2002 – 18.05.2009
அன்றொரு நாள்
வன்னி நிலம்
ஒளியின் பிரவாகிப்பில்
மூச்சுத் திணறியது.
வானூர்திகள் ஆகாயத்தில்
இரைந்து சென்றன!
வாகனங்கள் புழுதி மண்ணில்
விரைந்து நகர
குழந்தைகள் கைகளை வீசினர்.
கமராக்கள் பளிச் பளிச்என
மின்னிக் களைத்தன.
எல்லோர் முகங்களிலும்
அப்படியொரு புன்சிரிப்பு!
இறுகப் பற்றிய
கைகளின் குலுக்கலில்
வியர்வையின் கசகசப்பு!
நலன் விசாரிப்பும்
அறுசுவை விருந்துமாய்
கனவில் மிதக்கும் கண்களோடு
அப்போது அவர்
சபாரி அணிந்திருந்தார்.!
பின்பொரு நாளில்
விருந்துகள் நின்று போயின.
பரிசுகளும் நலன் விசாரிப்புகளும்
தள்ளிப் போயின!
முகங்களில் திகில்
நிரந்தரமாயிற்று!
இப்போதும் வானூர்திகள்
ஆகாயத்தில் பறந்தன.
வாகன தொடரணிகள்
நிலங்களை பிளந்து
முன்னேற
குழந்தைகள் துவம்சமாயினர்.
குண்டு வீச்சும்
செல்மழையும் மட்டுமே
நெருப்பைக்கக்க
வன்னிப் பெருநிலம்
வெளிச்சத்தில் மிதந்தது.
அன்றைய ஆரவாரங்கள்
அவலங்களின் கூக்குரலாயிற்று.
எந்தத் திசையில் இருந்தும்
எவரும் வரவில்லை!
இந்தத் தடவை
அவர் சபாரியை இழந்து
மரணித்துக் கிடந்ததை
புகைப்படக் கருவிகள்
சொல்லி முடித்தன!
-விஜி(லண்டன்)
அழகிய தமிழில் இதயம் கனக்கும் கவிதை. ஆழமான அரசியல் கருத்தைச் சில வரிகளுள் உள்ளடக்கி இருக்கிறார் கவிஞர்.
கவிதையின் முடிவில் இதயம் கணத்தது. காட்சிகள் களத்துக்கே என்னை இட்டுச் சென்றது. – ஆ.மீ. ஜவகர். nagaijawahar@gmail.com