு கொண்டவர்களாய் காணப்பட்டனர். இது பாரம்பரியமாக காணப்பட்ட சிங்கள நிலப்பிரபுத்துவ சிந்தனையின் தொடர்ச்சியாய் ரோகண விஜயவீர உட்பட்ட அனைத்து சிங்கள இளம் தலைமுறையினரிடமும் கலாச்சார அடிப்படையில் அப்படியே அமைந்திருந்ததைக் காணலாம்.
முழு இலங்கைக்குமான பூரண சுகந்திரம் வேண்டும் என்ற கருத்தை முதல் முறையாக ஸ்தாபன ரீதியில் முன்வைத்து அதற்கான நேரடிப் போராட்டத்தில் ஈடுபட்ட பெருமை யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசைச் சாரும். 1924-ஆம் ஆண்டு தோன்றிய யாழ்ப்பாண மாணவர் காங்கிரஸ் பின்பு 1926-ஆம் ஆண்டு யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் என பெயர் மாற்றம் செய்து கொண்டது. நவீன கல்வியைப் பெற்ற தமிழ் மத்தியதர வர்க்கத்தில் இருந்து இவ்வமைப்பு தோன்றியது. காந்தியம், பாபியன் சோசலிஸம், சிங்கள மக்கள் மத்தியில் தோன்றிய ரொஸ்கி வாத இடதுசாரியுறவு என்பனவற்றை தம்மகத்தே இணைத்துக் கொண்ட ஒர் அமைப்பாய் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் எழுந்தது.
மகாத்மா காந்தியை 1927-ஆம் ஆண்டு யாழப்பாணத்திற்கு வரவழைத்தமையும் காங்கிரஸ் சோசலிஸக் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான திருமதி கமலாதேவி சட்டோபாத்தியாய என்ற பாபியன் சோசலிஸ வாதியுடனான தொடர்பும் சிங்கள மக்கள் மத்தியில் தோன்றியிருந்த சூரிய மல் மற்றும் ரொஸ்கிவாத சிங்களத் தலைவருடனான உறவும் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸினரை மிகவும் முற்போக்கான ஒரு சக்தியாய் சந்தேகத்திற்கு இடமின்றி இனம் காட்டியது. பூரண விடுதலை, சாதி சமூக சீர்திருத்தம், பெண்கள் உரிமை, ஜனநாயகம், பாபியன் சோசலிஸம், இன ஐக்கியம், ரொக்ஸிவாத சிங்கள இடது சாரிகளுடனான நெருக்கமான உறவு என்பன வற்றால் இவர்கள் பெரிதும் அடையாளம் காணப்பட்ட ஒரு முக்கிய முற்போக்கு இயக்கத்தினர் ஆவர்.
இலங்கையின் வரலாற்றில் மாக்ஸிஸ இடதுசாரிகளின் வருகையை பிலிப் குணவர்;த்தன, என்.என். பெரேரா, கொல்வின் ஆர்.டீ சில்வா, எஸ்.ஏ.விக்கிரமசிங்க போன்ற தலைவர்களின் வருகையோடு அடையாளம் காணலாம். குறிப்பாக 1930 களின் முற்பகுயில் தோன்றிய சூரிய மல் இயக்கம் இவர்களின் வருகையை பெரிதும் பறைசாற்றத் தொடங்கிய ஓர் அமைப்பாய் அமைந்தது.
தெற்கு, தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் பெயர்பெற்ற இடதுசாரித் தலைவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் 1930 களின் ஆரம்பத்தில் இருந்து எழுச்சிபெறத் தொடங்கினர். பிலிப் குணவர்த்தன, கலாநிதி என்.எம்.பெரேரா, கலாநிதி. கொல்வின் ஆர்.டீ சில்வா, டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்க, லெஸ்லி குணவர்த்தன, ரொபேட் குணவர்த்தன, எட்மன் சமரக்கொடி, போன்ற சிங்களத் தலைவர்களுடன் கூடவே வி.காராளசிங்கம், ஏ.வைத்திலிங்கம் போன்ற தமிழ் தரப்பில் எழுந்த இடதுசாரிகளும் குறிபிட்டுக் கூறக்கூடிய இடதுசாரித் தலைவர்களாய்க் காணப்பட்டனர். இவ்வாறான தலைவர்களுள் பெரும்பாலானோர் லண்டனில் உயர்கல்வி பெற்று நாடுதிரும்பியோராவர். குறிப்பாக ரொஸ்கி வாதியான பேராசிரியர் கரோல் லஸ்க்;கி(Harold Laski) என்பவரால் இவர்களில் பெரும்பாலானோரின் கருத்துலகமும் இலட்சியமும் வடிவமைக்கப்பட்டது எனலாம்.
1919 ஆம் ஆண்டு Comintern எனப்படும் மூன்றாம் அகிலம் லெனினால் தோற்றுவிக்கப்பட்டது. அந்த கொமின்ரேனில் பிலிப் குணவர்த்தனவும் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச தரம் வாய்ந்த மாக்சிய வாதிகளாய் இந்த இடதுசாரித் தலைவர்கள் காணப்பட்டனர். பிலிப் குணவர்த்தனவிடம் காணப்பட்ட ரொஸ்கிஸ சிந்தனையின் பெயரால் அவர் கொமின்ரேனில் இருந்து பின்பு விலக்கப்பட்டார். நவீன அரசியற்கட்சி முறைக்குரிய அமைப்பை கொண்ட முதலாவது கட்சியாய் 1935 ஆம் ஆண்டு லங்கா சமசமமாஜ கட்சி எனும் இடதுசாரிக் கட்சி இலங்கையில் தோற்றுவிக்கப்பட்டது. பிலிப் குணவர்த்தன, என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர். டீ சில்;வா, எஸ்.ஏ.விக்கிரமசிங்க போன்றோர் ஆரம்பத்தில் இதன் முக்கிய தலைவர்களாய் காணப்பட்டனர். இக்கட்சியானது ரொஸ்கியால் ஆரம்பிக்கப்பட்ட நான்காம் அகிலத்தில் தன்னை ஓர் அங்கமாக்கிக் கொண்டது. சர்வதேச தரத்திலான மாக்ஸிஸ கோட்பாட்டாளர்களாயும் காலனித்துவத்திற்கு எதிரான விடுதலை வீரர்களாயும் இவர்கள் காணப்பட்டனர். குறிப்பாக இலங்கையில் பிரித்தானிய காலனிய ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடி சிறை சென்ற வீரர்களாயும் இவர்களில் பலர் காணப்பட்டனர்.
இத்தகைய தரம் வாய்ந்த இடது சாரிகளாக இவர்கள் காணப்பட்ட போதிலும் 1931 ஆம் ஆண்டு ஒரு துக்கரமான முன்னுதாரணமும் இனவிவகாரத்தில் இடம்பெற்றதை நாம் பதிவு செய்ய வேண்டியுள்ளது. அதாவது டொனமூர் அரசியல் யாப்பு இலங்கைக்கு பூரண சுயாட்சியை வழங்கவில்லை என கூறி யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் அதன் முதலாவது தேர்தலை பகிஸ்கரிக்கும் நேரடிப் போராட்டத்தில் ஈடுபட்டது. அப்போது ‘யாழ்ப்பாணம் தலைமை தாங்குகிறது’ என அப் பகிஸ்கரிப்பை பராட்டி இலங்கையின் இடதுசாரி இயக்கத்தின் தந்தையான பிலிப் குணவர்த்தன யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசுக்கு தந்தி அனுப்பியிருந்தார். பகிஸ்கரிப்பை தாமும் ஆதரிப்பதாக பல சிங்களத் தலைவர்கள் கூறியிருந்த போதிலும் முன்னணி இடதுசாரித்தலைவரான டாக்கடர் எஸ்.ஏ.விக்கிரமசிங்க உட்பட சிங்களத் தலைவர்கள் வர்க்க வேறுபாடின்றி தேர்தலில் பங்குபற்றினர். அதே வேளை அவர்களால் பராட்டப்பட்ட பகிஸ்கரிப்பாளர்கள் பின்பு வகுப்பு வாதிகளென முத்திரை குத்தப்பட்டமை மிகவும் மோசமான செயலாகும். எவ்வளவுதான் இடதுசாரித் தத்துவம் பேசிய போதிலும் கலாச்சார ரீதியாக அவர்களை அறியாமலே அவர்களிடம் உள்ளொடுங்கியிருந்த இனவாதம் மெல்லத் தலையெடுத்ததை இச்சம்பவம் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. இவர்களின் பிற்கால நடவடிக்கைகள் இவற்றை பின்பு தெளிவாக வெளிப்படுத்தியது.
1937 ஆம் ஆண்டு லங்கா சமசம மாஜக் கட்சியால் வெளியிடப்பட்ட அரசியல் அறிக்கையில் சிங்களம் தமிழ் ஆகிய சுதேச மொழிகளில் பொலிஸ் பதிவுகள் கிராமிய நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற வேண்டு;மென்ற சிறப்பான கோரிக்கை இன வேறுபாடுகளைக் கடந்து முன்வைக்கப்பட்டது. இவ்விடதுசாரிகளிடம் தேச விடுதலை, சோசலிஷம், பரந்த உலகக் கண்ணோட்டம் என்பன காணப்பட்டதால் தெளிவான இனப் பாகுபாட்டிற்கு அவர்கள் போகாது ஒருவகை குழப்பம் அவர்களிடம் காணப்பட்டது. ஆதலால் சிங்கள தமிழ் மக்களிடம் காணப்பட்ட இன பிரச்சினையை சமச மாஜிஸ்ட்டுக்கள் வெறுமனே மொழிப் பிரச்சினையாகப் பார்த்தார்களே தவிர ஓரு தேசிய இனப்பிரச்சினையாக அதனை ஆரம்பத்தில் இருந்தே பார்க்கத் தவறினர்.
எஸ்.ஏ.விக்கிரமசிங்கவிடம் காணப்பட்ட ரொஸ்கி வாதத்திற்கு மாறான மொஸ்க்கோ சார்புப் போக்கைக் கண்டித்து 1940 ஆம் ஆண்டு அவர் சமச மாஜக்கடசியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இவர் பின்பு 1943 ஆம் ஆண்டு மொஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சியை ஆரம்பித்தார். பீற்றர் கெனமன், ஏ.வைத்திலிங்கம் போன்றோர் கூடவே இதில் முன்னணிப் பாத்திரம் வகித்தனர். இக்கட்சி முதல்முறையாக சிங்கள தமிழ் இனப்பிரச்சினையை தேசிய இனக்கண்ணோட்டத்தில் அணுகி இலங்கைத் தமிழர் பிரிந்து சென்று தனியரசு அமைக்கக் கூடிய சுயநிர்ணய உரிமையுடையவர்கள் என்ற தீர்மானத்தை 1944 ஆம் ஆண்டு நிறைவேற்றியது. இனப்பிரச்சினையில் இடது சாரிகளான சமச மாஜஸ்ட்டுக்களுக்கும், இலங்கை கம்யூனிஸ்ட்களுக்கும் இடையில் உள்ள பிரதான வேறுபாடு என்னவெனில் சமச மாஜிஸ்ட்டுக்கள் இனப்பிரச்சனையை ஒரு மொழிப் பிரச்சினையாக மட்டும் பார்த்தனர். ஆனால் கம்யுனிஸ்ட்டுகளோ அதனை ஒரு தேசிய இனப்பிரச்சனையாகப் பார்த்தனர்.
மொழிப்பிரச்சினை விவகாரத்தில் லங்கா சமச மாஜிஸ்ட்டுகளும், கம்யூனிஸ்ட்டுகளும் சம அந்தஸ்த்தை தெளிவாக வற்புறுத்தினர். அதே வேளை சமச மாஜக்கட்சியிலிருந்து பிரிந்து பிலிப் குணவர்த்தன தலைமையில் உருவான விப்பிலவகாரி (புரட்சிகர) லங்கா சமச மாஜக் கட்சி இனப்பிரச்சினை விவகாரத்தில் தறுக்கணித்த இடது சாரிகளாக மாறி தனிச்சிங்கள சட்டத்தை ஆதரிக்கும் நிலைப்பாட்டை பின்பு எடுத்தது.
இனப் பாகுபாடற்ற உன்னதமான இடது சாரி பாரம்பரியத்தை ஆரம்பித்த சிங்கள இடதுசாரிகள் மத்தியில், அதுவும் இலங்கையின் இடதுசாரி இயக்த் தந்தையான பிலிப் குணவர்த்தன தறுக்கணித்த இடதுசாரியாக மாறியதிலிருந்து இலங்கையின் இடதுசாரி வரலாற்றிற்கு புற்று நோய் பிடிக்க ஆரம்பித்தது. இதைத்தொடர்ந்து சிங்கள இடதுசாரிகள் படிப்படியாக இனவாத இடதுசாரிகளாய் இரட்டைப் பரிமாணம் பெறத்தொடங்கினர். அதாவது சோஷலிச முகமும் இனவாத உள்ளடக்கமும் என அது அமையத் தொடங்கியது. இவ்விரு பிரதான இடதுசாரிக் கட்சிகளையும்விட இடையிடையே இடதுசாரிகள் மத்தியில் பிளவுகளும் இணைவுகளும் கூட்டமைப்புகளும் எனப் பல வழிப்போக்குகள் காணப்பட்டன என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
1947 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் மூலம் இடதுசாரிகள் வரலாற்றில் முக்கிய சக்தியாய் எழுச்சி பெற்றிருந்தனர். எதிர்கட்சித்தலமை இடதுசாரிகளின் கைவசமானது. டி.எஸ்.சேனநாயக்கா மிகவும் வெளிப்படையான தெளிவான வலதுசாரித் தலைவராவார். இன அடிப்படையில் சிங்கள மக்களின் தலைவராக டி.எஸ்.சேனநாயக்கா காணப்பட்டார். தமிழ்த் தலைவராக ஜீ.ஜீ.பொன்னம்பலம் காணப்பட்டார். அதேவேளை இனவாத உள்ளடக்கம் மிக்க தலைவராகவும் பாதிச் சோசலிஷ முகம் காட்டும் தலைவராகவும் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா காணப்பட்டார். சோசலிஷ முகாமிற்கு என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர்.டீ சில்வா, பிலிப் குணவர்தன போன்றோர் முன்னணித் தலைவர்களாய்க் காணப்பட்டனர்.
இன அடிப்படையில் 50:50 கோரிய பொன்னம்பலத்தின் மீது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா கோபம் கொண்டு காணப்பட்டார். ஆனால் பதவிக்கு வரக்கூடிய பலத்துடன் இடதுசாரிகள் எதிர்க்; கட்சியாய் அமைந்திருப்பதை மிகவும் ஆபத்தென வலதுசாரிகள் பார்த்தனர். இந்நிலையில் தமிழ்த் தலைவரான பொன்னம்பலத்தின் மீதான கோபத்தைக் கைவிட்டு அவரை அணைத்து இடதுசாரிகளை தோற்கடிக்க வேண்டுமென்று ஜே.ஆர்.ஜெயவர்த்தன பிரதமரான டி.எஸ்.சேனநாயக்காவிற்கு ஆலோசனை வழங்கினார். இதன் பின்பு ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்க் காங்கிரசை டி.எஸ்.சேனநாயக்கா அரசாங்கத்தில் சேர்த்து பொன்னம்பலத்தை அமைச்சராக்கினார். இத்தகைய மந்திர ஆலோசனை பற்றிய விபரங்களை பத்திரிகையாளரான ஜே.எல்.பனான்டோ ஆங்கிலத்தில் எழுதிய Three Prime Ministers of Ceylon என்ற நூலில் விபரமாகக் காணலாம். இடதுசாரிகளை தோற்கடிப்பதற்கு பாதிச் சோஷலிச முகம் கொண்ட பண்டாரநாயக்காவையும் தமிழ் தரப்பில் பொன்னம்பலத்தையும் பயன்படுத்தும் கொள்கையை டி.எஸ்.சேனநாயக்கா வகுத்திருந்தார்.
நடேச ஐயர் தலைமையிலான இலங்கை இந்திய காங்கிரஸ் (பின்பு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என பெயர்மாற்றப்பட்டது). மலையகத்தில் ஆறு நாடாளுமன்ற ஆசனங்களை 1947 ஆம் ஆண்டு தேர்தலில் கைப்பற்றியிருந்தது. இக்கட்சி இடதுசாரிகளோடு கூட்டிணைந்து இருந்ததுடன் ஏனைய இடதுசாரிக்கட்சிகளின் வளர்ச்சிக்கு மலையக தோட்டத்தொழிலாளர் களமாக அமைந்திருந்தனர் என்பதும் கவனிக்கத்தக்கது. இப்பின்னணியில் இனரீதியாக தமிழரின் பலத்தை இழக்கச்செய்யவும் வர்க்கரீதியாக இடதுசாரிகளை வீழ்த்தவும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் பிரஜாவுரிமை, வாக்குரிமை என்பனவற்றைப் பறிப்பதற்கான சட்டங்களை பண்டாரநாயக்காவையும், பொன்னம்பலத்தையும் டி.எஸ்.சேனநாயக்கா அரவணைத்து மந்திரி சபையில் வைத்திருந்த வண்ணமே 1948,1949 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றினார்.
இங்கு டி.எஸ்.சேனநாயக்கா இவ்வாறு பண்டாரநாயக்காவுடனும் பொன்னம்பலத்துடனும் கூட்டுச் சேர்ந்து இடதுசாரிகளை எதிர் கொண்டபோதிலும் இடதுசாரிகளின் கோபம் பொன்னம்பலம் மீது மட்டும் இருந்ததே தவிர பண்டாரநாயக்கா மீது இருக்கவில்லை. மாறாக இடதுசாரிகள் பண்டாரநாயக்காவை ஒரு முற்போக்கு வாதியாக கருதி அவருடன் கூட்டுச்சேரும் கொள்கைகளை பின்பற்றிவந்தனர்.
1955 ஆம் ஆண்டு சிங்களமும் தமிழும் உத்தியோக மொழிகளாக வேண்டுமென்ற மசோதாவை சமச மாஜக் கட்சித் தலைவரான என்.எம்.பெரேரா நாடாளுமன்றத்தில் சமர்பித்து தீவிரமாகவும் திறந்த மனத்துடனும் அதற்காக வாதிட்டார். தமிழ் தலைவர்களைவிடவும் மொழிச்சமத்துவம் கோரி மிகப் புகழ்பெற்ற விவாதங்களை மேற்படி 1955ஆம் மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் லங்கா சமச மாசஜிஸ்ட்டுகளும் இலங்கை கம்னியூஸ்ட்களும் நிகழ்த்தியுள்ளனர். பண்டாரநாயக்காவின் இனவாத நிலைப்பாட்டைக் கண்டித்து தனிப்பட்ட ஒர் உரையாடலின் போது பண்டாரநாயக்காவைப் பார்த்து ‘ஒரு சாண் கயிற்றில் நீ தூங்கித் தற்கொலை செய்தால் அதற்காக அந்த கயிறு தனது பெறுமானத்தை இழந்துவிடும்’ என்று என்.எம்.பெரேரா கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இலங்கையில் மாக்ஸிய இடதுசாரித் தத்துவத்தின் தந்தையான பிலிப் குணவர்த்தன 1956 ஆம் ஆண்டு பண்டார நாயக்காவின் மகாஜன எக்ஸத் பெரமுன என்ற கூட்டணியில் தனது விப்பிலவகாரி சமச மாஜக் கட்சியைக் கூட்டுச் சேர்த்ததோடு தனது இன வாத இடதுசாரிச் சந்தர்ப்ப வாதத்தை தெளிவாக இனம் காட்டினார். அத்துடன் ஏனைய இடது சாரிகளும் பண்டார நாயக்காவுடன் கூட்டணியில் இடம் பெறாது விட்டாலும் அவருடனான போட்டி தவிர்ப்பு ஒப்பந்தத்தின் மூலம் தமது நிறம்மாறலை அறிவிக்கத் தவறவில்லை.
தமிழ் மக்கள் மத்தியில் இருந்து கன்ரி பேரின்பநாயகம் போன்ற பாபியன் சோசலிஸ்ட்டுக்களும் வி.காராளசிங்கம், ஏ.வைத்திலிங்கம், நாகலிங்கம், பி.கந்தையா, என்.சண்முகதாசன் வி.பொன்னம்பலம் போன்ற பெயர் பெற்ற இடதுசாரித் தலைவர்கள் தோன்றினர். இவர்களுள் வி.காராளசிங்கம், என்.சண்முகதாசன் போன்றோர் சர்வதேசத் தரத்திலான மாக்ஸிஸக் கோட்பாட்டாளர்களாயும் விளங்கினர். குறிப்பாக உயர்கல்வி பெற்ற கல்லூரி அதிபர்கள், முன்னணி ஆசிரியர்கள் பலர் இடதுசாரிக் கோட்ப்பாட்டைத் தளுவியவர்களாகக் காணப்பட்டனர். இவர்கள் மிகுந்த சமூகச் செல்வாக்கு மிக்கவராயும் மதிப்புக்கு உரியவர்களாயும் மாணவர்கள் மீது செல்வாக்கு செலுத்தக் கூடியவர்களாயும் காணப்பட்டனர். ஆனால் அடிமனங்களில் பதிந்திருந்த இன ஒடுக்குமுறைகளினதும் இன அணுகுமுறையினதும் தாக்கம் கலாச்சர ரீதியாக அனைவரின் மனதிலும் ஆழப்பதிந்திருந்தது எனக் கூறலாம். எவ்வளவு தான் இடது சாரித்தத்துவம் தமிழ் மக்களின் மத்தியில் காணப்பட்ட போதிலும் 1956 ஆம் ஆண்டு பி.கந்தையா எனும் ஒரே ஒரு கம்யூனிஸ்ட் பருத்தித்துறை தொகுதியில் வெற்றி பெற்றதைத் தவிர வேறு யாரும் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் இருந்து நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றதில்லை.
ஏறக்குறைய பெரும்பான்மையான தமிழ் உத்தியோகத்தர்கள் இடதுசாரித் தொழிற்சங்க உறுப்பினர்களாயும் தொழிற்சங்க வாதிகளாயும் காணப்பட்டனர். தமிழ் மண்ணில் இடதுசாரிகளினது பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் மக்கள் நிறைந்தவையாக, குழப்பங்கள் இன்றி அமைதியாக நிகழ்ந்த வரலாறுகள் போதியளவு உண்டு. ஆயினும் மக்கள் இடதுசாரிக் கட்சிகளை தெளிவாக சிங்கள கட்சிகளாகவே அடையாளம் கண்டு பெரிதும் புறம் தள்ளினர்.இவ்வாறு தமிழ்த் தரப்பிலும் சிங்களத் தரப்பிலும் ஒரு பிளவுபட்ட போக்கு இடதுசாரி கொள்கையிலும் காணப்பட்டது. பின்பு சிங்கள இடது சாரிகள் சிங்கள நிலைப்பாட்டையும் தமிழ் இடது சாரிகள் தமிழ் நிலைப்பாட்டையும் எடுக்கத் தொடங்கியதைக் காணலாம்.
1956 ஆம் ஆண்டு தனிச் சிங்கள சட்டம் நிறைவேற்றப்பட்டதைத்
தொடர்ந்து சிங்கள இடது சாரிகள் இனவாத நிலைப்பாட்டை எடுக்கும் போக்கு வளரத்தொடங்கியது. 1965 ஆம் ஆண்டு டட்லி சேனநாயக்கா தலைமையிலான ஐக்கய தேசிய கட்சியுடன் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட்சி (இலங்கை சமஷ்டிக் கட்சி) பங்கெடுத்து கூட்டரசாங்கம் அமைத்துக் கொண்டது. இக்காலகட்டத்தில் சிங்கள இடதுசாரிகள் தமிழரசுக் கட்சி மீதான தமது கோபத்தை தமிழ் மக்களுக்கு எதிரான ஓர் இனவாதமாக உருத்திரட்டினர்.
1965 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இரு பெரும் சிங்களக் கட்சிகளும் அறுதிப் பெரும்பான்மை எட்டாத நிலையில் ஸ்ரீலங்கா சுகந்திரக் கட்சியுடன் இடது சாரிகளும் தமிழரசுக் கட்சிம் இணைந்த ஒரு கூட்டரசாங்கத்தை உருவாக்க கலாநிதி என்.எம்.பெரேரா முயற்சித்தார். அதற்காக அவர் தமிழரசுக் கட்சியின் உதவியை நாடினார். தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த சூழலில் அப்போது யாழ்ப்பாணத்தில் நின்ற தமிழரசுக் கட்சித் தலைவர் தந்தை செல்வாவுடன் என்.எம்.பெரேரா தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது கூட்டரசாங்கம் அமைப்பது பற்றிய விடயங்களை கொழும்பில் உள்ள தனது நண்பரான திரு.மு.திருச்செல்வத்துடன் பேசுமாறு செல்வநாயகம் கூறினார். ஆனால் திருச்செல்வம் ஐ.தே.க.வுடன் உடன்பாட்டுக்கு வருவதற்கான மனச்சாய்வை கொண்டிருந்த நிலையில் டட்லி செனநாயக்காவுடன் உடன்பாட்டுக்கு வந்தார். இதில் என்.எம்.பெரேராவை திருச்செல்வம் பேசாமலே புறம்தள்ளினார் என்பது உண்மை.
பண்டா – செல்வா ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக கிழித்தெறிந்த சுகந்திரக் கட்சியுடன் மீண்டும் கூட்டுச் சேர முடியாது, நம்ப முடியாது என்ற வாதத்தை திருச்செல்வம் முன்வைத்தார். ஆனால் அதுவரை தமிழ் பேசும் மக்களின் உரிமைகளுக்காக குறிப்பிடக் கூடிய அளவுக்கு குரல் கொடுத்து வந்த இடது சாரிகளை சாட்சியாகவும் பொறுப்பாகவும் வைத்து ஒரு பரிசோதனையை செய்து பார்த்திருக்கக் கூடிய வாய்ப்பொன்று தமிழரசுக் கட்சிக்கு இருந்ததாக இன்னொரு கருத்து சில விமர்சகர்களால் முன்வைக்கப்படுவதும் கவனத்துக்கு உரியது.
தமிழருசுக் கட்சி எப்படி ஒரு கொள்கையின் கீழ் உள்ள ஒரு தனிக்கட்சியோ அவ்வாறே இடது சாரிக் கட்சிகளும் தனிவிசேடமான கொள்கையைக் கொண்ட தனித் தனிக் கட்சியினர் ஆவர். எனவே ஒரு கட்சியான தமிழரசுக் கட்சி ஐ.தே.க.வுடன் கூட்டுச் சேர்ந்ததற்காக இடது சாரிகள் தமது கொள்கையைக் கைவிட்டு இனவாதப் பக்கம் தெளிவாக நிலைப்பாடு எடுத்ததை நியாயப்படுத்த முடியாது.
1968 ஆம் ஆண்டு லங்கா சமச மாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி என்பன ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஸ்ரீலங்கா சுகந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து ஐக்கிய முன்னணி ஒன்றை அமைத்தனா.; இந்த ஐக்கிய முன்னணியானது இலங்கையில் முன்னெப்பொழுதும் வரலாறு கண்டிராத மே தின ஊர்வலத்தை ஒன்றுபட்டு நடாத்தியது. இந்த மே தின ஊர்வலத்தில் சமச மாஜிட்டுக்களும், கம்யூனிஸ்ட்டுகளும் ‘தோசே மசாலவடே அப்பிட்ட எப்பா’ என்று தமிழ் மக்களை இழிவுபடுத்தும் கோசத்தை எழுப்பினர். இதன் உட்பொருள் மிகவும் ஆழமானதும் ஆபத்தானதும் ஆகும். தமிழர்களை இழிவுபடுத்தும் முறையில் தோசை மசாலவடை ஆகிய தமிழர்கள் எமக்கு வேண்டாம் என்று சிங்களவர்கள் தமிழரைப் பிரித்து ஒதுக்குவதற்கான கோஷமாய் இது அமைந்தது. இது ஒரு சுத்தப் பிரிவினை வாதம் ஆகும். இத்தகைய இடதுசாரி சிங்களவர்ளே தமிழர்களைப் பிரிக்கும் பச்சைப் பிரிவினை வாதிகளாகக் காணப்படும் போது தமிழர் பிரிந்து சென்று சுதந்திர அரசு அமைப்பதைத் தவிர வேறு வழி தமிழருக்கு இருக்க முடியாது என்பதை இடதுசாரிகளே இதன் மூலம் உணர்த்திவிட்டனர்.
சீன – சோவியற் உறவு முறிந்ததைத் தொடர்ந்து 1960 களின் ஆரம்பத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவேற்படத் தொடங்கியது. எஸ்.ஏ.விக்கிரசிங்க தலைமையில் மொஸ்க்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சி எனவும்; பிறேமலால் குமாரசிறி தலைமையில் பீக்கிங் சார்பு கம்யூனிஸ்ட் கட்சியெனவும் 1962 ஆம் ஆண்டு அவை இரு கட்சிகளாயின. 1964 ஆம் ஆண்டு உட்கட்சி முரண்பாட்டால் பிறேமலால் குமாரசிறியும் அவருடன் மேலும் சிலரும் பிரிந்து செல்லவே என்.சண்முகதாசன் கட்சியின் தலைவரானார்.
இக்கால கட்டத்தில் மொஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சியில் முன்னணி உறுப்பினராக இருந்த றோகண விஜய வீராவின் தந்தையினது செல்வாக்கின் பெயரால் றோகண விஜயவீர 1961 ஆம் லுபும்பா பல்கலைக்கழக்கத்தில் மருத்துவம் பயில ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டார். ஆனால் அங்கு அவர் சோவியற்றின் நிலைப்பாட்டை எதிர்த்து சீன சார்பு நிலைப்பாட்டை எடுத்ததைத் தொடர்ந்து அவரது கல்வி இடைநிறுத்தப்பட்டது. இலங்கையில் அவர் சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து கொண்ட போதிலும் சண்முகதாசனின் தலைமையை ஏற்க மறுத்து கட்சியில் இருந்து வெளியேறி 1965 ஆம் ஆண்டு தனிச் சிங்களவர்களைக் கொண்ட ஜனதா விமுத்தி பெரமுன (மக்கள் விடுதலை முன்னணி)என்ற அமைப்பை ஆரம்பித்தார்.
இத்துடன் சண்முகதாசனின் கட்சி சிங்கள இளைஞர்கள் இடமிருந்து முற்றிலும் அன்னியப்பட்டு ஏறக்குறைய ஒரு தமிழ்க் கட்சி என்ற நிலைக்கு மாறத் தொடங்கியது. படிப்படியாக அக்கட்சி செயல்பூர்வம் அற்ற நிலைக்கு உள்ளாகி 1980 களின் இறுதியில் அது முற்றிலும் கலைக்கபடும் கட்சியாக மாறியது என்பது வேறுகதை.
1968 ஆம் ஆண்டு சு.க.வுடன் சமச மாஜிஸ்ட்டுக்களும் மொஸ்க்கோ சார்பு கம்யூனிஸ்ட்க்களும் அமைத்துக் கொண்ட ஐக்கிய முன்னணி 1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் முன்னெப்பொழுதும் காணாத மிகப் பெரும் வெற்றியீட்டி 2ஃ3 பெரும் பான்மை பலத்தை நாடாளுமன்றில் பெற்றுக் கொண்டது. ஸ்ரீமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக 1971 ஆம் ஆண்டு றோகண விஜயவீர தலைமையிலான ஜே.வி.பி ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியில் ஈடுபட்டது. இக்கிளர்ச்சியானது இளைஞர் பிரச்சினைகளின் அடிப்படையில், குறிப்பாக கல்வி, வேலைவாய்ப்பு பிரச்சினைகளின் அடிப்படையில் இக்கிளர்ச்சி மையங்கொண்டு எழுந்த போதிலும் தமிழ் இளைஞர்களை இவ்வமைப்பு சிறிதும் உள்வாங்காது விட்டதற்கு ஜே.வி.பி.யின் தமிழின எதிர்ப்பு இனவாதமே பிரதான காரணமாய் அமைந்தது.
இவர்களின் ஐந்து வகுப்புகளில் ஒன்றாக ‘இந்திய விஸ்தரிப்பு வாதம்’ எனும் வகுப்பு காணப்பட்டது. இலங்கை வாழ் தமிழர்கள் இந்தியவிஸ்தரிப்பு வாதத்தின் கருவியெனவும் கைக்கூலிகள் எனவும் முற்றிலும் தமிழின எதிர்ப்பு வாதத்தைத் தூண்டும் வகையில் இந்த வகுப்பு காணப்பட்டது. எனவே சாதாரண இனவாதத்தைக் கடந்து ஓர் இன அழிப்பு இனவாதச் சிந்தனையை கொண்டதாய் இந்த ஜே.வி.பி.யின் புரட்சி அமைந்திருந்தது. தனிச்சிங்கள சட்டத்தின் பின் தோன்றிய மேற்படி இடது சாரிகள் ஆயுதப் பரிமாணத்துடனும் வன்முறைக் கலாச்சாரத்துடனும் பிரபுத்துவ சிந்தனையுடனும் தோன்றிய மிகவும் ஆபத்தான இனவாத எதிர்ப் புரட்சியாளர்களாய் காணப்பட்டனர். ஆதலால் தமிழரும் சிங்களவரும் ஏனைய இனத்தவர்களும் இணைந்த ஒரு சோசலிஷப்புரட்சி இலங்கையில் சாத்தியமற்றுப் போனத்திற்கு 1971 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஜே.வி.யின் எதிர்ப் புரட்சியும் அதன் எழுச்சியும் இறுதிச்சான்றாய் அமைந்தது.
ஜே.வி.பி தோற்கடிக்கப்பட்டது ஒரு புறம் நிகழ்ந்த அதே வேளையில் ஐக்கிய முன்னணி அரசாங்கம் தமிழருக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றது. இதில் லங்கா சமச மாஸிஸ்ட்டுக்களும் மொஸ்க்கோ சார்பு கம்யூனிஸ்ட்க்களுமான இரு பிரிவினர்களது நிலைப்பாடுகளும் மிகவும் முக்கியமானவை. ‘மொழி ஒன்றென்றால் நாடு இரண்டு, மொழி இரண்டென்றால் நாடு ஒன்று’ என்று அமுதவாக்கியம் கூறிய கொல்வின் ஆர்.டி சில்வா தமிழின விரோத அரசியல் யாப்பை உருவாக்கினார். இதற்கு மொஸ்க்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சியும் கூடவே இருந்து இத்தகைய இனவாதத்திற்கு ஆதரவளித்தது. 1972 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இந்த இனவாத அரசியல் யாப்பை தமிழ் மக்கள் முற்றாக நிராகரித்தனர். இவற்றின் மூலம் இலங்கையில் மருந்துக்கும் இடதுசாரிகள் இல்லை என்ற நிலை தெளிவாகப் புலப்பட்டது.
இப்பின்னணியில் மொஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவராக இருந்த தமிழரான வி.பொன்னம்பலம் மேற்படி கட்சியில் இருந்து வெளியேறி ‘செந்தமிழர் ஆயிடுவோம்’ என்ற தமிழினப் பெயரால் ஆன இடதுசாரி இயக்கத்தை ஆரம்பித்தார். அதாவது சிங்களவரும் தமிழரும் இடதுசாரி அரங்கில் இனியும் ஒன்றல்ல என்ற இறுதி மணியோசையாக அது அமைந்தது.
1921 ஆம் ஆண்டு இலங்கைத் தேசியக் காங்கிரஸ் சிங்களம் – தமிழ் என இரண்டாய் உடைந்தது போல, 1956 ஆம் ஆண்டு ஐ.தே.க.வில் இருந்து தமிழ் அமைச்சர்கள், தமிழ் எம்.பி.க்கள், தமிழ் உறுப்பினர்கள் வெளியேறியது போல 1976 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து தமிழ் தலைவர்கள் பிரிந்து செந்தமிழர் ஆயிடுவோம் என்ற தமிழ் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. இதற்கு முதலே சண்முதாசன் தலைமையிலான பீக்கீங் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து ரோகண விஜயவீர அணியினர் 1965 ஆம் ஆண்டு பிரிந்து சென்றதோடு பீக்கீங் கம்யூனிஸ்ட் கட்சி நடைமுறையில் சிங்களம் – தமிழாக பிரிந்து விட்டது. சிங்களத் தரப்பால் ஒதுக்கப்பட்டு; இறுதியில் தமிழ் தரப்பாகவே காணப்பட்ட சண்முகதாசன் தலைமையிலான அக்கட்சியை 1980 களின் பிற்பகுதியில் சண்முகதாசன் கலைத்ததோடு அதன் கதை முடிந்து விட்டது.
எனவே வலது சாரிகளோ அல்லது இடது சாரிகளோ அல்லது தாராண்மை வாதிகளோ எவையாயினும் அவை இறுதியில் தமிழ் – சிங்களமென இரண்டாக பிளவுபட்டுச் சென்றுள்ளதையே வரலாறாய் காணமுடிகிறது. இது தனிமனிதரில் இருந்து கட்சிகள் வரை பொருந்தம்.
ஜே.வி.பி.யின் ஆயுதப் போராட்டம் 1970 களின் ஆரம்பத்தில் தனிச்சிங்களப் பரிமாணத்தில் முற்றிலும் இனவாதக் கண்ணோட்டத்தோடு ஆரம்பமானது. அப்படியே தமிழர்கள் தரப்பில் 1970 களின் மத்தியில் தமிழீழப் போராட்டம் என்ற பிரிந்து செல்லும் கொள்கையோடு; கூடிய ஆயுதப் போராட்டம்; ஆரம்பமானது. ஆரம்பத்தில் இருந்தே தமிழரும் சிங்களவரும் இன பேதமற்ற இடதுசாரி கொள்கையிற்கூட இரு இன வேறுபாடுகளுக்கான கொள்கைப் போக்கையே கொண்டிருந்தமையைக் காணலாம்.
1920 களின் பிற்பகுதியிலும் 1930 களின் முற்பகுதிகளிலும் எழுச்சி பெற்ற யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் சிங்கள இடதுசாரிகளுடன் கைகோத்து ஐக்கிய இலங்கைக்கான தேசிய விடுதலைப் போராட்டத்தை நடாத்த முற்பட்டபோது அந்த பகிஸ்கரிப்பை பாராட்டிய சிங்கள இடதுசாரிகள் அதற்கு வாக்குறுதி அளித்துவிட்டு பின்பு காலைவாரியதோடு தமிழ் சிங்கள இடதுசாரி ஐக்கியம் சாத்தியம் அற்ரது என்ற வரலாறு உதயமாகத் தொடங்கியது. இது பிற்காலத்தில் முழு அளவில் பல்வேறு கட்டங்களுக்கும் பொருத்தமான காரணிகளால் எதிர்நிலை வளர்ச்சியடைந்தது.
சிங்கள வலதுசாரித் தலைவர்கள் மிகவும் தந்திரமாக தமிழ் வலதுசாரித் தலைவர்களை கால தேவைக்கேற்ப பயன்படுத்தி தமிழ்த் தரப்பிலும் சிங்களத் தரப்பிலும் இடதுசாரி இயக்கங்களுக்கு சாவு மணியடித்தனர். கூடவே பண்டாரநாயக்கா என்ற பாதி சோசலிஷ முகம் காட்டிய இனவாதியை தமக்கு சாதகமாக பயன்படுத்த முதலில் தீவிர வலது சாரிகள் தவறவில்லை. அத்துடன்; இலங்கையில் இடதுசாரிகளை தோற்கடிபதில் பண்டாரநாயக்காவும் அவரால் தோற்றுவிக்கப்பட்ட சுதந்திரக் கட்சியுமே இன்றுவரை பெரும் பங்கு வகித்துவருகின்றது.
1970 ஆம் ஆண்டு இடதுசாரிகள் ஸ்ரீமாவுடன் கூட்டரசாங்கம் அமைத்ததோடு 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஓர் ஆசனம்கூட பெறமுடியாது படுதோல்வி அடைந்தனர். எனவே இங்கு நீலத்தூள் கரைந்து போன சிவப்பாக பாரம்பரிய இடதுசாரிகளின் கதை முடிந்தது.
இவ்வாறு 2004-ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சியோடும் பின் அதன் தலைவர் மகிந்த ராஜபக்ஷவோடும் கூட்டுச்சேர்ந்த ஜே.வி.பி.யினர் 2004 பொதுத் தேர்தலில் 39 ஆசனங்களைப் பெற்றிருந்த போதிலும் இன்றைய நிலையில் அவர்கள் இரண்டாகப் பிளக்கப்பட்டும் நீலத்தால் விழுங்கப்பட்டும் உள்ளனர். கடந்த ஓரிரு ஆண்டுகளாக நடந்து வரும் பல்வேறு தேர்தல்களிலும் அவர்களுக்கு ஏற்பட்டுவரும் தோல்விகளைப் பார்க்கும் போது அவர்களின் எதிர்காலம் நீலத்தால் விழுங்கி தோற்கடிக்கப்பட்டுச் செல்வதைக் காணலாம். சு.க. கையில் பாரம்பரிய இடதுசாரிகளுக்கு ஏற்பட்ட அதேகதி ஆயுதம் தாங்கி புரட்சியில் ஈடுபட்ட நவீன இனவாதிகளான ஜே.வி.பி.யினருக்கும் பொருந்துகிறது என்பதை வரலாறு காட்டுகிறது.
‘மகிந்த சிந்தனை’ என்ற தீவிர இனவாத தேர்தல் விஞ்ஞாபனத்தை உருவாக்கிய ஜே.வி.பி.யினர் தாம் பேசிய இனவாதத்தால் ராஜபக்ஷாக்களை வளர்த்துவிட்டு தாம் தோல்வி முகம் காண்கின்றனர். எந்த இனவாதத்தை இந்த நவீன பாசிச இடதுசாரிகள் ஆகிய ஜே.வி.பி.யினர் முன்வைத்து தாம் பதவிக்கு வரலாம் என மனப்பால் குடித்தார்களோ அந்த இனவாதத்தையே ராஜபக்ஷ தனது அரசியல் அட்டவணை ஆக்கியபோது ஜே.வி.பி.யினர் கையறு நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். அவர்களது இனவாதக் கோளாறுக்கு அவர்களே பலியானார்கள். உன்னதமான இடதுசாரித் தத்துவமானது இவ்வாறு சிங்கள இடதுசாரிகளின் கையில் படுகொலை இனவாதத் தத்துவமாக மாறி இலங்கையில் இடதுசாரி அரசியலுக்கு சாவுமணி அடித்துள்ளது.
இலங்கையில் தோன்றிய இடது சாரித் தலைவர்களுள் பெரும்பாலானோர் இலங்கையின் மேல்த்தர மத்தியதர வர்க்கத்தில் இருந்தும் நிலமானிய செல்வந்த குடும்பங்களில் இருந்தும் தோன்றியவர்களாவர். இவர்களிடம் சிந்தனா பூர்வமாக இடதுசாரிச் சோசலிஷத் தத்துவம் உருப்பெற்ற போதிலும் இவர்களது உயர் வர்க்க வாழ்நிலையின் நிமிர்த்தம் இவர்கள் மனதளவில் கலாச்சார ரீதியான தம் வர்க்க நிலையைக் கடக்காதவர்களாய் காணப்பட்டனர். ஆதலால் சோசலிஷம் பேசிய போதிலும் அவர்களது இருப்பு நிலையின் பிரகாரம் ஒரு புறம் அவர்கள் போர்க்குணம் அற்றவர்களாய் காணப்பட்டதுடன் மறுபுறம் கலாச்சாரத் தொடர்ச்சியில் இனவாதம் படிந்தவர்களாகவும் காணப்பட்டனர். ஆதலால் சோஷலிஸம் என்பது இவர்கள் கையில் தோல்வி அடைந்ததோடு அவர்களே இனவாதிகளாகவும் மாறிய துயரம் இலங்கை வரலாற்றில் மறக்கப்பட முடியாத ஒரு அத்தியமாய் உருவெடுத்தது. ஜே.வி.பி.யினர் வர்க்க நிலையில் அடிமட்டத்தில் இருந்து தோன்றிய போதிலும் முற்றிலும் இனவாத கலாச்சாரத்துடன் கூடிய லும்பன் பண்பினராய்க் காணப்பட்டதனால் அவர்கள் மிகவும் ஆபத்தான இனப்படுகொலை இடதுசாரிகள் ஆயினர்.
ஜே.வி.பி.யினரின் கருத்துலகம் நிலமானியக் கலாச்சாரத்திற்குக் கட்டுப்பட்டது. இதனால் பேரினவாதச் சிந்தனையை அவர்களால் இலகுவில் பற்றிப்பிடிக்க முடிகிறது. உள்ளடக்கத்தில் பிற்போக்கானவர்களாயும், செயலில் எதிர்ப் புரட்சியாளர்களாயும் உள்ளனர். இவர்கள் ராஜபக்ஷாவின் சேவர்களாகவே தாம் செயற்படுகிறோம் என்பதை சிறிதும் உணர்ந்ததாய்த் தெரியவில்;லை. யுத்தத்தை ராஜபக்ஷா ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக ஒரேவேளையில் புலிகளுக்கும் ஜே.வி.பி.யினருக்கும் எதிராக வடிவமைத்திருந்தார். புலிகளின் வீழ்ச்சி என்பது ஜே.வி.பி.யின் வீழ்ச்சியும்கூட என்பதைப் புரிந்து கொள்ள இன்னும் சில மாதங்களே ஜே.வி.பி.க்குப் போதுமானது. ஜே.வி.பி.இனவாதத்துள் கரைந்து ராஜபக்ஷாக்களுக்கு அணிகலங்களாகி விடுவார்கள்.
இவர்கள் ஒரேவேளையில் தமக்கும், தமிழ் மக்களுக்கும் தீங்கு
செய்தவர்கள் என்ற வரலாற்றுப் பாத்திரத்திற்கு உடையவர் ஆகிறார்கள்.
வலதுசாரிகளாயினும்சரி, இடதுசாரிகளாயினும்சரி அவர்களை சிங்கள பௌத்த இனவாத கலாச்சாரம் இனவாதத்தின் புதல்வர்களாகவே கருத்தரிக்கின்றது. இன்நிலையில் மேற்படி சோஷலிஸம் பேசிய சிங்கள இடதுசாரிகள் இயல்பாகவே ஆபத்தான இனவாதிகளாகும்போது தமிழீழ மக்கள் அவர்களுடன் இணைய முடியாத துயரம் காணப்படும் நிலையில் பிரிந்து செல்வதைத் தவிர வேறு வழியை வரலாறு அவர்களுக்கு விட்டுவைக்கவில்லை.
இறுதியாக இரண்டு இடதுசாரிகளின் உதாரணங்களை இங்கு நோக்குதல் பொருந்தும். தமிழ் மக்களின் பிரிந்து செல்வதற்கான சுயநிர்ணய உரிமையையும் அதற்கான போராட்டத்தையும் பெரிதும் வரவேற்று, நியாயப்படுத்தி எழுதிய முன்னணி புத்திஜீவியாக தயான் ஜெயதிலக காணப்பட்டார். அவர் ‘சின்ரக்கா’ என்ற புனை பெயரில் லங்கா காடியன் (டுயமெய பரயசனயைn) சஞ்சிகையில் எழுதிய கட்டுரைகள் மிகவும் பிரபலமானவையும் பரபரப்பானவையும் ஆகும். ஆனால் அப்படி எழுதிய தயான் ஜெயதிலகா என்பவர்தான் தமிழின படுகொலையை ஐ.நா.சபையில் முற்றிலும் நியாயப்படுத்திக் கொண்டிருந்த இலங்கைக்கான ஐ.நா.பிரதிநிதியாய் காணப்பட்டார். அவ்வாறே இன்று ஜனாதிபதியின் ஆலோசகராய் காணப்படும் வாசுதேவ நாணயக்கார ஜனாதிபதிக்கான தமது ஆலோசனையில் யாழ்க் குடாநாட்டு மக்களின் பயண நடமாட்டத்திற்கான ‘பாஸ்’ வழங்கும் திட்டத்தை நிறுத்தாது தொடர வேண்டுமென அவருக்கு ஆலோசனை கூறியிருந்தார்.
கீர்த்தி பாலசூரிய தலைமையிலான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் சிறிதும் இனவாதப் பண்பற்றதாய்க் காணப்பட்டது. தமிழ் மக்கள் மீதான இன ஒடுக்குமுறைக்கு எதிராக சிங்கள மக்கள் மத்தியில் மிக வெளிப்படையாகவே இக்கழகம் செயற்பட்டது. தமிழ் மக்களின் பிரிந்து செல்வதற்கான போராட்டத்தை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஆதரித்து அதற்காகச் சிங்கள மக்கள் மத்தியில் செயற்பட்டது. நல்மனமும், தூய்மைவாதக் கண்ணோட்டத்தையும் ;கொண்ட இவர்கள் இலகுவில் சிங்கள மக்களால் நிராகரிக்கப்பட்டார்கள். 1983-ஆம் ஆண்டு கறுப்பு யூலை இனப்படுகொலையின் போது நிகழ்ந்த படுகொலைகளையும், எரிப்பு நடவடிக்கைகளையும் இவர்கள் புகைப்படங்களாக எடுத்திருந்தனர். அவற்றில் 14 புகைப்படங்கள் அடங்கிய ஒரு புகைப்படச் சுருளை இவர்கள் என்னிடம் சேர்ப்பித்திருந்தனர். அப் 14 படங்களில் ஒன்றுதான் நிர்வாண கோலத்தில் ஒரு தமிழ் இளைஞன் சிங்களக் காடையர்களால் கொழும்பில் வைத்து தாக்கப்படும் காட்சியைக் கொண்ட படமாகும். இப்படமே கறுப்பு யூலை இனப்படுகொலையின் குறியீட்டுச் சின்னமாய் இன்றுவரை விளங்குகிறது. இப்படியொரு சிங்கள இடதுசாரி இல்லையேல் இத்தகைய முக்கிய ஆவணம் வரலாற்றிக்குக் கிடைத்திருக்க முடியாது. இவர்கள் உன்னதமான மனிதர்கள்தான். ஆனால் இவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கற்றவர்கள்.
தற்போது மிகவும் மதிக்கத்தக்க இடது சாரியாகக் காணப்படும் விக்கிரமபாகு கருணரட்ண முன் வைத்திருக்கும் தமிழ் பேசும் மக்கள் சார்ந்த சுயநிர்ணய உரிமைக் கோட்பாடும் பெரிதும் வரவேற்கப்படும் ஒன்றாக உள்ளது. ஆனால் சிங்கள மக்கள் எவ்வளவு தூரம் ஆதரவளிப்பர் என்பதும் சிங்கள தரப்பில் இவர் எவ்வளவு தூரம் பலமானவர் என்பதும் ஆழ்ந்த கவனத்திற்கு உரியதாகும். ஒரு புறம் இவர் ஏனைய கடந்த கால சிங்கள இடது சாரித் தலைவர்கள் போல சோரம் போகது விடுவார் என நம்புவோம் ஆனாலும் கொள்கை அளவில் ஒரு கேள்விக்கு நாம் பதில் காணவேண்டும்.
‘ஒடுக்கப்படும் இனத்திற்கு கைகொடுக்க ஒடுக்கும் இனத்தின் மத்தியில் பலமான சக்திகள் இல்லாத இடத்து ஒடுக்கப்படுவோர் எவ்வாறு ஒடுக்கும் இனத்தைச் சேர்ந்த முற்போக்குச் சக்திகளுடன் கைகோர்க்க முடியும்’ என்று லெனின் எழுப்பிய கோட்பாட்டு நியாயத்தை நாம் கருத்தில் எடுத்தாக வேண்டும். எனவே விக்கிரமபாகு கருணரட்ண ஓர் இனவாதியல்லவே ஆனாலும் சிங்கள மக்கள் மத்தியில் பலமற்ற ஒருவரேயாவார்.
லெனின் கூறுவது போல ஒடுக்கப்படும் இனத்திற்கு கைகொடுக்கவல்ல ஒரு பலமான சக்தி ஒடுக்கும் இனத்தின் மத்தியில் இல்லையென்றால் ஒடுக்கப்படும் இனம் தேசிய ஐக்கியத்தில் நம்பிக்கை வைக்க முடியாது. பிரிந்து செல்வதைத் தவிர வேறு வேலைத்திட்டங்களை அவர்களால் முன்வைக்கவும் முடியாது.
முற்றும். -12.01.2010
இந்த் இடது சாரிகளை விட மலையக மக்களுக்கு அதிகம் உதவியவது ஜெஆரே, அவர் தான் பிரஜாவுரிமை பிரச்சினையை தீர்த்தார், தோட்டங்கள் சிங்கள மக்களுக்கு பங்கிடுவதை தடுத்தார்
சிறப்பான கட்டுரை.
படித்த தமிழர்கள் எப்படி ஜாதீய குரூரதன்மையுடன் இன்றும் உள்ளனரோ அதே போலவே படித்த ,வயத்துக் கோளாறால் பாதிக்கப்பட்ட சிங்கள இடதுசாரிகளான மேல்தட்டு வர்க்கத்தினர் சிங்கள ,பௌத்த குறுகிய மனப்போக்குடன் இருக்கிறார்கள்.இலங்கை அந்நிய நாடுகளின் கைக்கூலிகளால் சீரழிக்கப்பட்டு வரும் ஒரு நாடு.பிரித்தானியரின் பிரித்தாளும் சூழ்ச்சி இன்றும் கைவரிசையை காட்டி வருகிறது.சிங்கலபௌத்தம் என்ற கருத்தாக்கத்தை பிரிடிஷ் அரசு ஊக்குவித்ததோ ,தேசவழமை என்ற யாழ்ப்பாண முறைமையையும் ஆதரித்தது.பெரும்பான்மை சிங்களவர்களை ஓரங்கட்டி அரச உத்தியோகங்களை சிறபான்மை தமிழர்களை நிரப்பி முரண்பாடுகளை வளர்த்தது.அவரவர்கள் தங்கள் லாபத்தை தான் பார்த்தார்கள்.
இந்த சுயநல சூதாட்டத்தில் அழிந்தது இலங்கை என்கிற அற்புத தீவே.நமது நாடு என்று யாரும் பார்க்கவில்லை.
இன்றுவரை அவர்களை சார்ந்தே நிற்க வைத்து நம்மை எல்லாம் பகடைக்காய்களாக ஆக்கிவிட்டார்கள்.நீண்ட நோக்கில் பார்க்க விடாமல் ,அவ்வப்போது நிகழும் சம்பவங்களை காட்டி உணமையான் பிரச்சனி திசை திருபபடுகிறது.
அடிப்படை காரணம் சைவமும் தமிழும் , பௌத்தமுமே.பெரும்பானம்யாக அவர்கள் இருப்பதால் பெரும் தவறும் அவர்களிமே இருக்கிறது.
ஏகாதிபத்தியங்களுக்கு சேவை செய்ய இருபக்கமும் உள்ள தலைவர்கள் என்றும் சளைத்தவர்கள் அல்ல.
அன்று வெளிநாடுகளில் பட்டம் பெறப் போய்,நிறவெறிக்கெதிரான வாழுதலுக்காய் இடதுசாரியம் படித்தவர்கள்,இறக்குமதி செய்யப்பட்ட சரக்குடன்,உள்நாட்டில், பேரினவாத வெறியில் வாழும் சுகம் கண்டார்கள்.
இப்போது
அறுவதாண்டுக்கு மேலான இனப்படுகொலையை,உள்நாட்டு மூலிகை மருந்தால் குணப்படுத்தலாம் என்று, புதிய வெத மாத்தையா பிளஸ் இடதுசாரிகள், சீனவெடி கொழுத்திறார்கள்.
எல்லாம் தமிழர் மேல் உள்ள பொறாமையால் வந்த வினை.தோசையும் ,வடையையும் ,இடியப்பத்தையும் நக்கும் கூட்டம் தோசை ,வடை என இழிவு பேசுவது அசிங்கம்.
கண்டிக்கு யாத்திரை போனவரும் ஜெஆர்தான்.
தமிழர்களுக்கு அடித்தால் சிங்களவர்களின் மனம் குளிரும் என்றவரும் ஜெஆர்தான்.
83 கலவரத்தில் மலையாக தோட்டதொழிலாளிகளை அடித்து விரட்டி வன்னிக்கு அனுப்பியவரும் ஜெஆர்தான்.
பிரஜா உரிமையைக்கொடுத்து ,அவர்களின் வாழ்வுரிமையை மறுத்தவரும் ஜெஆர்தான்…
பெரும் தோட்ட முதலாளிகள் எப்படி சார் , சிங்கள பொதுமக்களுக்கு அதை பகிந்தளிப்பார்கள்?
அதை தோட்டத் தமிழ் மக்களுக்கும் அளிக்கவில்லையே?
பிரஜா உரிமையைக்கொடுத்து ,அவர்களின் வாழ்வுரிமையை மறுத்தவரும் ஜெஆர்தான்
அது எப்படி பிரஜா உரிமையைக்கொடுத்து ,அவர்களின் வாழ்வுரிமையை மறுப்பது, தயவு செய்து விளக்கவும்
பெரும் தோட்ட முதலாளிகள் எப்படி சார் , சிங்கள பொதுமக்களுக்கு அதை பகிந்தளிப்பார்கள்?
இதுவும் விளக்கம் இல்லாமல் உள்ளது,நீங்கள் தமிழ்நாட்டில் உள்ளீர்களா,
மலையகத்தமிழர்கள் ஜே ஆரின் பெற்ற்நன்மைகள் இடது சாரிகள் ஆட்சியில் கிடைக்கவில்லை
ருமையான கட்டுரை.கட்டுரையை விட இனியொருவின் கருத்துகள் இது அல்ல என்று சொல்லியிருப்பது மிக சரியாக இருக்கிறது,