3 மாநகர சபைகள், 30 நகரசபைகள், 202 பிரதேச சபைகளை உள்ளடக்கிய 235 உள்ளூராட்சி மன்றங்களுக்கு இன்று வியாழக்கிழமை தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் வெற்றிவாய்ப்பு தத்தமக்கே என்று ஆளும் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
7,362 வாக்களிப்பு நிலையங்களில் இன்று வாக்குப்பதிவு இடம்பெறுகிறது. 9,813,375 வாக்காளர்கள் இன்றைய தேர்தலில் வாக்களிக்கும் தகைமையை பெற்றுள்ளனர்.
இன்று இடம்பெறும் உள்ளூராட்சித் தேர்தலில் தத்தமக்கே வெற்றிவாய்ப்பு இருப்பதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பி.யும் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றன. அதேசமயம் மக்கள் தமது வாக்குரிமையை உரிய முறையில் பயன்படுத்த முன்வர வேண்டுமெனவும் அக்கட்சிகள் வலியுறுத்திக் கேட்டிருக்கின்றன.
நேற்று புதன்கிழமை ஆளும் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பி.யும் கொழும்பில் செய்தியாளர் மாநாடுகளை நடத்தி தேர்தல் தொடர்பாக விளக்கமளித்தன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செய்தியாளர் மாநாடு மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, டாக்டர் ராஜித சேனாரத்ன, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.