இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு ஒத்துழைப்பை மீண்டும் தொடருவது என்று சீனாவும், இந்தியாவும் முடிவு செய்துள்ளன.
சீனா நாட்டின் சான்யா நகரில் நடைபெற்றுவரும் பிரிக் நாடுகளின் வணிக மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற பிரதமர் மன்மோகன் சிங், இன்று சீன அதிபர் ஹூ ஜின்டாவோவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை பிரச்சனை உள்ளிட்ட அனைத்து பாதுகாப்புப் பிரச்சனைகளையும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக்கொள்வது என்றும், இரு நாடுகளுக்கும் இடையே இருந்துவந்த பாதுகாப்பு ஒத்துழைப்பை தொடருவது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
மன்மோகன் சிங் – ஹூ ஜிண்டாவோ இடையிலான 50 நிமிட சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் சீனத்திற்கு சாதகமாகவே உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியதை பரிசீலிப்பதாக சீன அதிபர் ஒப்புக்கொண்டார் என்று இந்த சந்திப்பில் உடனிருந்த தேச பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ் சங்கர் மேனன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இரு தலைவர்களுக்கும் இடையிலான இந்த சந்திப்பு நட்புணர்வுடனும் இணக்கத்துடன் இருந்ததாக கூறிய மேனன், 2011ஆம் ஆண்டை இந்தியா – சீனா பரிவர்த்தனை ஆண்டாக ஹூ ஜிண்டாவோ அறிவித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.